Euro 2020 England vs Denmark| 55 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு! டென்மார்க்கை வீழ்த்தி இறுதியில் நுழைந்த இங்கிலாந்து

வெற்றி கோலை அடித்த ஹாரி கேன். யூரோ கோப்பை 2020 அரையிறுதி.

வெம்பிலியில் இந்திய நேரப்படி அதிகாலை நடந்த யூரோ கோப்பை கால்பந்து இரண்டாம் அரையிறுதியில் இங்கிலாந்து வீரர் ஹாரி கேனின் எக்ஸ்ட்ரா டைம்  கோல் மூலம் டென்மார்க்கை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து.

  • Share this:
2-1 என்ற கோல் கணக்கில் பதற்றமான போட்டியில் வென்ற இங்கிலாந்து 1966-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பிறகு முதல் முறையாக பெரிய தொடர் ஒன்றில் இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது, மேலும் யூரோ கால்பந்து தொடரில் முதல் முறையாக இறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து.

ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் டென்மார்க்கின் அபாய வீரர் மிக்கெல் டாம்ஸ்கார்ட் திகைப்பூட்டும் ஃப்ரீகிக்கில் 25 அடியிலிருந்து நேராக கோலுக்குள் திணிக்க டென்மார்க் முதலில் 1-0 என்று முன்னிலை பெற்றது. ஆனால் 39வது நிமிடத்தில் இங்கிலாந்து கொடுத்த நெருக்கடியில் டென்மார்க் வீரர் சிமன் கியா தன் கோலுக்குள்ளேயே சேம்சைடு கோல் அடிக்க இங்கிலாந்து அதிர்ஷ்டத்தில் சமன் செய்தது.

பிறகு ஆட்டம் 1-1 என்ற நிலையில் கூடுதல் 30 நிமிடம் ஒதுக்கப்பட்டதில் 104வது நிமிடத்தில் பெனால்டி கிக்கை டென்மார்க் கோல் கீப்பர் தடுக்க திரும்பி வந்த பந்தை ஹாரி கேன் கோலாக மாற்ற 2-1 என்று இங்கிலாந்து வென்று 55 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய கால்பந்து தொடரின் இறுதிக்குள் கால்வைத்துள்ளது.

இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன், டென்மார்க் வீரர் சிமன் கியாவுக்கு தன் கையெழுத்திட்ட ஜெர்சியை ஆட்டம் தொடங்கும் முன் வழங்கினார். அதில் முதல் போட்டியில் மயங்கி விழுந்த கிறிஸ்டியன் எரிக்சன் பெயரும் 10ம் எண்ணும் பொறிக்கப்பட்டிருந்தது. இதனால்தானோ என்னவோ இங்கிலாந்துக்கு ஒரு கோலை போட்டுக் கொடுத்து விட்டார் போலும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல் பாதியில் இரு அணிகளும் சம அளவில் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. 9ம் நிமிடத்தில் டென்மார்க் வீரர் டாம்ஸ்கார்டு வலது புறத்திலிருந்து பெற்ற பந்தை அடிக்க அதனை இங்கிலாந்தின் வாக்கர் திசைத்திருப்பி விட்டார். 12வது நிமிடத்தில் வலது புறத்திலிருந்து இங்கிலாந்து ஒரு மூவை மேற்கொள்ள ஹாரி கேன், ஸ்டெர்லிங்குக்கு அடித்த பந்தை அவர் பலவீனமாக அடிக்க டென்மார்க் கோல் கீப்பர் ஷ்மீச்செல் பிடித்து விட்டார். 14ம் நிமிடத்தில் மீண்டும் ஹாரி கேன் ஆர்வக்கோளாறு ஷாட் ஒன்றை கோல் நோக்கி மைதான நடுவிலிருந்து அடித்தார், அது வெளியே சென்றது.



ஆட்டம் அதன் 15-25 நிமிடங்களில் டென்மார்க் கையில் இருந்தது. இங்கிலாந்தின் மெகுவைர், டோல்பர்க்கிடமிருந்து வந்த பந்தை சரியாக கிளியர் செய்யாமல் சொதப்ப டாம்ஸ்கார்டிடம் வந்த பந்தை கோல் நோக்கி திருப்பினார் ஆனால் அது வெளியே சென்றது. இங்கிலாந்து தப்பியது.

Also Read: Roger Federer: Wimbledon 2021- ரோஜர் பெடரர் அதிர்ச்சித் தோல்வி: அரையிறுதியில் போலந்து வீரர் ஹர்காக்ஸ்

டென்மார்க் வீரர் டாம்ஸ்கார்டின் திகைப்பூட்டும் ஃப்ரீ கிக் கோல்:

ஆட்டத்தின் 27வது நிமிடத்திலிருந்தே இந்த கோலுக்கான பில்ட் அப் நடந்து கொண்டிருந்தது. இங்கிலாந்து வீரர் மவுண்ட் டென்மார்க் வீரர் டோல்பர்க்கை கீழே தள்ளி விட கிடைத்தது ப்ரீ கிக், இந்த ஷாட்டின் போது கிறிஸ்டென்சனை கீழே தள்ளி விட்டார் ஷா, இதனையடுத்து இன்னொரு ஃப்ரீ கிக் 25 அடியிலிருந்து அளிக்கப்பட்டது. இந்த ஃப்ரீகிக்கை எடுத்த டென்மார்க் வீரர் டாம்ஸ்கார்ட் அற்புதமாக நேராக கோல் வலைக்குள் அனுப்பினார், இங்கிலாந்து ரசிகர்கள் திகைத்தனர்.

டாம்ஸ்கார்டு.


இந்த யூரோ கோப்பைக் கால்பந்தில் முதல் ஃப்ரீ கிக் கோலாக இது அமைந்தது, அதே போல் இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்போர்டும் முதல் கோலை விட்டார். அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை டென்மார்க் 1-0 என்று முன்னிலை பெற்றது. மிக அருமையான கோல் இது.

ஆனால் இங்கிலாந்து இதிலிருந்து மீண்டு 37வது நிமிடத்தில் கோல் முயற்சி மேற்கொண்டது ஆனால் டென்மார்க் கோல் கீப்பர் ஷ்மீச்செல் அபாரமாகத் தடுத்தார். வலது புறத்திலிருந்து ஹாரி கேன், ஸ்டெர்லிங்குக்குப் பந்தை அனுப்ப கோலுக்கு சற்று அருகிலிருது ஸ்ட்ரெலிங் மேற்கொண்ட ஷாட்டை ஷ்மீச்செல் பிரமாதமாகத் தடுத்தார்..

டென்மார்க்கின் சேம்சைடு கோலால் இங்கிலாந்து சமன்:

டென்மார்க் கோல் கீப்பர் 37வது நிமிடத்தில் செய்த அற்புத தடுப்புக்கு 2 நிமிடங்கள் சென்று இங்கிலாந்து மீண்டும் அட்டாக்கில் இறங்க ஹாரி கேன் பந்தை சாக்காவுக்கு அனுப்ப, அவர் வலது ஓரத்திலிருந்து கோல் அருகேயிருந்த ஸ்ட்ரெலிங்குக்கு பாஸ் செய்ய ஸ்டெர்லிங் அதை கோலுக்கு மிக அருகே டச் செய்து கோலுக்குள் அனுப்பும் முயற்சியில் டென்மார்க் வீரர் சிமன் கியா சறுக்கியபடி குறுக்கே வந்து தடுக்க நினைக்க பந்தின் மீது கியாவின் தாக்கம் அதிகமாக விழ சேம்சைடு கோல் ஆனது இங்கிலாந்து 1-1 என்று சமன் செய்தது.

இடைவேளைக்குப் பிறகு...

இடைவேளைக்குப் பிறகு இங்கிலாந்துக்கு முதலில் ஃப்ரீ கிக் கிடைக்க அந்த வாய்ப்பு ஒன்றும் பயனளிக்கவில்லை. 50வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் வெஸ்டர்கார்ட் பந்தை டோல்பர்கிடம் அளிக்க அவர் அடித்த ஷாட்டை இங்கிலாந்து கோலி பிக்போர்ட் தடுத்து விட்டார். மீண்டும் ஒரு வாய்ப்பு இங்கிலாந்துக்கு கிடைத்தது. டென்மார்க் வீரர் மீலே, ஹாரி கேனை தள்ளி விட கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை மவுண்ட் அடிக்க மெகுவைர் தலையால் முட்ட ஷ்மீச்செல் வலது கையால் தடுத்தார்.

பிறகு இங்கிலாந்தின் பிலிப்ஸ், மவுண்ட், ஸ்டெர்லிங் டென்மார்க் அணிக்கு கடும் நெருக்கடிகளை கொடுத்தனர். ஆனால் இங்கிலாந்து சாக்காவை பெஞ்சுக்கு அழைத்து கிரீலிஷ் என்பவரை களமிறக்கியது. வந்தவுடனேயே கிரீலிஷ் தடம் பதித்தார் இவரை ஃபவுல் செய்த டென்மார்க் வீரர் வாஸ் மஞ்சள் அட்டை வாங்கினார். இங்கிலாந்துக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. ஷா அதை அடித்தார், தொடர் பாஸ்கள் மூலம் மவுண்ட்டிடம் பந்து வர அவர் அதை லேசாக கோல் நோக்கி தூக்கி விட்டார், ஆனால் அது கோல் பாருக்கு மேலே சென்றது. இந்த செஷனில் ஒன்றும் நடக்கவில்லை ஆட்டம் 1-1 என்று இழுபறியில் இருந்தது. இதனால் கூடுதல் 30 நிமிடத்துக்குச் சென்றது ஆட்டம். யூரோ சாம்பியன்ஷிப்பில் ஒரு தொடரில் 7வது முறையாக ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது.

கூடுதல் நேரம்:

வலது புறம் ஸ்டெர்லிங்கைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவரிடமிருந்து பந்து ஷாவுக்கு பந்து பவுன்ஸ் ஆகி வர அதை அவர் கிராஸ் செய்ய முயன்ற போது தடுப்பு வீரர் காலில் பட்டு வெளியே சென்றது. இதன் மூலம் கிடைத்த கார்னர் வாய்ப்பும் பயனளிக்கவில்லை, காரணம் டென்மார்க் தடுப்பு வியூகம் பிரமாதம்.

இந்நிலையில் 104வது நிமிடத்தில் மீண்டும் ஸ்டெர்லிங் பிரமாதமாகப் பந்தை பாக்சுக்குள் டென்மார்க் கோல் அருகில் கொண்டு வர அவரை ஜோக்கிம் மீலே ஃபவுல் செய்ததாக வீடியோ ரிவியூவில் உறுதி செய்யப்பட்டது. ஆனால் அது பெனால்டி கொடுக்க வேண்டிய ஃபவுலா என்பது விவாதத்துக்குரியது. பெனால்டி கிக் கொடுக்கப்பட ஹாரி கேன் ஷாட்டை அடித்தார், ஆனால் மோசமான ஷாட்டாக அமைந்ததால் டென்மார்க் கோல் கீப்பர் ஷ்மீச்செல் தடுத்தார், அவரிடமிருந்து திரும்பிய பந்தை ஹாரி கேன் இம்முறை கோலாக மாற்ற இங்கிலாந்து இறுதிக்குள் நுழைந்தது. 55 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு படைத்தது. இது ஹாரிகேனின் இந்தத் தொடரின் 4வது கோல் ஆகும்.

ஞாயிறன்று இறுதிப் போட்டியில் இங்கிலாந்து-இத்தாலி அணிகள் மோதுகின்றன.
Published by:Muthukumar
First published: