Euro 2020 England vs Ukraine | அரையிறுதியில் இங்கிலாந்து! உக்ரைனை 4-0 என்று தவிடுபொடியாக்கியது : வெளுத்துக் கட்டிய ஹாரி கேன்

அரையிறுதியில் நுழைந்த மகிச்சியில் இங்கிலாந்து. | யூரோ கோப்பை 2020

யூரோ கோப்பைக் கால்பந்து காலிறுதி ஆட்டத்தில் உக்ரைன் அணியை பந்தாடிய இங்கிலாந்து 4-0 என்ற கோல்கள் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

  • Share this:
    யூரோ கோப்பைக் கால்பந்து காலிறுதி ஆட்டத்தில் உக்ரைன் அணியை பந்தாடிய இங்கிலாந்து 4-0 என்ற கோல்கள் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    அரையிறுதியில் கடினமான டென்மார்க் அணியை இங்கிலாந்து சந்திக்கின்றது. ஆட்டத்தின் 4வது நிமிடத்திலும் 50வது நிமிடத்திலும் இதுவரை கடும் விமர்சனங்களுக்க்கு ஆளான ஹாரி கேன் 2 கோல்களை அடிக்க, ஹாரி மெகுவைர் 46வது நிமிடத்திலும் ஜோர்டான் ஹெண்டர்சன் 63வது நிமிடத்திலும் 2 கோல்களை அடிக்க 4-0 என்ற கோல் கணக்கில் உக்ரைனை பந்தாடியது இங்கிலாந்து.

    1996ம் ஆண்டுக்கு பிறகு ஐரோப்பிய கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது இங்கிலாந்து. அதுவும் ஜெர்மனியை நாக் அவுட் சுற்றில் வீழ்த்தியதையடுத்து எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

    ஆட்டம் தொடங்கிய 4வது நிமிடமே இங்கிலாந்து முன்னிலை பெற்றது, வழக்கம் போல் மின்னல் வீரர் ரஹீம் ஸ்டெர்லிங்கின் ஷாட்டை ஹாரி கேன் அருகிலிருந்து கோலாக மாற்றினார். இங்கிலாந்து 1-0. 2004க்குப் பிறகு இவ்வளவு சீக்கிரத்தில் ஒரு கோல் அடிக்கிறது இங்கிலாந்து.

    இரண்டாவது பாதி தொடங்கியவுடனேயே இங்கிலாந்து தடுப்பாட்ட வீரர் ஹாரி மெகுவைர் தலையால் முட்டி 2வது கோலை அடிக்க, உடனேயே ஹாரி கேன் தன் 2வது கோலை அடிக்க உக்ரைனின் தடுப்பு உடைந்தது. பிறகு ஜோர்டான் ஹெண்டர்சன் இங்கிலாந்துக்காக தன் முதல் கோலை அடிக்க உக்ரைன் பயணம் முடித்து வைக்கப்பட்டது.

    ஹாரி கேன். ஆட்ட நாயகன், இங்கிலாந்து. யூரோ கோப்பை 2020


    முதல் கோல் ஒரு செட்-பீஸ் என்பார்களே அது போன்ற ஒரு திட்டமிட்ட ஆட்டம் ஆனால் இங்கிலாந்தின் இந்தத் தொடரின் மிகச்சிறந்த வீரரான ஸ்டெர்லிங் இடது புறம் பந்தை எடுத்து வந்து வெட்டி உள்ளே புகுந்து பந்தை கோலுக்கு அருகே கொடுக்க ஹாரி கேன் முன்னேறி வந்து கோலாக மாற்ற ரசிகர்கள் இருக்கையிலிருந்து எழுந்து நின்றவர்கள் கடைசி கோல் வரை உட்காரவில்லை.

    உக்ரைனுக்கு கிடைத்த முதல் வாய்ப்பு எப்படியெனில் நடுக்களத்தில் அதன் வீரர் கைல் வாக்கர் பந்தை ரோமன் யாரெம்சுக்கிற்கு அளிக்க அவர் பிரமாத வேகத்துடன் பந்தை எடுத்து சென்று ஒரு டைட் ஆங்கிளில் பந்தை கோல் நோக்கி அடித்தார், ஆனால் அங்கு இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்போர்டு தயாராக இருக்கவே நல்ல சேவ் செய்தார்.

    இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்தின் டெக்லான் ரைஸ், ஜேடன் சாங்க்கோ அடித்த ஷாட்களை உக்ரைன் கோல் கீப்பர் ஜார்ஜி புஷ்சான் தடுத்தார்.

    இடைவேளைக்குப் பிறகு இங்கிலாந்து ஆக்ரோஷம்:

    இடைவேளைக்குப் பிறகு 5 நிமிடங்களிலேயே உக்ரைனுடனான போட்டியை முடித்து விடுமாறு ஆடினர். இரண்டு கோல்கள் இங்கிலாந்து அடிக்க உதவியவர் லூக் ஷா.

    லெஃப்ட் பேக் நிலையிலிருந்து ஃப்ரீ கிக்கை அடித்தார் லூக் ஷா. அதை மெகுவைர் தலையால் அருகிலிருந்து முட்டி கோலாக மாற்றினார். இதற்கு 4 நிமிடங்கள் கழித்து இதே லூக் ஷா அருமையாக ஒரு பாஸை ஹாரி கேனுக்கு அடிக்க அவர் அதை தலையால் முட்டி கோலாக மாற்றினார். ஹாரி கேன் ஹாட்ரிக் கோலை அடித்திருப்பார், ஆனால் அவரது சக்தி வாய்ந்த ஷாட்டை உக்ரைன் கோல் கீப்பர் புஷ்சான் அபாரமாகத் தடுத்தார்.

    ஹாரி கேன் தன் 2 கோல்கள் மூலம் முக்கிய சர்வதேச தொடரில் அதிகமாக 9 கோல்கள் அடித்த இங்கிலாந்து வீரர் ஆலன் ஷியரரை சமன் செய்தார். கேரி லினேகர் 10 கோல்களுடன் முன்னிலை வகிக்கிறார்.

    4வது கோலும் செட்-பீஸ் என்பார்களே அந்த வகையைச் சார்ந்ததுதான், உக்ரைன் இதை சரியாகக் கையாளவில்லை. தடுப்பாட்டம் உடைந்து போக ஹெண்டர்சன் 6 அடியிலிருந்து தன் முதல் கோலை அடிக்க இங்கிலாந்து 4-0 என்று வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
    Published by:Muthukumar
    First published: