Home /News /sports /

காமன்வெல்த்: 22 தங்கப் பதக்கத்துடன் இந்தியா 4வது இடம்

காமன்வெல்த்: 22 தங்கப் பதக்கத்துடன் இந்தியா 4வது இடம்

காமன்வெல்த் போட்டிகள்

காமன்வெல்த் போட்டிகள்

CWG 2022: காமன்வெல்த் போட்டியைப் பொறுத்தவரை, ஆஸ்திரேலியா 67 தங்கத்துடன் முதலிடத்தையும், போட்டியை நடத்திய இங்கிலாந்து 57 தங்கத்துடன் இரண்டாம் இடத்தையும் பிடித்தன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் கடைசி நாளில் இந்தியா 4 தங்கப் பதக்கம் வென்று அசத்தியது. இதன்மூலம், மொத்தம் 22 தங்கம் உள்பட 61 பதக்கங்களுடன் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது.

    இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் போட்டி நடைபெற்றது. இதன் கடைசி நாளான நேற்று, பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மகளிருக்கான பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், இந்தியாவின் பி.வி.சிந்து, கனட வீராங்கனை மிச்செல் லீ உடன் மோதினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து, 21-15, 21-13 என்ற நேர் செட்களில் வெற்றிபெற்றார், காமன்வெல்த்தில் முதல்முறையாக அவர் தங்கம் வென்றார்.

    இதையடுத்து, ஆடவருக்கான பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷ்யா சென், மலேசியாவின் ஸீ யாங் உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்தியாவின் லக்ஷ்யா சென், 19-21, 21-9, 21-16 என்ற செட்களில் போராடி வெற்றிபெற்று, தங்கப் பதக்கம் வென்றார்.

    இதையடுத்து, ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் சந்திரசேகர் ஜோடி, இங்கிலாந்தின் பென் லேன் மற்றும் சென் வெண்டி ஜோடியுடன் மோதியது. இதில், ஆட்டத்தை தங்களது முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்த இந்திய ஜோடி, 21-15, 21-13 என்ற நேர்செட்களில் வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை வென்றது.

    ஆடவர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் தமிழக வீரர் சத்தியன் ஞானசேகரன் வெண்லகப் பதக்கத்தை வசப்படுத்தினார். மற்றொரு தமிழக வீரரான சரத் கமல், இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் லியாம் பிட்ச்ஃபோர்ட் உடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில், தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய சரத் கமல், 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் வாகை சூடி, தங்கப் பதக்கத்தை வென்றார்.

    இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட்: இந்திய மகளிர் அணி தங்கம் வெல்ல வாய்ப்பு.. இன்று கடைசி சுற்று போட்டிகள்

    ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில், 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி காமன்வெல்த் ஹாக்கியில், தொடர்ந்து 8-வது முறையாக தங்கம் வென்றது. இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தியது.

    காமன்வெல்த் போட்டியைப் பொறுத்தவரை, ஆஸ்திரேலியா 67 தங்கத்துடன் முதலிடத்தையும், போட்டியை நடத்திய இங்கிலாந்து 57 தங்கத்துடன் இரண்டாம் இடத்தையும் பிடித்தன. கனடா 26 தங்கத்துடன் மூன்றாவது இடம் வகித்தது. இந்தியாவை பொறுத்தவரை கடைசி நாளில் மட்டும் 4 தங்கம், தலா ஒரு வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றது. இதன்மூலம், மொத்தம் 22 தங்கம்,16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களுடன், நியூசிலாந்தை பின்னுக்குத் தள்ளி நான்காவது இடத்திற்கு முன்னேறியது.

    காமன்வெல்த் போட்டிகள் நிறைவு விழா, கோலாகல கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. அலெக்சாண்டர் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்திய குழுவை டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் சரீன் ஆகியோர் தேசியக் கொடியை ஏந்தி வழிநடத்திச் சென்றனர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Commonwealth Games, India team

    அடுத்த செய்தி