Euro 2020 France vs Switzerland: உலக சாம்பியன் பிரான்ஸ் அதிர்ச்சித் தோல்வி; தடுக்கப்பட்ட மபாப்பேயின் ஷாட்- பெனால்டி ஷூட் அவுட்டில் சுவிட்சர்லாந்து வெற்றி

கொண்டாடும் சுவிஸ் அணி மற்றும் பச்சை உடையில் இருக்கும் சுவிஸ் கோல் கீப்பர் சோமர்.

யூரோ 2020 கால்பந்து இறுதி 16 அணிகள் நாக் அவுட் சுற்றில் இன்று அதிகாலை நடந்த போட்டியில் சுவிட்சர்லாந்து அணியிடம் உலக சாம்பியன்களான பிரான்ஸ் அணி அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறியது. பெனால்டி ஷூட் அவுட்டில் சுவிட்சர்லாந்து 5-4 என்று வெற்றி பெற்றது. 

  • Share this:
யூரோ கோப்பையைக் கைப்பற்றும் அணி என்று பிரான்ஸ் அணி விதந்தோதப்பட்டது. அதற்கேற்றவாறு ரியல் டைம் ஆட்டத்தில் 3 கோல்களை அடித்தது, ஆனால் சுவிட்சர்லாந்து சவாலை சமாளித்து 3 கோல்களை அடிக்க ஆட்டம் 3-3 என்று சமன் ஆனது. ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது அதிலும் வெற்றி தோல்வி தெரியாமல் போக ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் முறைக்குச் சென்றது. இதில் சுவிட்சர்லாந்து 5-4 என்ற கோல்கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

Also Read: Euro 2020 | France vs Switzerland- பிரான்ஸுக்கு அதிர்ச்சியளிக்குமா சுவிட்சர்லாந்து?- சில புள்ளி விவரங்கள்

பெனால்டி ஷூட் அவுட்டுக்குச் சென்றாலே ஆட்டம் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் போகலாம். இதில் பிரான்சின் மின்னல் வீரர் சூப்பர் ஸ்டார் கைலியன் மபாப்பேயின் பெனால்டி ஷாட்டை சுவிட்சர்லாந்து கோல் கீப்பர் சரியாகக் கணித்தார், வலது புறம் டைவ் அடித்து தட்டி விட்டார். இது பிரான்ஸின் யூரோ கனவைத் தகர்த்தது. காலிறுதியில் ஸ்பெயின் அணியைச் சந்திக்கிறது சுவிட்சலாந்து.

மபாப்பெயின் பெனால்டி ஷாட்டைத் தடுத்து அதிர்ச்சியளித்த சுவிஸ் கோல் கீப்பர்.


பிரான்ஸ் சவாலைச் சந்தித்து சரிக்கு சரி ஆடிய சுவிட்சர்லாந்து:

ஆட்டம் தொடங்கி 15-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து முதல் கோலை அடித்து அதிர்ச்சியளித்தது. சுவிஸ் அணியின் ஹாரிஸ் செஃபரோவிச், சக வீரர் ஸ்டீவன் சூபரின் கிராஸை எம்பி தலையால் முட்டி கோலுக்குள் திணித்தார். சுவிஸ் 1-0 என்று முன்னிலை வகித்தது. பிறகு இரண்டாவது பாதியின் தொடக்கத்திலேயே சுவிஸ் அணி 2வது கோலை அடித்திருக்கும். ஆனால் பெனால்டி ஸ்பாட்டிலிருந்து ரிக்கார்டோ ரோட்ரிகெஸ் அடித்த ஷாட்டை பிரான்ஸ் கீப்பர் லோரிஸ் தடுத்து விட்டார்.

இடைவேளைக்குப் பிறகு பேய் மாதிரி ஆடிய பிரான்ஸ் 57 மற்றும் 59வது நிமிடங்களில் கரீம் பென்சீமா மூலம் 2 கோல்களை அடித்து முன்னிலைப் பெற்றது. பிறகு பால் போக்பா 75வது நிமிடத்தில் 25 அடியிலிருந்து ஒரு பிரமாத கோலை அடிக்க பிரான்ஸ் ஆட்டம் முடிய 15 நிமிடங்கள் வரை 3-1 என்று முன்னிலை பெற்றது. ஆனால் மீண்டும் சுவிட்சர்லாந்து எழுச்சி பெறும் என்று பிரான்ஸ் எதிர்பார்க்கவில்லை, மீண்டும் 81வது நிமிடத்தில் ஹாரிஸ் செஃபரோவிச் தலையால் முட்டி 2வது கோலை அடிக்க கடைசியில்  மரியோ காவ்ரனோவிச் ஒரு கோலை அடிக்க 90வது நிமிடத்தில் ஆட்டம் 3-3 என்று சமன் ஆனது, பிரான்ஸ் அணி அதிர்ச்சியடைந்தது.

சுவிட்சர்லாந்து கொண்டாட்டம்


இடைவேளைக்குப் பிறகு உத்வேகமாக ஆடிய பிரான்ஸ் அணி 57வது நிமிடத்தில் கைலியன் மபாப்பேயின் பாஸை வாங்கிய பென்சீமா கோலாக மாற்றினார். பிறகு 59வது நிமிடத்தில் பிரான்சின் கிரேஸ்மேனின் கோல் முயற்சி சுவிஸ் கோல் கீப்பர் சோமரால் தடுக்கப்பட்டு கைமீறிப்போய் பந்து பென்சீமாவிடம் வர தலையால் முட்டி இன்னொரு கோலையும் அடித்த பென்சீமா இந்தத் தொடரில் 4 கோல்களை அடித்துள்ளார்.

இடையில் 55வது நிமிடத்தில்தான் சுவிட்சர்லாந்து பெனால்டி கிக் வாய்ப்பு பெற்றது. அதாவது சுவிஸ் வீரர் சூபரை பிரான்ஸ் வீரர் பவார்ட் கீழே தள்ளினார், இது பெனால்டி பகுதியில் நடந்ததால் வீடியோ ரிவியூவில் சரி பார்க்கப்பட்டு சுவிஸ் அணி பெனால்டி கிக் பெற்றது. ஆனால் எப்போதும் இடி போன்ற ஷாட்டை ஆடும் ரோட்ரிகெஸ் இம்முறை பந்தை பிளேஸ் செய்யப் பார்த்தார், லோரிஸ் அதைப் பிடித்து விட்டார்.

75-வது நிமிடத்தில் பால் போக்பா மிக அருமையாக ஒரு வளைந்த ஷாட்டை கோலுக்குள் திணிக்க பிரான்ஸ் 3-1 என்று முன்னிலை பெற்ற போது இனி இன்னொரு ட்விஸ்ட் சாத்தியமில்லை என்ற நிலைமையே இருந்தது. சுவிஸ் எங்கு மீண்டு வரப்போகிறது என்றுதான் நாம் யோசித்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் 81வது நிமிடத்தில் வலது ஓரத்தில் சுவிட்சர்லாந்து அணிக்கு பந்தை எடுத்து வர இடம் கிடைக்க அங்கிருந்து எடுத்து வந்து அருமையான ஒரு வளைந்த ஷாட்டை கோல் பகுதிக்குள் அடிக்க மீண்டும் சுவிஸ் வீரர் செஃபரோவிச் எம்பி தலையால் முட்டி தனது 2வது கோலையும் சுவிஸ் அணியின் 2வது கோலையும் அடித்தார். அதன் பிறகு 90வது நிமிடத்தில் மரியோ காவ்ரோனோவிச் ஒரு இடி போன்ற கோலை இறக்க ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது, ரியல் டைம் 3-3 சமன்.

கூடுதல் நேரத்தில் கைலியன் மபாப்பே நழுவ விட்ட கோல் வாய்ப்பு:
ஆட்டம் எக்ஸ்ட்ரா 30 நிமிடங்களுக்குச் சென்ற போது இன்னும் இரு அணிகளும் சூடுபிடித்து ஆடின. கூடுதல் நேரத்தின் இரண்டாவது 15 நிமிட ஆட்டத்தில் போக்பாவின் முயற்சியில் கைலியன் மபாப்பேவிடம் வந்த பந்தை ஒரு அடிக்கக் கடினமான கோணத்திலிருந்து கோல் வலையின் பக்கவாட்டுப் பகுதியில் அடித்து கோல் வாய்ப்பைத் தவற விட்டார், இது மட்டும் கோலாகியிருந்தால் நிச்சயம் பிரான்ஸ் வெற்றி பெற்றிருக்கும்.
ஆனால் ஆட்டம் 3-3 என்று சமன் ஆக பெனால்டி ஷூட் அவுட்டில் கைலியன் மபாப்பேயின் ஷாட்டை சுவிஸ் கோல் கீப்பர் சோமர் அசாத்தியமாகக் கணித்து வலது புறம் டைவ் அடித்து வெளியே தட்டி விட 5-4 என்று சுவிஸ் வெற்றி பெற்று காலிறுதியில் ஸ்பெயினைச் சந்திக்கிறது. பிரான்ஸ் பரிதாபமாக வெளியேறியது. அதிர்ச்சித் தோல்விதான்.

இந்தத் தொடரில் பிரான்ஸ் அணி ஆங்காங்கே பிரில்லியன்ஸைக் காட்டியது, அசாத்தியமான சமயோசித  ஆட்டத்தையும் வெளிப்படுத்தியது, சில வேளைகளில் அபூர்வமான ஒத்திசைவுடன் நடன அமைப்பு போல் பந்தைக் கொண்டு சென்றது. ஆனால் இவையெல்லாம் ஒரு நீடித்த அளவுக்கோ, சீரான முறையிலோ இல்லை என்பதால் தான் சுவிஸ் அணி அதிர்ச்சியளித்தது.
கடந்த 7 சந்திப்புகளி பிரான்சை வீழ்த்த முடியாத சுவிட்சர்லாந்து கடைசியில் இந்த அதிர்ச்சியை பிரான்ஸுக்கு அளிக்கக் காத்திருந்தது போலும்.
Published by:Muthukumar
First published: