செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய 'பி' அணி, பலம் வாய்ந்த அமெரிக்காவை வீழ்த்தி அசத்தியது. மேலும், 'பி' அணியில் தமிழக வீரர் குகேஷ், தொடர்ந்து 8 போட்டிகளில் வெற்றிபெற்று அமர்க்களப்படுத்தி உள்ளார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் போட்டி, இறுதிக்கட்டத்தை நெருக்கியுள்ளது. இதன் 8-வது சுற்றில் இந்திய ஆடவர் 'ஏ' அணி, அசுர பலம் கொண்ட அர்மீனியா அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. சமபலம் பொருந்திய வீரர்கள் நேருக்கு நேர் மோதிய இந்த ஆட்டத்தில், விதித் சந்தோஷ், நாராயணன், அர்ஜூன் ஆகியோர் டிராவை சந்தித்தனர். ஆனால், ஹரிகிருஷ்ணன் தோல்வியை சந்தித்தார். இதனால், அர்மீனியா அணி தொடர் வெற்றியை பதிவு செய்தது.
ஆடவர் 'பி' அணி, உலக தரவரிசையில் முன்னணியில் உள்ள வீரர்களை உள்ளடக்கிய அமெரிக்க அணியை எதிர்கொண்டது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் களம் கண்ட பிரக்ஞானந்தா மற்றும் நிஹல் சரின், தங்களது எதிராளிகளிடம் விட்டுக்கொடுக்காமல் ஆடி டிரா செய்தனர். அதேவேளையில், தமிழக வீரரான குகேஷ், உலக தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பாபியோனாவை 45-வது நகர்த்தலில் வீழ்த்தினார். அத்துடன், தொடர்ந்து 8 சுற்றுகளிலும் வாகை சூடி அசைக்க முடியாத வீரராக குகேஷ் உருவெடுத்துள்ளார். மேலும், இபோட்டியில் சத்வானியும் வெற்றிபெற்றதால் இந்திய ஆடவர் 'பி' அணி, 3-1 என நம்பர் ஒன் அணியான அமெரிக்காவை விழ்த்தியது.
இந்தியா 'சி' அணி, பெரு அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில், சேதுராமன் மற்றும் கார்த்திகேயன் டிராவை சந்தித்த நிலையில், சூர்ய சேகர் கங்குலி மற்றும் அபிஜித் குப்தா தோல்வியை தழுவினார். இதனால், பெரு அணி வெற்றியை வசப்படுத்தியது.
இதையும் படிங்க: ஒரே ஓவரில் 34 ரன்கள்... கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்த ஜிம்பாப்வே பேட்ஸ்மேன் - வீடியோ
மகளிர் பிரிவை பொறுத்தவரை இந்திய 'ஏ' அணி, சமபலம் பொருந்திய உக்ரைன் அணிக்கு எதிராக காய் நகர்த்தியது. இந்த போட்டியில் கொனேரு, தான்யா மற்றும் ஹரிகா ஆகியோர் தங்களது எதிராளிக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஆட்டத்தை டிரா செய்தனர். இதனால், இந்த ஆட்டத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இடத்திற்கு, தமிழக வீராங்கனை வைஷாலி தள்ளப்பட்டார். இதை கருத்தில் கொண்டு, மிக நுட்பமாக செயல்பட்ட வைஷாலி, உக்ரைன் வீராங்கனை உஷேனினாவுக்கு எதிராக டிராவையே சந்தித்தார். இதன் காரணமாக இப்போட்டி 2-2 என சமனில் முடிந்தது.
இந்திய மகளிர் 'பி' அணி, குரோஷியாவை சந்தித்தது. இதில், வந்திகா அக்ரவால், பத்மினி ரவுத், திவ்யா தேஷ்முக் ஆகியோர் தங்களது எதிராளியை வீழ்த்தினர். மேலும், கோம்ஸ் மேரி டிராவை சந்தித்ததால், 3.5 மற்றும் 0.5 என்ற புள்ளிக்கணக்கில் மகளிர் 'பி' அணி,அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.
இந்திய மகளிர் 'சி' அணி, முன்னணி அணிகளில் ஒன்றான போலந்துடன் மோதியது. இப்போட்டியில், கருப்பு நிற காய்களுடன் ஆடிய ஈஷா கரவதே மற்றும் விஷ்வா வஸ்னவாலா டிரா செய்தனர். ஆனால், வெள்ளை நிற காய்களுடன் ஆடிய நத்திதா மற்றும் பிரத்யுஷா தோல்வியை தழுவினர். இதனால்,1-2 என்ற கணக்கில் மகளிர் சி' அணி தோல்வியுற்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.