ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Euro 2020: அந்த 4 நிமிடங்கள்! 2 சேம்சைடு கோல்கள்- போர்ச்சுகல் அதிர்ச்சி; அதிரடி ஜெர்மனி ஆக்ரோஷ வெற்றி

Euro 2020: அந்த 4 நிமிடங்கள்! 2 சேம்சைடு கோல்கள்- போர்ச்சுகல் அதிர்ச்சி; அதிரடி ஜெர்மனி ஆக்ரோஷ வெற்றி

இடது புறம் ஜெர்மனியின் மின்ன்ல வீர்ர் ராபின் கோசன்ஸ்.

இடது புறம் ஜெர்மனியின் மின்ன்ல வீர்ர் ராபின் கோசன்ஸ்.

அன்று பிரான்சுக்கு எதிராக ஒரு சேம்சைடு கோல் மூலம் ஆட்டத்தையே இழந்த ஜெர்மனி நேற்று  4 நிமிட அவகாசத்தில் போர்ச்சுகலின் 2 சேம்சைடு கோல்களினால் பயனடைந்து கடைசியில் 4-2 என்று போர்ச்சுகலை நொறுக்கியது.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :

ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து வரலாற்றில் ஒரு அணி இரண்டு சேம்சைடு கோல்களை தாரை வார்த்தது இதுவே முதல் முறை.

ஆட்டத்தின் 35 மற்றும் 39வது நிமிடங்களில் ஜெர்மனி கொடுத்த நெருக்கடியில் 2 முறை சேம்சைடு கோல்கள் அடித்தது போர்ச்சுகல்.

மியூனிக்கில் நேற்று நடைபெற்ற யூரோ கோப்பை 2021 கால்பந்தின் குரூப் ஆஃப் டெத் எஃப் பிரிவு ஆட்டம் கால்பந்தாட்ட திறமைகளின் உச்சத்தை அடைந்தது. ஜெர்மனி அன்று பிரான்ஸ் அணிக்கு ஓவர் மரியாதை கொடுத்தது என்றே நேற்றைய ஆட்டத்தை வைத்துப் பார்க்கும் போது தெரிந்தது. ஆக்ரோஷமான தீவிரம், நன்கு வகுத்தமைத்த அதிரடி ஆட்டம், அபாரமான கற்பனை வளம், சமயோசிதம் ஆகியவற்றை வெளிப்படுத்திய ஜெர்மனி இப்படியே ஆடினால் நிச்சய யூரோ 2020 சாம்பியன் என்று கோப்பையை போர்ச்சுகலிடமிருந்து கொண்டு சென்று விடும் என்பதில் ஐயமில்லை.

ரொனால்டோவின் 107வது கோல்- போர்ச்சுகல் முன்னிலை:

ஆட்டம் தொடங்கி 15 நிமிடங்களில் ஜெர்மனி, போர்ச்சுகலை ஆட்டிப்படைத்தது ஜெர்மனி வீரர் ராபின் கோசன்ஸை போர்ச்சுகல்லால் ஒன்றும் செய்ய முடியவில்லை, கடும் அச்சுறுத்தலையும் நெருக்கடியையும் போர்ச்சுகல் கோல் அருகே அவர் ஏற்படுத்தினார். முதல் கோலை 5வது நிமிடத்தில் கோசன்ஸ் அடித்தார் ஆனால் ஜெர்மனி வீரர் செர்ஜி நார்பி ஆஃப் சைடு என்பது வீடியோ ரிவியூவில் தெரியவர கோல் ரத்து செய்யப்பட்டது.

ரொனால்டோ 107 கோல்கள். ஜேர்மனிக்கு எதிராக வாழ்நாளின் முதல் கோல்.

ஜெர்மனியின் டோனி குருஸ் அடித்த கார்னரை கிளியர் செய்த கிறிஸ்டியானோ ரொனால்டோ சற்றும் எதிர்பாரா விதமாக தொடுத்த எதிர்த்தாக்குதலில் ஜெர்மனி ஆடிப்போனது. பெர்னார்டோ சில்வா, தியாகோ ஜோட்டா ஆகியோர் பந்தை பிரமாதமாக எடுத்துச் சென்று ஜெர்மனி கோல் பகுதிக்குள் விறுவிறுவென நுழைந்தனர். ரொனால்டோ தன்னை களத்தின் நடுப்பகுதிக்கு ரிலீஸ் செய்து கொண்டார் தியாகோ சில்வா, மிகப்பிரமாதமாக ஒரு ஷாட்டை தூக்கி மற்றொரு போர்ச்சுக்கல் வீரரான ஜோட்டாவுக்குக் கொடுக்க இவர் இடது புறம் பெனால்டி பகுதியில் சீறினார். ஜெர்மனிக்கு தடுப்பு வீரர்கள் அங்கு இல்லை. சில்வா கொடுத்த பாஸை நெஞ்சில் வாங்கி கட்டுப்படுத்திய ஜோட்டா கோல் அடிப்பது போல் பாவ்லா செய்ய கோல் கீப்பரை திசைத் திருப்பி பந்தை பக்கவாட்டில் ரொனால்டோவுக்கு அளித்தார். அதை ரொனால்டோ மிகப்பிரமாதமாக கோலாக மாற்றினார் போர்ச்சுகல் 1-0 என்று முன்னிலை பெற்றது. ஜெர்மனிக்கு எதிராக ரொனால்டோவின் முதல் கோல் இது என்பது கோலை விடவும் ஆச்சரியமானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜெர்மனியின் அதிவேக ராபின் கோசன்ஸ்:

ஜெர்மனிக்காக 9வது ஆட்டத்தையே ஆடுகிறார் ராபின் கோசன்ஸ், இவரது வேகத்தை போர்ச்சுகல்லினால் கட்டுப்படுத்த முடியவில்லை, போர்ச்சுகல்லினால் இவரைக் கையாள முடியவில்லை. அவர் களத்தில் இருந்த 62 நிமிடங்களும் இடது ஓரம் அவரது ராஜ்ஜியமாகவே இருந்தது, அனைத்து இடங்களிலும் கோசன்ஸ் தன் இஷ்டத்துக்கு ஊடுருவினார், தடுக்க முடியவில்லை. மைதானம் நெடுகிலும் கோசன்ஸ் ஆக்ரமிப்பாகவே இருக்கிறது என்று கூறும் அளவுக்கு அவர் ஆட்டம் அமைந்தது.

இடது புறம் ஜெர்மனியின் மின்ன்ல வீர்ர் ராபின் கோசன்ஸ்.

ஜெர்மனி 9வது நிமிடத்தில் சீறிப்பாய்ந்தது, அதன் வீரர் கய் ஹாவெர்ட்ஸ் ஒரு தாழ்வான ஷாட்டை கோல் நோக்கி அடிக்க போர்ச்சுகல் கோல் கீப்பர் பேட்ரீசியோ இடது புறம் பாய்ந்து தடுத்தார். ஒவ்வொரு நொடியிலும் ஜெர்மனியின் தாக்குதல் ஆட்டம் போர்ச்சுகலின் கோலுக்கு அருகே கடும் நெருக்கடிகளைக் கொடுத்தது.

11வது நிமிடத்தில் மீண்டும் ராபின் கோசன்ஸ் இடது விங்கில் தன் இஷ்டத்துக்கு தடுப்பற்று பந்தை எடுத்து வந்து பெனால்டி பகுதிக்குள் ஊடுருவினார், பிறகு டொனி க்ரூஸுக்கு பந்தை அளித்தார், அவரது ஷாட்டை ரூபன் டயஸ் தடுத்தார். அதன் பிறகுதான் எதிர்த்தாக்குதலில் ரொனால்டோ, ஜோட்டா, சில்வா கூட்டணியின் ஆக்ரோஷம் போர்ச்சுகலின் கோலானது.

அதன் பிறகு முழுக்க முழுக்க ஜெர்மனிதான் ஆதிக்கம். வலது புறம் ஜெர்மனி வீரர் ஜொஷுவா கிம்மிக் பந்தை கோலை நோக்கி அடிக்க அதை பேட்ரீசியோ தடுத்தார்.

ஜெர்மனி கொடுத்த அழுத்தத்தில் 4 நிமிடங்களில் 2 சேம்சைடு கோல்கள்- போர்ச்சுகல் அதிர்ச்சி:

இந்த ஆட்டத்தைத் தீர்மானித்த அந்த 4 நிமிடங்கள் ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் வந்தது. மீண்டும் ஜெர்மனி வீரர் ராபின் கோசன்ஸுக்கு இடது ஓரம் ஏகப்பட்ட இடம் கிடைத்தது. இவருக்கு ஒரு அருமையான நீள பாஸ் வந்ததையடுத்து படுவேகம் காட்டி பந்தை எடுத்து சென்றார். கோல் அருகே கொண்டு சென்று ஒரு பலமான உதை உதைத்தார். அங்கு ஜெர்மனி வீரர் ஹாவெட்ஸ்தான் அதை கோலாக்கியிருக்க வேண்டும், ஆனால் போர்ச்சுகல் வீரர் ரூபன் டயஸும் அருகில் இருந்தார். இவர் காலை நீட்ட பந்து பட்டு கோலுக்குள் படுவேகமாக சென்றது, சேம்சைடு கோல் ஆனது ஜெர்மனி போர்ச்சுகல் 1-1. டயஸ் பந்தை அப்படியே விட்டிருக்கலாம், ஏனெனில் ஹாவெட்ஸ் காலில் பந்து படவில்லை. ஆனால் அணியின் கோலை தடுக்கும் முயற்சியில் இவரே சேம்சைடு கோலாக்கியது முதல் அதிர்ச்சி.

ரூபன் டயஸ் அடித்த சேமசைடு கோல். | யூரோ 2020

4 நிமிடங்கள் சென்று இந்த முறை வலது ஓரத்தில் ஜெர்மனி வேகம் காட்டி பந்தை எடுத்து போர்ச்சுகல் கோலை நோக்கிச் சென்றது. 39வது நிமிடத்தில் பெனால்டி பகுதியின் இன்னொரு புறத்திலிருந்து வந்த பந்தை ஜெர்மனியின் தாமஸ் முல்லர் கிராஸ் செய்தார். இதை ஹாவெட்ஸ் அடிக்க அதனை மற்றொரு ஜெர்மனி வீரர் ஜொஷுவா கிம்மிக் கோலை நோக்கி அடிக்க இம்முறை குறுக்கே காலை நீட்டியவர் போர்ச்சுகல் வீரர் குயெரியோ, இன்னொரு சேம்சைடு கோல்,. ஜெர்மனி 2-1 என்று முன்னிலை பெற்றது. ஐரோப்பிய சாம்பியன்ஷிப் ஆட்டத்தில் இரண்டு செல்ஃப் கோல்கள் இதுவே முதல் முறை. இடைவேளையின் போது ஜெர்மனி 2-1 போர்ச்சுகல் என்று இருந்தது.

இடைவேளைக்குப் பிறகு ஜெர்மனி மேலும் 2 கோல்கள்:

இடைவேளைக்குப் பிறகு 6 நிமிடங்களில் அதாவது 51வது நிமிடத்தில் போர்ச்சுகலின் சற்றே கவனமிழந்த தடுப்பாட்டத்தினால் ஜெர்மனி இன்னொரு கோல் அடித்தது, ஆனால் ஜெர்மனியின் ஆக்ரோஷத்துக்குக் குறைவில்லை. ஒரு பிரமாதமான ஷார்ட் பாஸ்களின் தொகுப்பில் பந்து தாமஸ் முல்லரை வந்தடைய அவர் அருமையாக குறுக்காக ஒரு பாஸை கோசன்ஸுக்கு அளிக்க, அதாவது பெனால்டி பகுதியருகே இவை நடக்கிறது. மீண்டும் ராபின் கோசன்ஸுக்கு இடது விங்கில் ஏகப்பட்ட இடம், அவரை யாரும் எதிர்கொள்ள முடியவில்லை. கோலுக்கு 6 அடி முன்னால் இடது புறத்திலிருந்து அவர் அருமையாக ஒரு பாஸை அளித்தார். அதனை ஹாவெட்ஸ் அதை விட அருமையாக கோலாக மாற்ற ஜெர்மனி 3-1.

53வது நிமிடத்தில் போர்ச்சுகல்லுக்கு இடது புறம் ஃப்ரீ கிக் கிடைத்தது. அந்த ஷாட் கோல் போஸ்டுக்கு மேல் சென்றது. 59வது நிமிடத்தில் மீண்டும் ஜெர்மனி கோல் அடித்தது. இந்த முறை ஜெர்மனி வீரர் ஜொஷுவா கிம்மிக் வலது புறத்திலிருந்து மிகப்பிரமாதமாக தூக்கி அடித்து ஒரு கிராஸை ராபின் கோசன்ஸுக்கு செய்ய அங்கு கோல் அருகே எம்பிய கோசன்ஸ் தலையால் முட்டி கோலாக மாற்றினார் 4-1 என்று ஜெர்மனி முன்னிலை. ராபின் கோசன்ஸை போர்ச்சுகல்லினால் ஆட்டம் முழுக்கவுமே ஒன்றும் செய்ய முடியவில்லை. 62வது நிமிடத்தில் அவர் ஆட்டத்திலிருந்து வெளியே அழைக்கப்பட்டார்.

ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் போர்ச்சுகல்லுக்கு ஒரு ஃப்ரீ கிக் கிடைத்தது. ஜோட்டா அதனை கோல் போஸ்ட் அருகே பிளிக் செய்ய முயன்றார். ஆனால் பந்து இன்னொரு முனை கோல் போஸ்ட்டைக் கடந்து சென்ற்து, அங்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ பந்தைக் கட்டுப்படுத்தி மீண்டும் கோல் வாசலுக்கு அனுப்பினார். கோல் கீப்பர் நியூயரைக் கடந்துதான் ரொனால்டோ இந்தப் பாசைச் செய்தார், அதனால் ஜோட்டா எளிதாக கோலாக மாற்றினார் ஜெர்மனி 4 போர்ச்சுகல் 2.

போர்ச்சுகல் அணியும் ஜெர்மனி வீரர்களைத் தடுக்கும் ஒரு விதமான ஆக்ரோஷம் காட்டாமல் ஜெர்மனி பந்தை ப்ரீயாக எடுத்துவர பல நேரங்களில் அனுமதித்தது. ஆனால் ஜெர்மனியின் இந்த ஆட்டம் மற்ற அணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதே உண்மை.

Published by:Muthukumar
First published:

Tags: Euro Cup 2021, Football, Germany