Home /News /sports /

சர்வதேச ஹாக்கி: மனம் உடைந்த இந்திய அணி- 60 நிமிட பிரமாத ஆட்டம் வீண்- ஷூட் அவுட்டில் நெதர்லாந்திடம் தோல்வி

சர்வதேச ஹாக்கி: மனம் உடைந்த இந்திய அணி- 60 நிமிட பிரமாத ஆட்டம் வீண்- ஷூட் அவுட்டில் நெதர்லாந்திடம் தோல்வி

நெதர்லாந்து கண்ணில் விரலை விட்டு ஆட்டிய இந்திய ஹாக்கி அணி

நெதர்லாந்து கண்ணில் விரலை விட்டு ஆட்டிய இந்திய ஹாக்கி அணி

ராட்டர்டாமில் நேற்று நடைபெற்ற எஃப்.ஐ.எச் ஆடவர் ஹாக்கி புரோ லீக் தொடரில் நெதர்லாந்துக்கு எதிராக இந்திய ஹாக்கி அணி தன் உடல்பொருள் ஆவி அனைத்தையும் கொடுத்து உலகின் டாப் டீமுக்கு எதிராக முழு நேர ஆட்டத்தில் 2-2 என்று சமன் செய்தது. ஆனால் பெனால்டி ஷூட் அவுட்டில் 5 வாய்ப்பில் நெதர்லாந்து 4 முறை இந்திய கோல்வலைக்குள் வெற்றிகரமாக அடிக்க இந்தியா ஒரேயொரு முறைதான் கோல் அடித்தது, இதனால் 4-1 என்று தோல்வி கண்டது.

இதன் மூலம் 15 ஆட்டங்களில் இந்தியா 30 புள்ளிகளுடன் இன்னும் 3வது இடத்தில் தான் இருக்கிறது. நெதர்லாந்து 13 போட்டிகளில் 33 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. ஒலிம்பிக் சாம்பியன் பெல்ஜியம் 14 போட்டிகளில் 31 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது. நேற்றைய ஆட்டத்தில் 60 நிமிடங்களும் உலகின் இரண்டு டாப் அணிகள் சரிக்கு சரியாக மோதின. இதுஒரு பிரமிப்பூட்டும் ஹாக்கி போட்டியாக அமைந்தது.

முதல் 2 கால்மணி நேர ஆட்டத்தில் இந்தியா நெதர்லாந்துக்கு நிகராக பந்தை தன் வசம் வைத்திருந்தது. அவ்வப்போது ஆக்ரோஷமாக ஊடுருவவும் செய்தது, மாறாக நெதர்லாந்து எதிர்த்தாக்குதல் ஆட்டம் ஆடினர். இந்தியாவின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷுக்கும் நெதர்லாந்து கோல் கீப்பர் பிர்மின் பிளாக்கிற்கும் இடையே யார் சிறந்த கோல் கீப்பர் என்பது போல் போட்டி நிலவியது. முதல் 2 கால் மணி நேர ஆட்டத்தில் இருவருமே கோல் முயற்சிகளை முறியடித்தனர்.

இப்படி திறமையைக் காட்டிய போதும் கூட 10வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் டெரிக் டி வில்டர் வலது புறம் பிரமாதமாக தன் ஹாக்கி ஸ்டிக்கை பயன்படுத்தினார், பந்தை தைமன் ரியங்காவுக்கு அடிக்க அவர் இந்திய தடுப்பாட்ட வீரர்களைக் கடந்து முதல் கோலை அடித்தார். உடனேயே இந்தியா எதிர்த்தாக்குதல் நடத்தி நெதர்லாந்து கோட்டைக்குள் புகுந்து 2 பெனால்டி கார்னர்களைப் பெற்றாலும் நெதர்லாந்து தடுப்பரணை மீறி கோல் அடிக்க முடியவில்லை.

பிறகு இந்திய வீரர் அபிஷேக்கிற்கு 2 வாய்ப்புகள் கிடைத்தது, ஆனால் நெதர்லாந்து கோல் கீப்பர் பிளாக் தடுத்து விட்டார். இன்னொரு பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்தியா விரயம் செய்தது. ஆனால் 22வது நிமிடத்தில் வருண் குமார் செய்த மிகப்பிரமாதமான பாஸ் சர்க்கிளில் தில்ப்ரித் சிங்கிடம் வர அவர் பிளாக்கின் தடுப்பு முறைகளையும் தாண்டி இடது மூலையில் கோலுக்குள் செலுத்தினார், 1-1.

அதன் பிறகும் இரு அணிகளும் கடும் போட்டியில் இறங்கின, கிடைத்த பெனால்டி கார்னர்களில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை. 47வது நிமிடத்தில் நெதர்லாந்தின் கோயென் பைஜன் ஒரு கோல் அடித்து முன்னிலை கொடுத்தார்.கடைசியிலும் 2 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன ஆனால் நெதர்லாந்து விரயம் செய்தது.

ஆட்டம் முடிய 23 விநாடிகளே இருந்த நிலையில் இந்திய அணியின் பிரமாதமான தாக்குதல் ஆட்டத்தில் 3 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைக்க 3வது பெனால்டி கார்னரை ஹர்மன்பிரீத் கோலாக மாற்ற ஆட்டம் 2-2 என்று சமன் ஆனது.

ஆனால் ஷூட் அவுட்டில் இந்தியாவின் மனம் உடைந்தது, 60 நிமிட உழைப்பு வீண் ஆனது. நெதர்லாந்து 5 பெனால்டி வாய்ப்புகளில் 4ஐ கோலாக மாற்ற இந்தியாவின் விவேக் சாகர் பிரசாத் மட்டுமே கோல் அடிக்க 4-1 என்று மனம் உடைந்த தோல்வியைச் சந்தித்தது இந்திய அணி. இன்று இந்தியாவும் நெதர்லாந்தும் மீண்டும் ஆடுகிறது.
Published by:Muthukumar
First published:

Tags: Hockey, India, Netherlands

அடுத்த செய்தி