ஆசியப் போட்டிகளில் 2 தங்கம் வென்ற மற்றும் ஒலிம்பிக்கில் பங்கேற்ற தடகள வீரர் ஹரிசந்த் ஹோஷியர்பூரில் காலமானார், இவருக்கு வயது 69.
ஓட்டப்பந்தய வீரர் ஆன ஹரிசந்த் ஏப்ரல் 1, 1953-ல் பஞ்சாப், ஹோஷியார்பூர், கோரேவா கிராமத்தில் பிறந்தார். நீண்ட தூர ஓட்டத்தில் இதுவரை இந்தியாவிலிருந்து ஆடிய மிகப்பெரிய வீரர் ஹரி சந்த் தான். 1976 மாண்ட்ரீலில் நடந்த சம்மர் ஒலிம்பிக் போட்டிகளில் 10,000 மீ தடகள ஓட்டத்தில் 8வது வீரராக வந்தார். இது அப்போதெல்லாம் இந்தியாவைப் பொறுத்தவரை மிகப்பெரிய சாதனைதான். 28 நிமிடங்கள் 48:72 விநாடிகளில் அவர் இலக்கை அடைந்தார்.
இது தேசிய சாதனையாக 32 ஆண்டுகள் நீடித்தது. அதை சுரேந்திரா சிங் பிற்பாடு உடைத்தார். பிறகு 1980 ஆடவர் மாரத்தானில் பங்கேற்றார் ஹரி சந்த். இதில் 2 மணி நேரம் 22 நிமிடங்கள் 8 விநாடிகளில் இலக்கை வந்தடைந்தார். 10,000 மீ ஓட்டத்தில் 10வது இடம் பிடித்தார்.
இந்திய தடகளத்தில் அதிகம் அறியப்படாத, கொண்டாடப்படாத ஹரி சந்த் 1978 பேங்காக் ஆசியப் போட்டிகளில் 2 தங்கம் வென்றார். 5,000 மற்றும் 10,000 மீ ஓட்டத்தில் இரண்டிலும் ஆசியத் தங்கம் வென்றார் ஹரி சந்த்.
இன்று அந்த கொண்டாடப்படாத லெஜண்ட் ஹரி சந்த் நம்மிடையே இல்லை.
இவரது சாதனைகள் பிற்பாடு அங்கீகரிக்கப்பட்டு இவருக்கு அர்ஜுனா விருது அளிக்கப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.