Home /News /sports /

காமன்வெல்த் லான் பவுல்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி

காமன்வெல்த் லான் பவுல்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி

காமன்வெல்த் போட்டிகள்

காமன்வெல்த் போட்டிகள்

CWG 2022: 5-வது நாள் முடிவில், இந்திய அணி 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 13 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    காமன்வெல்த் லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளது. இதேபோல, டேபிள் டென்னிஸில் தங்கப்பதக்கமும், பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளது.

    இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், 4 பேர் கொண்ட மகளிருக்கான லான் பவுல்ஸ் இறுதிப் போட்டியில் இந்தியா - தென்ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, ஒரு கட்டத்தில் 8-4 என முன்னிலை பெற்றது. ஆனால், இதையடுத்து பதிலடி கொடுக்கும் வகையில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 10-க்கு 8 என முந்தியது.

    இருப்பினும், மனம்தளராமல் ஆடிய இந்திய அணி, 17-10 என்ற கணக்கில் வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது. காமன்வெல்த்தில் 1930-ம் ஆண்டு முதல் நடத்தப்படும் லான் பவுல்ஸ் போட்டியில், இந்தியா முதல் முறையாக பதக்கம் வென்றுள்ளது. அதுவும் தங்கப்பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளது.

    இதேபோல், காமன்வெல்த் தொடரின் ஆடவர் அணிகளுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில், இந்தியா - சிங்கப்பூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, 3-1 என்ற விகிதத்தில் வெற்றிபெற்று தங்கப் பதக்கம் வென்றது.

    ஆடவருக்கான, 96 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில், இந்திய வீரர் விகாஷ் தாகூர் களமாடினார். இவர், ஸ்னாட்ச் மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் என இரு பிரிவுகளிலும் மொத்தம் 346 கிலோ எடை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார். ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோஷல், நியூசிலாந்து வீரர் பால் கோல் உடன் மோதினார். இப்போட்டியில் ஆதிக்கம் செலுத்திய நியூசிலாந்து வீரர் 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றார்.

    இதையும் படிங்க: 44வது செஸ் ஒலிம்பியாட்டின் டார்லிங் ராண்டா செடர்!

    மகளிர் ஹாக்கித் தொடரின் 'ஏ' பிரிவு லீக் சுற்றில் இந்திய அணி, தனது மூன்றாவது ஆட்டத்தில் உள்ளூர் அணியான இங்கிலாந்துடன் மோதியது. இதில், இங்கிலாந்து 3-1 என வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தியது.

    தடகளத்தை பொறுத்தவரை ஆடவருக்கான நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்று போட்டியில் இந்தியாவின் ஸ்ரீசங்கர் மற்றும் முகமது அனாஸ் தங்களது திறமையை வெளிப்படுத்தி அசத்தினர். இதன் மூலம், இறுதிச் சுற்றுக்கு முன்னேறி எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளனர். அத்துடன், மகளிருக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் மன்பிரீத் கவுர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று கவனம் ஈர்த்துள்ளார்.

    இந்நிலையில், பேட்மிண்டன் கலப்பு அணிக்கான இறுதிப்போட்டியில், மலேஷியாவை இந்தியா எதிர்கொண்டது. இதில், 1-க்கு மூன்று என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்து, வெள்ளிப்பதக்கத்தை வென்றது. 5-வது நாள் முடிவில், இந்திய அணி 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 13 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இதன்மூலம், அணிகள் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Commonwealth Games, India team, Sports

    அடுத்த செய்தி