Wrestler Sushil Kumar | கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒலிம்பிக் பதக்க வீரர் சுஷில் குமாருக்கு டெல்லி போலீஸ் லுக்-அவுட் நோட்டீஸ்

மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு லுக்-அவுட் நோட்டீஸ்.

டெல்லியில் உள்ள சத்ரசால் ஸ்டேடியத்தில் ஏற்பட்ட சண்டையில் ஒரு மல்யுத்த வீரர் பலியானதையடுத்து தலைமறைவான ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில்குமாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது டெல்லி போலீஸ்.

  • Share this:
    சத்ரசால் ஸ்டேடிய சண்டையில் இருதரப்பு மல்யுத்த வீரர்களும் கடுமையாக மோதிக்கொண்டதில் இருதரப்பினரும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். இதில் பலர் காயமடைந்ததோடு, 23 வயது சாகர் ரானா என்ற மல்யுத்த வீரர் உயிரிழந்தார்.

    தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சுஷில்குமார் கூறிவந்தாலும் அவர் ஏன் தலைமறைவானார் என்பது சந்தேகங்களை கிளப்ப அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க டெல்லி போலீஸ் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. சுஷில் குமார் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

    “அவர்கள் எங்கள் மல்யுத்த வீரர்கள் அல்ல. கடந்த இரவு இந்தச் சம்பவம் நடந்தது. அடையாளம் தெரியாத நபர்கள் ஸ்டேடியத்துக்குள் குதித்தனர். சண்டையிட்டனர், எங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை” என்று சுஷில் குமார் கூறுகிறார்.

    இவர் மீது கொலை, ஆட்கடத்தல், கிரிமினல் சதி ஆகிய பிரிவுகளில் எஃப்.ஐ.ஆர். பதியப்பட்டுள்ளது.

    போலீஸ் உயரதிகாரியான கூடுதல் டிசிபி டாக்டர் குரிக்பால் சிங் சித்து கூறும்போது, “பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளோம். அவர்கள் அனைவரும் சுஷில் குமார் மீது குற்றம்சாட்டுகின்றனர். சுஷில் குமாரைப் பிடிக்க வலைவீசியுள்ளோம்” என்றார்.

    நடந்தது என்ன?- போலீஸ் தகவல்

    இளம் மல்யுத்த வீரர் சாகர் ரானா மற்றும் அவரது நண்பர்கள், காயமடைந்த சோனு மஹல் உட்பட அனைவரும் ஸ்டேடியத்துக்கு அருகில் சுஷில் குமாருக்கு தொடர்புடைய வீட்டில் தங்கியிருந்தனர். அவர்களைக் காலி செய்யச் சொல்லியும் காலி செய்யவில்லை, இதனையடுத்து பலவந்தமாக காலி செய்யவைக்கப்பட்டனர். மேலும் சத்ரசால் ஸ்டேடியத்தில் மற்றவர்கள் முன்னிலையில் சாகர் ரானா சுஷில் குமாரை கெட்ட வார்த்தைகள் சொல்லி திட்டியுள்ளார். மேலும் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று சுஷில் குமாரை, ரானா மிரட்டியுள்ளார்.

    செவ்வாய்- புதன் இடைப்பட்ட இரவில் சத்ரசால் ஸ்டேடியத்தில் இரு மல்யுத்த வீரர்கள் குழுக்களிடையே சண்டை நடந்துள்ளது. இதில் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட பிரச்சினை பெரிதாகியுள்ளது. பெரிதாகி பெரிய சண்டையில் பலர் காயமடைந்தனர், இதில் சாகர் ரானா காயத்துக்குப் பலியானார். பிரின்ஸ் தலால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலா ஜதேதி என்ற ரவுடிக்குத் தொடர்புடைய சோனு மஹலையும் தேடி வருகின்றனர்.

    விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இதில்தான் சுஷில் குமார் சிக்கி தலைமறைவாகியுள்ளார்.
    Published by:Muthukumar
    First published: