Euro 2020 | யூரோ 2020- எரிக்சன் துயரத்திலிருந்து மீண்ட டென்மார்க்: ரஷ்யாவை 4-1 என்று வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது

நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய குஷியில் டென்மார்க் வீரர்கள், ரசிகர்கள்.

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை கோபன்ஹேகனில் நடைபெற்ற குரூப் பி போட்டியில் டென்மார்க் அணி ரஷ்யாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று இறுதி-16 அணிகள் பங்கேற்கும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

  • Share this:
நாக் அவுட் சுற்றில் டென்மார்க் அணி ஜெயண்ட் கில்லர்களான வேல்ஸ் அணியைச் சந்திக்கிறது. அன்று எரிக்சன் மயங்கி விழுந்ததில் பின்லாந்திடம் தோல்வி கண்டு துயருற்ற டென்மார்க் நேற்று எழுச்சி பெற்று அதி ஆக்ரோஷ கால்பந்தாட்டத்தை வெளிப்ப்டுத்தி 4-1 என்ற கோல் கணக்கில் ரஷ்யாவை விழுங்கியது.

இதே பிரிவில் பெல்ஜியம் அணி பின்லாந்தை வீழ்த்தி அனைத்து குரூப் போட்டிகளிலும் வென்று இறுதி16 நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்தது. டென்மார்க் அணி ஏற்கெனவே பின்லாந்திடம் தோல்வி கண்ட நிலையில் நேற்று 4-1 என்று 3 கோல்கள் வித்தியாசத்தில் குறிவைத்து ஆடி ஜெயித்ததால் பின்லாந்தை பின்னுக்குத் தள்ளி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

டென்மார்க் அணியில் மிக்கேல் டாம்ஸ்கார்டு 38வது நிமிடத்தில் அபாரமான வளைந்து சென்ற ஷாட்டில் கோல் வலையைத் தாக்க டென்மார்க் 1-0 என்று முன்னிலை பெற்றது. இடைவேளைக்குப் பிறகு மொத்தம் 4 கோல்கள் விழுந்தன, இதில் டென்மார்க் 3 கோல்கள் அடித்தது, 59வது நிமிடத்தில் ரோமன் சோப்ரினினின் மோசமான பேக் பாஸ் வாய்ப்பை கண நேரத்தில் பாய்ந்து கைப்பற்றி கோலாக மாற்ற டென்மார்க் 2-0 என்று முன்னிலை பெற்றது.

டென்மார்க் வீரர் கிரிஸ்டென்சென் கோல் அடித்த மகிழ்ச்சியில் ஓட்டம்.


70வது நிமிடத்தில் ரஷ்யாவுக்கு ஆறுதலாக கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை அந்த அணியின் ஆர்ட்யோம் சையூபா கோலாக மாற்ற 2-1 என்று சற்றே ஆட்டம் விறுவிறுப்படைந்தது.

Also Read: Euro 2020 | யூரோ கோப்பை: உக்ரைனை வீழ்த்தி ஆஸ்திரியா நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி- காத்திருக்க வேண்டிய நிலையில் உக்ரைன்

ஆனால் டென்மார்க்கின் ஆக்ரோஷமான ஆட்டத்தில் 79வது நிமிடத்தில் ஆண்ட்ரியாஸ் கிரிஸ்டென்சென் இடி போன்ற ஒரு ஷாட்டில் 3வது கோலை அடிக்க 82வது நிமிடத்தில் ஜோக்கிம் மீலே 4வது கோலை அடித்து ரஷ்யாவை வீட்டுக்கு அனுப்பினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த முடிவுகளினால் சுவிட்ஸர்லாந்து, செக்.குடியரசு, இங்கிலாந்து, ஸ்வீடன், பிரான்ஸ் ஆகிய அணிகளும் 16 அணிகள் தகுதி பெறும் இறுதி 16 நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ரஷ்யா செய்த தவறுகளினால் உள்ளே புகுந்து ஆட்டிப்படைத்த டென்மார்க்:

நேற்றைய ஆட்டத்தில் ரஷ்யா முதலில் டென்மார்க்கை தங்களது தடுப்பாட்டத்தினால் வெறுப்பேற்றினர். நடுக்களத்தில் டென்மார்க் வேகத்தை இடையூறு மூலம் கட்டுப்படுத்தினர், கிராஸ்களை அருமையாக தடுத்து தன் வசம் கொண்டு வந்தனர். வலது ஓரம், இடது ஓரத்தில் டென்மார்க் ஆதிக்கம் செலுத்தினாலும் ரஷ்யா கோல் அருகே போடப்பட்டப் பாதுகாப்பு அரணை உடைக்க முடியவில்லை. 17வது நிமிடத்தில் ரஷ்யாவின் அலெக்சாண்டர் கோலோவின் நடுக்களத்தில் டென்மார்க் தளர்வாக ஆடிய பந்தை பெற்று 2 டென்மார்க் வீரர்களுக்கும் போக்குக் காட்டி விறுவிறுவென எடுத்து டென்மார்க் பகுதிக்கு வந்தார். கோல் நோக்கி அடித்தார், ஆனால் தாழ்வாக அடிக்க டென்மார்க் கீப்பர் காஸ்பர் ஷ்மீச்செல் அதனை தடுத்து விட்டார்.

இதைவிட டென்மார்க் நிம்மதிப் பெருமூச்சு விட்ட தருணம் நேராக வந்த பாஸை ரோமன் சோப்னின் சொதப்பியதே, இது கோலாக வேண்டியது, ஆனால் ரஷ்யாவுக்கு அதிர்ஷ்டமில்லை என்பதோடு நேர் பாஸை ரோமன் சோப்னின் சொதப்பினார். இத்தகைய ரஷ்ய ரெய்டுகள் டென்மார்க்கை கொஞ்சம் ஆடிப்போகத்தான் செய்தது. ஆனால்ரஷ்ய வீரர் குத்ரியாஷவ் டென்மார்க் வீரர் டேனியல் வாஸ் என்பவரை தேவையில்லாமல் கொடூரமாக செய்த ஃபவுலினால் அவருக்கு கார்டு காட்டப்பட டென்மார்க் புத்துணர்வு பெறும் தருணமாக அது அமைந்தது. டென்மார்க்கின் பியர் எமில் ஹோய்பெர்க் தொலைவிலிருந்து கோல் நோக்கி அடித்த அபாரமான ஷாட் நூலிழையில் கோலை தவற விட்டதில் ரஷ்யா நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

அதன் பிறகுதான் 38வது நிமிடத்தில் டென்மார்க் வீரர், 20 வயது டாம்ஸ்கார்டு ரஷ்ய தடுப்பணை அருகே ஒரு பாஸைப் பெற்று ரஷ்ய கோல் அருகே ரஷ்ய தடுப்பு வீரர்கள் வேடிக்கைப் பார்க்க கோலுக்குள் திணித்தார். உடனேயே இன்னொரு அடியையும் கொடுத்தார் டாம்ஸ்கார்டு, போல்சனுக்கு ஒரு பாஸை அருமையாக அடிக்க அவரது ஷாட் வைடாகச் சென்றது.

இந்தக் கணம் முதல் டென்மார்க் ஆதிக்கம்தான் தலைதூக்கியது. டிரா செய்தால் போதும் ரஷ்யா இறுதி 16 சுற்றுக்கு முன்னேறி விடும், அதனால் இடைவேளைக்குப் பிறகு தாக்குதலில் இறங்கியது. ஆனால் மீண்டும் 59வது நிமிடத்தில் அசட்டையான ஒரு தருணத்தில் ரஷ்ய வீரர் டேலர் குசியேவ் கண்ணை மூடிக்கொண்டு பின்னால் பந்தை தள்ளி விட்டார், இதனால் ரஷ்ய கோல் கீப்பர் சஃபனோவ் தவறான திசைக்கு நகர முயன்றார், இந்த வாய்ப்பை டென்மார்க்கின் போல்சென் பயன்படுத்தி காலியான கோல் வலையில் திணித்தார்.

அசட்டையான 2 தருணங்களில் டென்மார்க் 2 கோல்களை அடித்து விட்டது. கடைசியில் ரஷ்யாவுக்கு பெனால்டி கிடைத்ததும் 1 கோல் அடிக்க ஆட்டம் இன்னும் விறுவிறுப்பானது, ரஷ்ய கோல் கீப்பர் சபோனோவ் அருமையாக சில தடுப்புகளை மேற்கொண்டார். ஆனால் 20 அடியிலிருந்து டென்மார்க் வீரர் கிரிஸ்டென்சென் அடித்த இடி போன்ற ஷாட்டை ஒன்றும் செய்ய முடியவில்லை 3வது கோல்!! பிறகு டென்மார்க் வீரர் மீலே ரஷ்ய தடுப்பாட்டக்காரர்களுக்கு போக்குக் காட்டி இன்னொரு கோலை அடிக்க ரஷ்ய கதை முடிந்தது, டென்மார்க் எழுச்சி நடைபோட்டது.
Published by:Muthukumar
First published: