Euro 2020 Italy vs Turkey : இத்தாலி 3-0 என ஆதிக்க வெற்றி; ஓன் கோலால் சறுக்கிய துருக்கி

10ம் எண் இத்தாலி வீரர் லாரென்சோ இன்சிக்னி அபார ஆட்டம்.

யூரோ 2020 கால்பந்துத் திருவிழா இத்தாலி அணிக்கு அபாரமாகத் தொடங்கியது, பிரிவு ஏ போட்டியில் துருக்கி அணியை இத்தாலி 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மற்ற அணிகளுக்கு ஒரு அழுத்தமான மெசேஜ் அளித்துள்ளது.

  • Share this:
ரோமில் உள்ள ஒலிம்பிகோ ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில் இடைவேளை வரை கோல் இல்லை, இடைவேளைக்குப் பிறகு உத்தியை மாற்றிய இத்தாலி அணி 3 கோல்களை அடித்தது.

53வது நிமிடத்தில் துருக்கி தன் கோலுக்குள்ளேயே அடித்து இத்தாலிக்கு முதல் கோலை தாரை வார்க்க 66வது நிமிடத்தில் சிரோ இம்மொபைலும் 79வது நிமிடத்தில் லாரென்சோ இன்சிக்னியும் கோல்களை அடிக்க இத்தாலி முதல் முறையாக யூரோவில் 3-0 என்று வெற்றி பெற்றது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 2020 யூரோ கால்பந்து தொடர் இந்த ஆண்டு நடைபெறுகிறது. பொதுவாக தொடக்க ஆட்டங்களில் கோல் எண்ணிக்கை அதிகமாக இருக்காது, ஆனால் ரொபர்ட்டோ மன்ச்சீனியின் இத்தாலி அணி உண்மையில் வெளுத்து வாங்கியது. 27 போட்டிகள் தோற்காத நிலையில் வந்த இத்தாலி அணி அந்தச் சாதனையை தக்க வைத்தது.

தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய இத்தாலி அணி 4-3-3 என்ற உத்தியில் தொடங்கியது, அதாவது 4 தடுப்பு வீரர்கள், 3 நடுக்கள வீரர்கள், 3 முன்கள வீரர்கள் என்று களவியூகம் அமைத்தது, துருக்கி மாறாக 4 தடுப்பு வீரர்கள் ஒரேயொரு மத்திய கள வீரர் மற்றும் 4 முன்கள வீரர்கள் என்ற களவியூகம் அமைத்தது.

Also Read: French Open 2021 | டென்னிஸின் மகா ஆட்டம்: 93 நிமிடங்கள் நடந்த ‘டை பிரேக்’ செட்; ரபேல் நடாலை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தார் ஜோகோவிச்

3வது நிமிடத்திலேயே இத்தாலி வீரர் சீரோ இம்மொபைல் 6 அடியிலிருந்து வலது காலால் உதைத்த ஷாட் கோலுக்குள் செல்லவில்லை. 12வது நிமிடத்தில் துருக்கி வீரர் ஹகன் கால்ஹாங்லூ ஃபவுல் செய்ய இத்தாலியின் நிகோலோ பாரெல்லா ஃப்ரீ கிக் எடுத்தார். ஆனால் இது பயனளிக்கவில்லை.

14வது நிமிடத்தில் இத்தாலி வீரர் நிகோலோ பாரெல்லாவின் உதவியுடன் துருக்கி பாக்ஸுக்கு வெளியே இருந்து டொமினிகோ பெரார்டி இடது காலால் அடித்த ஷாட் தடுக்கப்பட்டது.

பிறகு மீண்டும் 18வது நிமிடத்தில் லாரென்சோ இன்சிக்னி என்ற இத்தாலி வீரர் துருக்கி கோல் பாக்சுக்கு வெளியே இடது புறத்திலிருந்து வலதுகாலால் அடித்த ஷாட் கோல் இலக்கை தவற விட்டது. பிறகு 20வது நிமிடத்தில் இத்தாலியின் லியனார்டோ போனுக்கி வலது காலால் கோலுக்கு சற்று அருகிலிருந்து அடித்த ஷாட்டும் இலக்கைத் தவறவிட்டது.

இப்படியே போய்க்கொண்டிருந்த ஆட்டத்தில் 22வது நிமிடத்தில் உண்மையான வாய்ப்பு கிடைத்தது. இத்தாலி வீரர் லாரென்சோ இன்சிகனி ஒரு கிராஸ் செய்ய அதை ஜியார்ஜியோ செல்லினி தலையால் முட்ட பந்து கோல் நோக்கி பறந்தது, ஆனால் இதை அபாரமாக துருக்கி கோல் கீப்பர் உகுர்கான் சகீர் தடுத்து விட்டார். 23வது நிமிடத்தில் இத்தாலியின் கார்னர் வாய்ப்பை இன்சிக்னி அடிக்க லியனார்டோ போனுக்கி தலையால் முட்ட பந்து கோல் இலக்கைத் தவற விட்டது. லாரன்சோ இன்சிக்னி வலது புறம் நெருப்பு போல் ஆடினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாறாக துருக்கி வசம் பந்து மிகக் குறைவாகவே இருந்தது. இடைவேளைக்கு சற்று முன்னர் 45வது நிமிடத்தில் லாரென்சோ இன்சிக்னி அருகிலிருந்து அடித்த ஷாட்டை துருக்கி தடுத்தது, ஆனால் உடனேயே ஜோர்கின்ஹோ பந்தை துருக்கி கோல் அருகே கொண்டு சென்று பந்தை டொமினிகோ பெரார்டியிடம் கொடுக்க அவரது இடது கால் உதை இலக்கை தவற விட்டது.

முதல் கோல் துருக்கி தன் வலைக்குள் தானே அடித்துக் கொண்ட ஓன் கோல்:

இடைவேளைக்குப் பிறகு துருக்கி அணியின் கட்டுக்கோப்பு இழக்கப்பட்டது. துருக்கி தடுப்பணைக்கு நெருக்கடி அதிகரித்ததில் இத்தாலி வீரர் பெரார்டியின் ஷாட் ஒன்று வேகமாக உள்ளே வர துருக்கி வீரர் மெரி டெமிரால் அதனை தன் நெஞ்சால் தடுக்க முயற்சிக்க பந்து கோலுக்குள் சென்றது, செல்ஃப் கோல், அல்லது ஓன் கோல் ஆக இத்தாலி அணிக்கு ஓசியில் முதல் கோல் கிடைத்தது 1-0 என்று முன்னிலை படைத்தது.

முதல் கோல் அதிர்ஷ்டவசமாகக் கிடைக்க 2வது கோல் சடுதியில் விழுந்தது. துருக்கி ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டதில் தளர்வாக ஆட இத்தாலி வீரர் இம்மொபைல் வாய்ப்பைப் பயன்படுத்தி கோலாக மாற்ற இத்தாலி 2-0 என்று முன்னிலை வகித்தது.

பிறகு 79வது நிமிடத்தில் லாரென்சோ இன்சிக்னி பிரமாதமாக 3வது கோலை அடித்தார், துருக்கி கோல் கீப்பரின் கோல் கிக் இத்தாலி வசம் சிக்கியது. இது 3வது கோலாக மாறியது. 39 முறை யூரோ தொடரில் ஆடியுள்ள இத்தாலி அணி முதல் முறையாக 3 கோல்கள் அடித்து வெற்றி பெற்றது. துருக்கி கோல் கீப்பர் உகுர்கன் சாகிர் இல்லையெனில் இன்னும் அதிக கோல்கள் விழுந்திருக்கும் ஆனால் அவர் மிகச்சிறந்த கோல் கீப்பர் என்பதை நிரூபித்தார்.

இத்தாலி அணியில் இன்சிக்னி ஆட்டத்தில் தீப்பொறி பறந்தது, துருக்கி தடுப்பு வீரர்களை இவர் கடைந்து எடுத்த விதம் அபாரம், அதே போல் இத்தாலி வீரர் ஸ்பின்னசோலாவும் தீப்பொறி பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இன்றைய போட்டிகள்: பிரிவு ஏ- மாலை 6:30 மணி- வேல்ஸ் / சுவிட்சர்லாந்து போட்டி

பிரிவு பி: டென்மார்க் - பின்லாந்து இரவு 9.30 மணி.
Published by:Muthukumar
First published: