Ronaldo | Euro 2020 | தொடக்க சொதப்பலுக்குப் பிறகு ரொனால்டோ அபாரம், வரலாறு படைத்தார்! கடைசி 5 நிமிடங்களில் 3 கோல்கள் அடித்து ஹங்கேரியைக் கவிழ்த்த போர்ச்சுகல்

வரலாறு படைத்த ரொனால்டோ. யூரோ கோப்பை 2021, போர்ச்சுகல் வெற்றி.

புடாபெஸ்ட்டில் நடைபெற்ற யூரோ கோப்பை 2020-ன் குரூப் ஆப் டெத் என்ற எஃப் பிரிவு ஆட்டத்தில் கடைசி 5 நிமிடங்களில் புகுந்து விளையாடிய கிறிஸ்டியானோ ரொனால்டோ அண்ட் கம்பெனியின் போர்ச்சுகல் அணி ஹங்கேரியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

  • Share this:
இந்த ஆட்டத்தில் ஒரு பெனால்டி கிக் மற்றும் ஒரு பீல்ட் கோல் அடித்த உலக ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ அனைத்து கால ஐரோப்பிய சிறந்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். இந்தத் தொடரில் 11 கோல்களை அடித்து ரொனால்டோ யூரோ கோப்பை கால்பந்தில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற வரலாற்றை நிகழ்த்தினார்.

ரொனால்டோவின் சாதனை:

1980ம் ஆண்டுகளின் பிரான்சின் நட்சத்திர வீரர் மைக்கேல் பிளாட்டினி யூரோ கோப்பை கால்பந்தில் 9 கோல்கள் அடித்து நேற்று வரை சாதனையாளராக இருந்தார், ஆனால் நேற்று போர்ச்சுகல் நட்சத்திர கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்களை அடித்து 11 கோல்கள் என்று வரலாறு படைத்தார்.

ஆனால் 3-0 என்ற கடைசி 5 நிமிட கோல்களினால் ஹங்கேரியை நாம் குறைத்து மதிப்பிட முடியாது, போர்ச்சுகல் கோல் அடிக்குமா என்பதைப் பார்த்து விடுவோம் என்ற ரீதியில் அபாரமான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர், போர்ச்சுகலுக்கு சமமாக கோல் வாய்ப்புகளை ஹங்கேரியும் உருவாக்கியது. முதல் கோலை ஹங்கேரிதான் அடித்தது. ஆனால் அதன் வீரர் ஆஃப் சைடு என்று தீர்ப்பளிக்கப்பட்டார், அதாவது பந்து வரும் முன்னரே இவர் போர்ச்சுகல் பகுதிக்குச் சென்றது தவறு அதனால் கோல் இல்லை.

83 நிமிடங்கள் வரை ஸ்பெயின் - ஸ்வீடன் ஆட்டம் போல் வெறும் பாஸ்களின் கதையாகப் போய் 0-0 என்று டிரா ஆகப்போகிறது என்ற நிலைதான் இருந்தது, ஆனால் அதிர்ஷ்டவசமாக 84ம் நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் ரஃபேல் குயெரியோ ஹங்கேரியின் சுவர் போன்ற தடுப்பணையை உடைத்து முதல் கோலை அடித்தார். போர்ச்சுகல் 1-0 என்று ஆனது.

ஹங்கேரி கோல் கீப்பர் குலாசிக்குப் போக்குக் காட்டும் ரொனால்டோ


ரொனால்டோ கோட்டை விட்டதும் பிறகு வரலாறு படைத்ததும்

கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது ரசிகர்களுக்கு அதுவரை வெறுப்பாகத்தான் இருந்திருக்கும் காரணம் முதல் பாதியில் இரண்டு பொன்னான கோல் வாய்ப்புகளை ரொனால்டோ தவற விட்டார், ஒன்று ஹங்கேரி கோலுக்கு வெகு அருகே தலையால் முட்டி கோல் போடும் வாய்ப்பை வெளியே அடித்து கோட்டை விட்டார், இன்னொருமுறை அருமையான கிராஸை கோலுக்கு வெகு அருகே தட்டி விட்டால் கோல் என்ற நிலையிலிருந்து தூக்கி அடிக்கிறேன் பேர்வழி என்று வெளியே அடித்து நழுவ வைட்டார், இது ரசிகர்களுக்கு திகைப்பூட்டிய, வெறுப்பேற்றிய தருணமாக அமைந்தது. கடைசியில் 86வது நிமிடத்தில் ஹங்கேரி வீரர் ஃபவுல் செய்ய கிடைத்த பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ கோல் கீப்பரை திசைத் திருப்பி கோலாக மாற்ற அது அவரது வரலாறு படைத்த 10வது கோல் ஆனது. பிறகு 91வது நிமிடம், அதாவது ஸ்டாப்பேஜ் நேரத்தில் தனது கால் வித்தையைக் காட்டி ஹங்கேரி கோல் கீப்பர் பீட்டர் குலாச்சியிற்கு டான்ஸ் காட்டி 11வது கோலை அடித்தார், அதாவது இவரது 2வது கோல், போர்ச்சுகலின் 3வது கோல்.

Also Read: உலக டெஸ்ட் சாம்பின்யன்ஷிப் : இந்திய அணி அறிவிப்பு

இன்னும் 3 கோல்கள் அடித்தால் ஈரானின் ஆல் டைம் ரெக்கார்ட் வைத்திருக்கும் அலி டேயின் சாதனையை ரொனால்டோ சமன் செய்வார்.

போர்ச்சுகல் மேனேஜர் செய்த மாற்றத்தால் பிறந்த உத்வேகம்: ஹங்கேரி கோல் கீப்பர், தடுப்பணையின் சவால்:

இடைவேளை வரை 0-0 என்று ஹங்கேரி ஆதிக்கம் செலுத்தியது, அதாவது பாஸ்களிலும் பந்தை அதிகம் தங்களிடம் வைத்திருந்ததிலும் போர்ச்சுகல் ஆதிக்கம் செலுத்தினாலும் அவர்களை பினிஷ் செய்ய விடாமல் தடுத்தது ஹங்கேரி. இடைவேளைக்குப் பிறகு போர்ச்சுகல் பயிற்சியாளர் சாண்டோஸ் சில மாற்றங்களை செய்தார். பெர்னார்டோ சில்வாவுக்குப் பதிலாக ரஃபா சில்வாவை இறக்கினார். இவர் போர்ச்சுகலின் அனைத்து 3 கோல்களிலும் அசிஸ்ட் செய்தார். இவர் வந்த பிறகுதான் ரொனால்டோவை மேலும் இடது புறம் நகர்த்தி குயெரியோ இடது பின்புறத்திலிருந்து இன்னும் முன்னேற வழியை ஏற்படுத்தினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போர்ச்சுகலின் வெறுப்பு பல முறை வெளிப்பட்டது, இதில் ரூபன் டயஸ் மோதல் போக்கைக் கடைப்பிடித்து மஞ்சள் அட்டை வாங்கினார். சில்வா, புரூனோ பெர்னாண்டஸ், ஜோட்டா, மற்றும் ரொனால்டோ என்று அனுபவமும் தாக்குதல் திறனும் கொண்ட வீரர்கள் தான் முன்களத்தில் போர்ச்சுகல் அணியில் இருந்தனர். ஆனாலும் ஹங்கேரி கூட்டமாக தடுப்பணை போட்டதால் இவர்களால் ஊடுருவ முடியவில்லை ஊடுருவினாலும் கோல் அடிக்க முடியவில்லை. ஹங்கேரி கோல் கீப்பர் பீட்டர் குலாசி தன் பக்கம் வந்ததையெல்லாம் தடுத்துக் கொண்டிருந்தார். பல தருணங்களில் பந்தை தங்கள் வசமிழந்து ஹங்கேரியிடம் கொடுத்தனர், இல்லையெனில் ஹங்கேரி இவர்களது கால்களிலிருந்து பந்தை பிடுங்கிச் சென்றனர். ஜோட்டாவின் இரண்டு ஷாட்களை தடுத்தார் பீட்டர் குலாசி, அதே போல் ரொனால்டோ இடையில் பெர்னாண்டஸின் அருமையான பாஸை பாயிண்ட் பிளாங்க் என்பார்களே அந்த நிலையில் கோல் வாய்ப்பை தவற விட்டார், பெபேயின் தலை முட்டல் வாய்ப்பை குலாசி மீண்டும் தடுத்தார்.

இடைவேளைக்குப் பிறகு பெர்னாண்டஸின் கோல் முயற்சியை ஹங்கேரி கோல் கீப்பர் பீட்டர் குலாசி தடுத்தார். ஹங்கேரிக்கு கோல் அடிக்கும் உண்மையான வாய்ப்பு முதல் பாதியின் 36வது நிமிடத்தில் கிடைத்தது. கேப்டன் ஆடம் சலாய் ஃப்ரீ கிக் ஒன்றை நேராக போர்ச்சுகல் கோல் கீப்பர் ருய் பாட்ரிசியோ கைக்கு அடித்தார்.

ஹங்கேரி கோல் மறுக்கப்பட்ட அதிர்ச்சி!

ஹங்கேரியின் பதிலி வீரர் சபால்க்ஸ் ஸ்கான் என்பவர் இறங்கி போர்ச்சுகலுக்கு ஆட்டம் காட்டினார், இவர்தான் ஹங்கேரிக்கு முதல் கோலை அடித்தார், பிரமாதமான ஷாட் ஆனால் ஆஃப் சைடு என்று நடுவர் தீர்ப்பளிக்க ஹங்கேரி ரசிகர் ஒருவர் ஆத்திரத்துடன் மைதானத்துக்குள் பிரவேசித்தார்.



எப்போதும் இப்படி நடக்கும், ஏகப்பட்ட வாய்ப்புகளை சிறந்த அணி கோட்டை விடும்போது எதிரணி ஒரு கோலை அடிப்பது வழக்கம்தான், இந்த முறை போர்ச்சுகலுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்க ஆஃப் சைடு ஆனது.

கடைசியில் ரஃபா சில்வாவின் கிராஸை குயெரியோ கோலை நோக்கி அடிக்க இடையில் ஹங்கேரி வீரர் ஆர்பன் காலில் பட்டு கோல் ஆனது. குலாசிக்கு தடுக்க வாய்ப்பில்லாமல் போனது. போர்ச்சுகல் 1-0 . 2 நிமிடங்கள் சென்று ரபா சில்வா பந்தை வேகமாகக் கொண்டு வந்து ஹங்கேரி பாக்சுக்குள் நுழைய அங்கு ஹங்கேரி வீரர் ஆர்பன் அவரை கீழே தள்ளினார், பெனால்ட்டி பகுதி என்பதால் பெனால்டி கிக் கொடுக்கப்பட்டது, அதை ரொனால்டோ முறையாக கோலாக மாற்றி வரலாறு படைத்தார். கடைசீயில் 91வது நிமிடத்தில் ஒரு பிரமாதமான பாஸ் தருணத்தில் பந்தை லேசாக மற்றொரு வீரரிடம் தட்டி விட்ட ரொனால்டோ கோல் அடிக்க வாகாக கோல் அருகே ஓடிச்செல்ல அவரிடம் அளிக்கப்பட்ட பந்தை மீண்டும் கோலாக மாற்றினார், போர்ச்சுகல் 3-0 என வெற்றி பெற்றது.
Published by:Muthukumar
First published: