Home /News /sports /

செஸ் ஒலிம்பியாட்: இந்திய மகளிர் அணி தங்கம் வெல்ல வாய்ப்பு.. இன்று கடைசி சுற்று போட்டிகள்

செஸ் ஒலிம்பியாட்: இந்திய மகளிர் அணி தங்கம் வெல்ல வாய்ப்பு.. இன்று கடைசி சுற்று போட்டிகள்

செஸ் ஒலிம்பியாட்

செஸ் ஒலிம்பியாட்

பதினோறு சுற்றுகளில் முடிவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் வழங்கப்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    செஸ் ஒலிம்பியாட் தொடரில், கஜகஸ்தான் அணியை வீழ்த்தி, இந்திய மகளிர் 'ஏ' அணி முதலிடத்திற்கு முன்னேறி, தங்கப் பதக்கத்திற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடைசி சுற்றுப் போட்டிகள் இன்று நடைபெறுகிறது.

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், ஒரு சுற்று மட்டுமே எஞ்சிய நிலையில், நேற்றைய 10-வது சுற்று ஆட்டத்தில் வெற்றிக்காக வீரர், வீராங்கனைகள் நுட்பமாக காய் நகர்த்தினர். இத்தொடரில், பதக்கம் வெல்ல இந்திய அணிகளில் ஆடவர் 'ஏ' மற்றும் 'பி' அணிகளுக்கு வாய்ப்புள்ளதாகவும், மகளிரில் இந்திய 'ஏ' அணிக்கும் வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டது. இதனால், இந்த அணிகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

    இந்நிலையில், 10-வது சுற்றில் இந்திய ஆடவர் 'ஏ' அணி, ஈரான் அணியை எதிர்கொண்டது. இதில், அர்ஜூன் டிராவை சந்திக்க, ஹரிகிருஷ்ணன் தோல்வியைத் தழுவினார். இருப்பினும், நாராயணன் மற்றும் விதித் சந்தோஷ் வெற்றிபெற்றதால், இந்திய ஆடவர் 'ஏ' அணி, ஈரான் அணியை போராடி வீழ்த்தியது.

    பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்திய ஆடவர் 'பி' அணி, சமபலம் வாய்ந்த உஸ்பெகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. சரின் நிஹல் மற்றும் அதிபன் ஆகியோர், தங்களது எதிராளியுடன் போட்டியை சமன் செய்தனர். இதனால், வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திற்கு தமிழக வீரர் பிரக்ஞானந்தா தள்ளப்பட்டார். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய இவர், 77-வது நகர்த்தலில் உஸ்பெகிஸ்தான் வீரர் சிந்தாரோவை வீழ்த்தி, தனது அணிக்கு வலு சேர்த்தார். அதேவேளையில், ஆடவர் 'சி' அணியும், ஸ்லோவாக்கியாவுக்கு எதிரான போட்டியை 2-2 என டிரா செய்து பின்னடைவை சந்தித்தது.

    இதையும் படிங்க: இதுவரை நடந்தவற்றில் இதுதான் சிறந்த செஸ் ஒலிம்பியாட் என அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர் - விஸ்வநாதன் ஆனந்த்

    மகளிர் பிரிவை பொறுத்தவரை இந்திய 'ஏ' அணி, கஜகஸ்தான் அணிக்கு எதிராக காய் நகர்த்தியது. இதில், தமிழக வீராங்கனை வைஷாலி தனது ஆட்டத்தை டிரா செய்த போதும், தான்யா, பாக்தி குல்கர்னி மற்றும் கொனேரு ஹம்பி ஆகியோர் தங்களது எதிராளியை வீழ்த்தி, அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். கஜகஸ்தானுக்கு எதிராக அபார வெற்றியை பதிவுசெய்ததன் மூலம், செல் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இந்திய மகளிர் 'பி' அணி பிரகாசப்படுத்தியது.

    இதனிடையே, இந்திய மகளிர் 'பி' அணி, நெதர்லாந்து அணியை 3-1 என்ற புள்ளிக்கணக்கில் வீத்தியது. இதேபோன்று, இந்தியா மகளிர் 'சி' அணி, சுவீடன் அணியை 3-1 என வீழ்த்தியது. மகளிர் பிரிவை பொறுத்தவரை இந்திய 'ஏ' அணி, மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. 10-வது சுற்று முடிவில் அந்த அணி 8 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிராவுடன், 17 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, போலந்து, அஜர்பைஜான், உக்ரைன் மற்றும் ஜார்ஜியா ஆகிய அணிகள் தலா 16 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. எனவே, கடைசி சுற்றில் இந்திய மகளிர் 'ஏ' அணி வெற்றிபெற்றால் தங்கம் உறுதியாகும். டிரா செய்தால் மற்ற அணிகளின் முடிவைப் பொறுத்து பதக்க வாய்ப்பு அமையும்.

    பதினோறு சுற்றுகளில் முடிவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் வழங்கப்படும். இதுவரை நடந்து முடிந்த 10 சுற்றுகளின் முடிவில், ஆடவர் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி, 7 வெற்றி, 3 டிரா உடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, அர்மீனியா இரண்டாவது இடம் வகிக்கிறது. இந்திய ஆடவர் 'பி' மற்றும் 'ஏ' அணிகள் தலா 7 வெற்றி, இரண்டு டிரா, ஒரு தோல்வி என, முறையே மூன்று மற்றும் 4-வது இடத்தில் உள்ளன. இதனால், பதக்கத்தை உறுதி செய்ய இன்றைய கடைசி சுற்றில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், நம்பர் ஒன் அணியான அமெரிக்கா 5-வது இடத்தில் உள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Chess, Chess Olympiad 2022, Sports

    அடுத்த செய்தி