மல்யுத்த வீரரை சுஷில் குமார் அடித்து உதைத்த வீடியோ வெளியானதால் பரபரப்பு

மல்யுத்த வீரர் சுஷில் குமார்

மல்யுத்த வீரர் சாகர் தன்கத் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திய ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில் குமாருக்கு எதிராக சாட்சியங்கள் அதிகரித்து வருகின்றன, சுஷில் குமார், சாகர் தன்கத்தை அடித்து உதைத்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

 • Share this:
  மே மாதம் 4ம் தேதி இரவு சத்ரசால் ஸ்டேடியத்தில் சுஷில் குமார் கையில் தடி அல்லது பேஸ்பால் மட்டையுடன் நிற்கிறார், அடிபட்ட சாகர் தன்கத் கீழே விழுந்து கிடக்கிறார். இதில் மேலும் 12 பேர் அங்கே நிற்பதும் வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

  இந்த அடிதடி வீடியோவை எடுத்தது சுஷில் குமாரின் கூட்டாளி பிரின்ஸ் என்பவர்தான். இவரும் கைது செய்யப்பட்டுள்ளார். சுஷில் குமார் இந்த வீடியோவை மல்யுத்த சர்க்கிளில் பரவவிட ஆசைப்பட்டுள்ளார், அதாவது ஜாக்கிரதை மல்யுத்த அரங்கில் நான் தான், என்னைப் பகைத்துக் கொண்டால் இதுதான் கதி என்பதை அறிவிக்கும் விதமாக சாகர் தன்கத்தை அடித்து உதைத்த வீடியோவை அவர் பரவலாக்க விரும்பியதாகப் பரபரப்ப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


  மேலும் தாதா காலா ஜதேதியின் சகோதரருடன் சுஷில் குமார் இருக்கும் புகைப்படமும் போலீஸாருக்கு ஆதாரமாக கிடைத்துள்ளது. டிசம்பர் 18,2018-ல் இந்த புகைப்படம் எடுத்ததாகத் தெரிகிறது. இதன் மூலம் தாதா காலா ஜதேதியின் கும்பலுடன் சுஷில் குமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நெருக்கமாக இருந்திருக்கிறார் என்ற போலீஸாரின் கோணத்துக்கு புதிய ஆதாரமாக உள்ளது இந்தப் புகைப்படம்.

  சுஷில் குமார் தற்போது 6 நாள் போலீஸ் காவலில் உள்ளார். சாகர் தன்கத் கொலை வழக்கில் இதுவரையிலான விசாரணையில் சுஷில் குமாருக்கு சிறையில் உள்ள தாதாக்கள் நீரஜ் பவேனியா, நவீன் பாலியுடன் உள்ள தொடர்பும் அம்பலமாகியுள்ளது.

  தாதா ஜதேதி தற்போது துபாயில் இருக்கிறான், இவரைப் பற்றி தகவல் அளிப்பவருக்கு ரூ.7 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தகராறு உள்ள சொத்துக்கள், நிலங்களை இவன் அபகரிப்பதாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

  இந்த ஒட்டுமொத்த கொலை விவகாரத்தின் பின்னணியில் உள்ள டெல்லியின் மாடல் டவுனில் இருக்கும் எம்-2 என்ற குடியிருப்பில் ஜதேதிக்கு தொடர்புடைய கிரிமினல்கள் குடியமர்த்தப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இந்த குடியிருப்பில்தான் இவர்களது அராஜக ரவுடியிசத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

  இதுதவிர அடிதடி நடந்த போது நேரில் பார்த்த 8 பேர் சுஷில் குமாருக்கு எதிராக போலீசாரிடம் சாட்சி அளித்துள்ளதால் சுஷில் குமார் வழக்கிலிருந்து தப்புவது கடினம் என்று தெரிகிறது.
  Published by:Muthukumar
  First published: