கடந்த ஏப்ரலில் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பி.வி.சிந்துவின் தோல்விக்குக் காரணமான நடுவர் பிழைக்காக ஆசிய பேட்மிண்டன் டெகினிக்கல் கமிட்டி தலைவர் ஷி ஷென் சென் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவிடம் மன்னிப்புக் கேட்டார்.
ஜப்பான் வீராங்கனை அகானே யாமகுச்சிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் நடுவர் செய்த மகா தவறினால் சிந்து 3 செட் போட்டியில் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கம் வென்றார். ஆனால் உண்மையில் வென்றிருக்க வேண்டிய போட்டி அது.
செமிபைனலில் நடுவரின் அநியாயத் தவறினால் தோற்க நேர்ந்ததில் சிந்துவின் கண்களில் கண்ணீர். இது தொடர்பாக பி.வி.சிந்துவுக்கு ஆசிய பேட்மிண்டன் கழகம் எழுதிய கடிதத்தில் கூறியதாவது:
“அந்தச் சமயத்தில் திருத்துவதற்கு வழியில்லாமல் போய்விட்டது. ஆனால் இந்த மனிதத் தவறு இனியொருமுறை நடக்கக் கூடாது என்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம். இது விளையாட்டின் ஓர் அங்கம், அதை அப்படித்தான் ஏற்க வேண்டும்” என்று கூறியுள்ளது.
முதல் செட்டை சிந்து வென்று 2வது செட்டில் 14-11 என்று முன்னிலைப் பெற்றிருந்தார். ஆனால் சர்வை சிந்து தாமதமாக போட்டார் என்பதற்காக ஒரு புள்ளியை நடுவர் ஜப்பான் வீராங்கனைக்கு வழங்கினார். இதனையடுத்து மனவேதனை அடைந்து உடைந்த சிந்து 21-13, 19-21, 16-21 என்று பரிதாபமாக யாமகுச்சியிடம் தோற்றார்.
இதில் வென்றிருந்தால் பைனல் சென்றிருப்பேன், இந்த பெனால்டி பாயிண்ட் அநியாயம் என்று சிந்து கண்ணீர் விட்டார். எதிரணி வீராங்கனை ரெடியாகவில்லை என்பதால் இவர் தாமதப்படுத்தினால் அதற்கு அபராதம் விதித்தார் நடுவர். இப்போது மன்னிப்பு கேட்டு என்ன பயன், சாம்பியன்ஷிப்பை சிந்து தவற விடுவதற்கு நடுவர் பிழை காரணமாகிவிட்டதே.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: P.V.Sindhu, PV Sindhu