Home /News /sports /

செஸ் ஒலிம்பியாட் 2022: இந்திய பி அணி புள்ளி பட்டியலில் முன்னிலை

செஸ் ஒலிம்பியாட் 2022: இந்திய பி அணி புள்ளி பட்டியலில் முன்னிலை

இந்திய பி அணி

இந்திய பி அணி

Chess Olympiad 2022: 'பி' அணி பலம் வாய்ந்த இத்தாலியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில், குகேஷ் மற்றும் நிஹில் வெற்றியை வசப்படுத்தினர். ஆனால், பிரக்ஞானந்தா 42-வது நகர்தலிலும், சத்வானி 30-வது நகர்த்தலிலும் டிராவை சந்தித்தனர்

    செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய ஆடவர் 'பி' அணி, தொடர்ந்து 4 போட்டிகளில் வெற்றிபெற்று, புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் நீடிக்கிறது. 4-வது சுற்றில் ஆடவர் மற்றும் மகளிர் 'சி' அணிகள் தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அளித்தன.

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா சார்பில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் தலா 3 அணிகள் பங்கேற்றுள்ளன. இதன், 4-வது சுற்றில் ஆடவர் பிரிவில் இந்தியா 'ஏ' அணி பிரான்ஸ் அணியை எதிர்கொண்டது.

    இந்திய வீரர்கள் தோல்வி முகம் கண்டுவிடக் கூடாது என்பதற்காக மிகுந்த எச்சரிக்கையுடன் காய்களை நகர்த்தினர். இதன் எதிரொலியால், இப்பிரிவில் விளையாடிய ஹரிகிருஷ்ணா, விதித் குஜராத்தி, அர்ஜூன் மற்றும் நாராயணன் ஆகிய 4 பேரும் டிராவை சந்தித்தனர். இதனால், ஆட்டம் வெற்றி தோல்வியின்றி 2-2 என சமனில் முடிந்தது. அத்துடன், நடப்புத் தொடரில் இந்தியா ஓர் அணியாக சந்திக்கும் முதல் டிராவாக இது அமைந்தது.

    'பி' அணி பலம் வாய்ந்த இத்தாலியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில், குகேஷ் மற்றும் நிஹில் வெற்றியை வசப்படுத்தினர். ஆனால், பிரக்ஞானந்தா 42-வது நகர்தலிலும், சத்வானி 30-வது நகர்த்தலிலும் டிராவை சந்தித்தனர். முடிவில், 3-1 என்ற புள்ளிக்கணக்கில் இத்தாலி அணியை வீழ்த்தி, தொடர்ந்து 4-வது வெற்றியை பதிவு செய்து, அசைக்க முடியாத அணி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது.

    ஆடவர் 'சி' அணி, ஸ்பெயினை எதிர்கொண்டது. இந்த பிரிவில், அபிஜித், ஸ்பெயின் வீரர் டேவிட் ஆட்டோனை எதிர்த்து வெள்ளை நிற காய்களை நகர்த்தினார். இதில், டேவிட் ஆட்டோன் சிறப்பாக ஆடியதால் 41-வது நகர்த்தலில் அபிஜித் சரணடைந்தார். இதன் முலம், இந்திய ஆடவர் அணிகளில் தோல்வியைத் தழுவிய முதல் நபரானார். இது 'சி' அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

    மேற்கொண்டு சறுக்கிவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்திய சூர்ய குமார் கங்குலி, சேதுராமன் மற்றும் கார்த்திகேயன் முரளி ஆகியோரால் டிராவையே சந்திக்க முடிந்தது. முடிவில், 2.5 - 1.5 என்ற புள்ளிக்கணக்கில் ஸ்பெயின் வெற்றிபெற்றது. இதனால், நடப்புத் தொடரில் இந்திய ஆடவர் 'சி' அணி முதல் தோல்வியை சந்தித்தது.

    இதையும் படிங்க: டி.என்.பி.எல் 2022: கோப்பையை பகிர்ந்துகொண்ட சேப்பாக் மற்றும் கோவை அணிகள்..!

    மகளிர் பிரிவை பொறுத்தவரை இந்திய 'ஏ' அணி, ஹங்கேரிக்கு எதிராக காய் நகர்த்தியது. இப்பிரிவில் ஆதிக்கம் செலுத்திய தான்யா சச்தேவ் வெற்றிபெற்ற நிலையில், கொனேரு ஹம்பி, ஹரிகா மற்றும் வைஷாலி ஆகியோர் எதிராளியுடன் சமபலத்துடன் மோதி ஆட்டத்தை டிரா செய்தனர். இதன் காரணமாக, 2.5 -1.5 என 'ஏ' அணி போராடி வெற்றிபெற்றது.

    மகளிர் 'பி' அணி எஸ்டோனியா உடன் மோதியது. இந்த ஆட்டத்தில், வந்திகா அகர்வால் மட்டுமே வெற்றி கண்டார். அதேவேளையில், பத்மினி, சவுமியா, திவ்யா ஆகியோர் டிராவையே சந்திக்க முடிந்தது. இருந்தபோதும், எதிரணியிடம் சரணடையாமல் வெற்றிப் பயணத்தை தொடர்ந்தது

    இந்திய மகளிர் 'சி' அணிக்கு எதிராக, ஜார்ஜியா அணியின் கையே ஓங்கி இருந்ததால், அந்த அணி 3-1என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்றது. நந்திதா மட்டுமே வெற்றிபெற்றார். எஞ்சிய இந்திய வீராங்கனைகளான ஈஷா, வர்ஷினி, பிரத்யுஷா தோல்வி கண்டனர். இதனால், இந்திய மகளிர் சி அணியின் வெற்றிப்பயணத்துக்கு ஜார்ஜியா அணி தடை போட்டது.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Chess Olympiad 2022, Team India

    அடுத்த செய்தி