• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Euro 2020: 25 ஆண்டுகளுக்குப் பிறகு நாக்-அவுட் வெற்றி- காலிறுதியில் இங்கிலாந்து- ஜெர்மனி வெளியேற்றம்

Euro 2020: 25 ஆண்டுகளுக்குப் பிறகு நாக்-அவுட் வெற்றி- காலிறுதியில் இங்கிலாந்து- ஜெர்மனி வெளியேற்றம்

மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள்.

மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள்.

வெம்பிலியில் நடைபெற்ற இங்கிலாந்து-ஜேர்மனி அணிகளுக்கு இடையிலான யூரோ கோப்பைக் கால்பந்து நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ஜெர்மனியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.

  • Share this:
    காலிறுதியில் உக்ரைனைச் சந்திக்கிறது இங்கிலாந்து, மற்றொரு ஆட்டத்தில் உக்ரைன் அணி ஸ்வீடனை 2-1 என்று வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

    இங்கிலாந்து அணியில் பிரமாதமாக ஆடிய ரஹீம் ஸ்டெர்லிங் 75வது நிமிடத்தில் பதற்றமான ஒரு தேக்க நிலையை உடைத்து முதல் கோலை அடித்து முன்னிலை அளிக்க, கடும் விமர்சனங்களைச் சந்தித்த ஹாரி கேன் 86வது நிமிடத்தில் 2-வது கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார், ஜெர்மனி பிரமாதமான அணியை வைத்துக் கொண்டு தோற்று வெளியேறியது.

    யூரோ கோப்பைக் கால்பந்தில் 1996ம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்து நாக்-அவுட் சுற்றில் வெற்றி பெறுகிறது. கடைசியாக ஸ்பெயினுக்கு எதிராக பெனால்டி ஷூட் அவுட்டில் வென்ற இங்கிலாந்து, 1996 தொடரில் பிறகு ஜெர்மனியிடம் உதை வாங்கி வெளியேறியது. இதே வெம்பிலியில் ஜெர்மனி பெனால்டி ஷூட் அவுட்டில் 1996-ல் இங்கிலாந்தை வீழ்த்தியது. வெம்பியில் 1966 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இதே வெம்பியில்தான் ஜெர்மனியை வீழ்த்தி இங்கிலாந்து தன் ஒரே உலகக்கோப்பை கால்பந்தை கைப்பற்றி சாம்பியன் ஆனது. இந்த நினைவுகளை இங்கிலாந்து ரசிகர்களிடத்தில் நேற்றைய ஆட்டம் கிளப்பியிருக்கக் கூடும்.

    1990 உலகக்கோப்பை அரையிறுதியிலும் இங்கிலாந்தை ஜெர்மனி பெனால்டி முறையில்தான் வீழ்த்தியது. 2010-ம் ஆண்டு உலகக் கோப்பையிலும் இங்கிலாந்து கோலை ரெஃப்ரி தவறாக மறுக்க ஜெர்மனி வென்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஹாரி கேனை அணியில் தேர்வு செய்வது பற்றி இங்கிலாந்து கோச் சவுத்கேட் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. நேற்றைய ஆட்டத்திலும் இடைவேளைக்கு முன் ஒரேயொரு டச் தான் அவர் ஜெர்மனி கோல் அருகே செய்தார். மற்றபடி எங்கு இருந்தார் என்றே தெரியவில்லை. இந்த ஒரு டச்சும் ஜெர்மனி கோல் கீப்பர் நியூயரைத் தாண்டி கொண்டு செல்கிறேன் பேர்வழி என்று கோல் போஸ்ட்டையே தாண்டி கொண்டு சென்றார்.

    ஸ்டெர்லிங்கின் கோல்கள் இங்கிலாந்துக்கு முன்னேற்றம் அளித்த இந்தத் தொடரில் கோல் கீப்பர் ஜோர்டான் பிக்போர்டின் கோல் தடுப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. நேற்று ஜெர்மனி வீரர் கை ஹாவெட்சின் ஷாட் ஒன்றை கோலாகாமல் தடுத்ததும் இங்கிலாந்து வெற்றியின் பங்களிப்பாகும்.

    சாகா, ஸ்டெர்லிங் இருவரும் இங்கிலாந்துக்கு தொடர்ந்து நம்பிக்கையளிக்கும் வண்ணம் ஆடினர். இடைவேளைக்கு முன்பாக ஸ்டெர்லிங் ஷாட் ஒன்றை ஜெர்மனி கோல் கீப்பர் தடுத்தார், இன்னொரு அருமையான வாய்ப்பை இங்கிலாந்து தவற விட்டது. ஜெர்மனி மறுமுனையில் சில நெருக்கடிகளை கொடுத்தது, ஆனால் தடுப்பு வீரர் ஹாரி மெகுவைர் அற்புதமாக ஆடினார், தடுப்பணை பலமாக இருந்ததால் இடைவேளையின் போது 0-0 என்று சமனிலையே நீடித்தது.

    இரண்டாவது பாதியில் கிரீலிஷை களமிறக்கினார் இங்கிலாந்து கோச். முதல் கோலில் கிரீலிஷின் பங்கு அதிகம். ஸ்டெர்லிங் முதலில் தடுப்பாட்ட வீரர்களுக்குப் போக்குக் காட்டினார். ஜெர்மனி தடுப்பு வீரர் ஆண்டோனியோ ரூடிஜெரைத் தாண்டி பந்தை எடுத்துச் சென்றார். கேனிடம் பந்தை பாஸ் செய்தார். இவர் கிரீலிஷிடம் அடிக்க அவர் லூக் ஷாவிடம் அடித்தார். அதற்குள் ஸ்டெர்லிங் கோல் அடிக்கும் நிலையில் இருக்க ஷா அவரிடம் பந்தை அளித்தார். ஸ்டெர்லிங் வலது காலால் கோலுக்குள் திணித்தார், இங்கிலாந்து 1-0.

    பிறகு 81வது நிமிடத்தில் சமன் செய்ய கிடைத்த அருமையான வாய்ப்பை ஜெர்மனியின் தாமஸ் முல்லர் தவற விட்டார். கோல் கீப்பரும் இவரும் மட்டும்தான் இருந்தனர். ஆனால் இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்போர்டைத் தாண்டி அடிக்காமல் வைடாக அடித்து தவற விட்டார் அனுபவ தாமஸ் முல்லர்.

    86வது நிமிடத்தில் கோல் முன்னிலையில் அதுவரை திணறிய ஹாரி கேன், இந்த முறை கிரீலிஷ் அடித்த பந்தை கோலாக மாற்றினார். இங்கிலாந்து 2-0.

    ஜெர்மனியின் கிம்மிச் மற்றும் கோசென்ஸை மின்னல் வேகமாக ஆட விடாமல் உத்தி வகுத்தது இங்கிலாந்து, இதுதான் ஜெர்மனியை முடக்கியது, கடைசியில் வெளியேறியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: