பிரிட்டன் நாட்டின் பிர்மிங்ஹாம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள இலங்கை நாட்டின் அணி வீரர்கள் இருவர், அணியின் நிர்வாகி ஒருவர் விளையாட்டு கிராமத்தில் இருந்து மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மூவரையும் தேடும் பணியில் பிரிட்டன் நாட்டின் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடும் பொருளாதார நெருக்கடியால் இலங்கை சிக்கித் தவித்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக அங்கு மாபெரும் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற சூழல் அந்நாட்டில் நிலவிவருகிறது. கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.
அதன் பின்னர், கடந்த சில வாரங்களாக போராட்டங்கள் ஓய்ந்துள்ள நிலையில், இந்த இக்கட்டான சூழலிலும் இலங்கை காமன்வெல்த் போட்டிகளுக்கு 161 பேர் கொண்ட குழுவை பிரிட்டன் நாட்டிற்கு அனுப்பிவைத்துள்ளது. இதில் வீரர்கள் அல்லாமல் 51 நிர்வாகிகள், அலுவலர்களும் அடக்கம். இந்நிலையில் பிரிட்டன் விளையாட்டு கிராமத்தில் இருந்து இலங்கையைச் சேர்ந்த ஜூடோ வீரர், மல்யுத்த வீரர், ஜூடோ விளையாட்டு மேலாளர் ஆகிய மூவர் மாயமாகியுள்ளனர்.
இதையும் படிங்க:
காமன்வெல்த் : சவுரவ் கோசல்.. துலிகா மான் அசத்தல்.. பதக்க வேட்டையில் இந்தியா
இதை இலங்கை அணியின் செய்தி தொடர்பாளர் கோபிநாத் சிவராஜா உறுதி செய்துள்ளார். 'நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது எனவும், இவர்கள் பிரிட்டன் எல்லையை தாண்டி சென்றிருக்க முடியாது என்பதால் அந்நாட்டின் காவல்துறை சோதனையில் எளிதாக கண்டறியப்படுவார்கள். இந்த இக்கட்டான சூழலில் அணியின் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும்' என சிவராஜா தெரிவித்துள்ளார்.மாயமான மூவரில் ஒருவர் பெண் வீராங்கனை எனவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நடப்பு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இதுவரை இலங்கை ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மொத்தம் மூன்று பதங்கங்களை வென்றுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.