Home /News /sports /

Chess Olympiad: இந்திய அணிகள் ஹாட்ரிக் வெற்றிபெற்று அசத்தல்

Chess Olympiad: இந்திய அணிகள் ஹாட்ரிக் வெற்றிபெற்று அசத்தல்

செஸ் ஒலிம்பியாட்

செஸ் ஒலிம்பியாட்

போட்டிக்குப் பின் பேசிய பிரக்ஞானந்தா, மூன்றாவது சுற்று போட்டியில் தான் சிறப்பாக விளையாட வில்லை என்றும், இந்த வெற்றி குறித்து மகிழ்ச்சியடையவில்லை எனவும் தெரிவித்தார்

    செஸ் ஒலிம்பியாட் தொடரின் 3-வது சுற்றில் இந்திய ஆடவர் 'பி' அணி வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இந்தியாவின் சார்பில் களம்கண்ட மூன்று அணிகளுமே ஹாட்ரிக் வெற்றிபெற்று கவனம் ஈர்த்துள்ளன.

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் மூன்றாவது சுற்றின் ஆடவர் பிரிவில் இந்திய 'ஏ' அணி கிரீஸ் அணியுடன் மோதியது. இதில், விதித் குஜராத்தி, அர்ஜூன் எரிகைசி ஆகியோர் வெற்றிபெற்ற நிலையில், ஹரிகிருஷ்ணா மற்றும் சசிகிரண், தங்களது எதிராளியுடன் டிரா கண்டனர். இதனால், 3 - 1 என்ற புள்ளி கணக்கில் இந்தியா 'ஏ' அணி தொடர்ந்து, மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.

    சுவிட்சர்லாந்துக்கு எதிராக விளையாடிய இந்திய ஆடவர் 'பி' அணியில் குகேஷ், சரின் நிஹில், சத்வானி ஆகியோர், தங்களது எதிராளியை வீழ்த்தி வெற்றியை தேடித் தந்தனர். அத்துடன், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரக்ஞானந்தா போராடி வெற்றிபெற்றார். இதன் மூலம், பி அணி 4-0 என்ற புள்ளிக்கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி, ஹாட்ரிக் வெற்றிபெற்று முன்னிலையை தக்கவைத்தது. போட்டிக்குப் பின் பேசிய பிரக்ஞானந்தா, மூன்றாவது சுற்று போட்டியில் தான் சிறப்பாக விளையாட வில்லை என்றும், இந்த வெற்றி குறித்து மகிழ்ச்சியடையவில்லை எனவும் தெரிவித்தார். ஒரு கட்டத்தில் தோற்றுவிடுவேனோ என்ற சூழலில், டிரா செய்தாலே போதும் என நினைத்ததாகவும் கூறினார்.

    இந்திய ஆடவர் 'சி' அணி, ஐஸ்லாந்து அணியை எதிர்த்து விளையாடியது. இதில், சேதுராமன், அபிஜித் குப்தா எதிராளிகளை வீழ்த்தினர். மேலும், சூர்யசேகர் மற்றும் அபிமன்யு புரானிக் ஆடிய ஆட்டங்களில் டிராவில் முடிந்தன- இதன் காரணமாக, 3 1 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய சி அணி வெற்றியை வசப்படுத்தியது.

    மகளிர் பிரிவில் இந்திய 'ஏ' அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது.  இப்பிரிவில் கடந்த இரு போட்டிகளிலும் விளையாடாத கர்ப்பிணி ஹரிகா, 3-வது சுற்றில் களம் கண்டார். ஜோவன்காவுக்கு எதிராக 40-வது நகர்தலின் போது ஆட்டம் டிராவில் முடிந்தது. தான்யாவும் ஆட்டத்தை சமன் செய்தபோதும் வைஷாலி மற்றும் பாக்தி குல்கர்னி வெற்றிபெற்றனர். இதனால் 3-1 என இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்தோனேசியாவுக்கு எதிராக காய் நகர்த்திய 'பி' அணி 3-1 என வெற்றிகண்டது.

    இதையும் படிங்க: காமன்வெல்த் போட்டியில் இரண்டாவது தங்கம் வென்ற இந்தியா!

    மகளிர் 'சி' அணி ஆஸ்திரியாவை எதிர்கொண்டது. இப்பிரிவில் இந்தியாவின் நத்திதாவை எதிர்த்து விளையாட இருந்த ஆஸ்திரிய வீராங்கனை சியாரா, கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார். இதனால், நந்திதா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், மூன்றாவது சுற்றில் இந்திய அணியின் முதல் வெற்றியாக இது பதிவானது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் உலகச் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் அங்கம் வகித்துள்ள நார்வே அணி, இத்தாலியிடம் தோல்வியைத் தழுவி ஏமாற்றம் அளித்தது. இப்போட்டியில் இத்தாலி அணி தலா இரு வெற்றி, இரு டிராவுடன் 3-1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்றது. குறிப்பாக, இத்தாலியின் டேனியலை எதிர்கொண்ட கார்ல்சன் போராடி டிரா செய்தார்.

    இன்று நடைபெறும் நான்காவது சுற்றில் ஆடவர் பிரிவில் இந்தியா 'ஏ' பிரான்ஸ் அணியுடன் மோதுகிறது. 'பி' அணி பலம் வாய்ந்த இத்தாலியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. கார்ல்சனின் நார்வே அணியை வீழ்த்திய உற்சாகத்தில் இத்தாலி இன்று களம் காண்கிறது. எனவே, இன்றைய ஆட்டத்தில் இந்திய 'பி' அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது. மேலும், ஆடவர் 'சி' அணி, ஸ்பெயினை எதிர்கொள்கிறது. மகளிரை பொறுத்தவரை இந்திய 'ஏ' அணி, ஹங்கேரியுடனும், 'பி' அணி எஸ்டோனியாவுக்கு எதிராகவும் காய் நகர்த்த உள்ளன. அத்துடன், இந்திய மகளிர் 'சி' அணி, ஜார்ஜியாவை எதிர்கொள்கிறது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Chess, Chess Olympiad 2022

    அடுத்த செய்தி