Home /News /sports /

புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி பார்சிலோனா கிளப் அணியிலிருந்து விலக முடிவு

புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி பார்சிலோனா கிளப் அணியிலிருந்து விலக முடிவு

மெஸ்ஸி

மெஸ்ஸி

புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி, 20 ஆண்டுகளாக ஆடி வந்த பார்சிலோனா கிளப் அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    அர்ஜென்டினா நாட்டு கால்பந்து அணியின் கேப்டனான மெஸ்ஸி, பார்சிலோனா கிளப் அணிக்காகவும் விளையாடி வருகிறார். தனது 13 வயதில் பார்சிலோனா கிளப் அணியில் கால்பதித்த மெஸ்ஸி, அந்த அணிக்காக 731 முறை விளையாடி 634 கோல்களை அடித்துள்ளார். பார்சிலோனா அணி 10 முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றியதில் மெஸ்ஸியின் பங்கு முக்கியமானது. தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான தொடரில் பார்சிலோனா அணி, பெய்ரன் முனிச் அணியுடன் மோதி 2-8 என்ற கோல்கணக்கில் படுதோல்வியை சந்தித்தது.

    இந்த தோல்வியை அடுத்து பார்சிலோனா அணியில் இருந்து விலகுவதற்கான அதிரடி முடிவை மெஸ்ஸி எடுத்துள்ளார். இதுகுறித்து பார்சிலோனா அணி நிர்வாகத்திற்கு மெஸ்ஸி கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மெஸ்ஸியின் இந்த முடிவு பார்சிலோனா அணி ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.

    தனது விளையாட்டு வாழ்க்கையை பார்சிலோனா அணியிலேயே முழுவதும் கழித்த மெஸ்ஸிக்கு 2021ம் ஆண்டு வரை ஒப்பந்தம் உள்ளது. ஒப்பந்தத்தின் ஒரே ஒரு ஷரத்தை பயன்படுத்தி தன்னை வெளியேற அனுமதிக்குமாறு மெஸ்ஸி கேட்டுக்கொண்டுள்ளார். 2017ம் ஆண்டில் பார்சிலோனா அணியுடன் ஒப்பந்தத்தை நீட்டித்த மெஸ்ஸி, தனது வாழ்நாள் முழுவதையும் பார்சிலோனா அணியுடன் கழிக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார்.



    உலகில் மிக அதிக ஊதியம் பெறும் வெகு சில கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி, பார்சிலோனா அணிக்காக 34 முறை சாம்பியன் பட்டத்தை வென்று தந்துள்ளார். லா லிகா போட்டிகளில் 444 கோல்களை அடித்த ஓரே வீரர் என்ற பெருமையையும் பெற்றவர். கால்பந்தாட்ட வரலாற்றில் அதிக முறை பாலன்ஸ் டி ஓர் விருதுகளும், FIFA சிறந்த வீரருக்கான விருதுகளையும் பெற்றவர். ஒரு ஆண்டில் 79 கோல்களை அடித்த ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். தொடர்ந்து 10 போட்டிகளில் 40 கோல்களை அடித்த ஒரே வீரர் மெஸ்ஸியாவார். சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட போட்டிகளில் ஒரு கிளப்புக்காக அதிக கோல்களை அடித்தவர்.

    மெஸ்ஸியின் முடிவை எதிர்த்து பார்சிலோனா அணி வழக்கு தொடர்வது குறித்து ஆலோசித்து வரும் நிலையில், மான்செஸ்டர் சிட்டி கிளப் அணிக்கு அவர் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.
    Published by:Rizwan
    First published:

    Tags: Football

    அடுத்த செய்தி