காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டிகளில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் மிச்செல் லீ என்ற வீராங்கனையை 21-15, 21-13 என்ற நேர் செட்களி வீழ்த்தி முதன் முதலாக காமன்வெல்த் தங்கம் வென்றார் பி.வி.சிந்து.
இதன் மூலம் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கை 19 ஆகவும் மொத்த பதக்கங்கள் 56 ஆகவும் அதிகரித்துள்ளது. தொடக்கம் முதலே ஷாட்களையும் வாலிகளையும் சர்விஸ்களையும் அபாரமாக வீசிய பி.வி.சிந்து முதல் செட்டில் தொடக்கத்தில் 3-1 என்று முன்னிலை வகித்தார்.
பிறகு மிச்செல் லீ சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த 5-5 என்று ஆனது. ஆனால் சிந்து விடாமல் சில அதிரடி ஆட்டங்களை ஆட 9-7 என்று முன்னிலை பெற்று பிறகு 11-8, 14-9 என்று முன்னிலை வகிக்க தொடர்ந்து மோதிய மிச்செல் லீ 5 புள்ளிகளை வெல்ல இருவரும் 17-14 என்று விறுவிறுப்பு காட்டினர். ஆனால் அதன் பிறகு மிச்செல் லீ உடலுக்கு நேராக ஒரு ஸ்மாஷ் செய்ய சிந்து 19-15 என்று வெற்றிக்கு அருகில் வந்து அடுத்து 2 புள்ளிகளை பெற்று 21-15 என்று முதல் செட்டைக் கைப்பற்றினார்.
2வது செட்டில் ஒரு பிரமாதமான ஸ்மாஷுடன் ஆரம்பத்தில் 3-2 என்று சிந்து முன்னிலை வகித்தார். பிறகு மிச்செல் லீ ஒரு ஷாட்டை வைடாக அடிக்க சிந்து 6-3 என்று முன்னிலை பெற்றார். ஆனால் அதன் பிறகு 4 புள்ளிகளை சிந்து பவர்ஃபுல் ஸ்மாஷ், அருமையான எதிர்பார்ப்பு, மற்றும் பிரமாதமான கணிப்புகள் மூலம் மிச்செல் லீயிடமிருந்து ஆட்டத்தைப் பறித்து 10-6 என்று நகர்த்தினார்.
பிறகு ஒரு நீண்ட ரேலியில் 57 ஷாட்களை இருவரும் விடாப்பிடியாக ஆடினாலும் கடைசியில் சிந்துவுக்கே வெற்றி என்ற ஆனபிறகு 13-10 என்று சிந்து முன்னிலை வகித்தார். பிறகும் சிந்து ஆதிக்கம் செலுத்த 17-13, 19-13 என்று முன்னேறி அக்டைசியில் 21-13 என்று 2வது செட்டையும் கைப்பற்றி தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Commonwealth Games, PV Sindhu