Home /News /sports /

தேசிய தடகள சாம்பியஷிப் போட்டி: தங்கம் வென்ற கிரேஷினா... முதலிடத்தில் தமிழகம்

தேசிய தடகள சாம்பியஷிப் போட்டி: தங்கம் வென்ற கிரேஷினா... முதலிடத்தில் தமிழகம்

கிரேஷினா

கிரேஷினா

கர்நாடக வீராங்கனை ஐஸ்வர்யா அனைவரும் எதிர்பார்த்தது போலவே 14.14 மீட்டர் உயரம் தாண்டி தேசிய சாதனை நிகழ்த்தியது மட்டுமல்லாமல் காமன்வெல்த் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

சென்னையில் நடைபெற்று வரும் தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் உயரம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை கிரேஷினா தங்கம் வென்று சாதனை நிகழ்த்தியுள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பந்தயத்தில் முதலிடத்தில் நீடிக்கிறது.

சென்னை நேரு விளையாட்டு அரங்கில்  61-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி களைகட்டி வருகிறது. இதன் நான்காம் நாளான நேற்றும் தமிழக வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். மகளிர் உயரம் தாண்டுதல் போட்டியில் மூன்று தமிழக வீராங்கனைகள் பதக்கத்திற்காக களம்கண்டனர்.

ஆரம்பம் முதலே அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீராங்கனை கிரேஷினா, அந்தரத்தில் பறந்து அரங்கத்தை அதிரவைத்தார். இறுதியில் 1.82 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை கைப்பற்றி சாதனை நிகழ்த்தினார். 1.78 மீட்டர் தாண்டிய ஹரியானா வீராங்கனை இரண்டாமிடத்தையும், 1.76 மீட்டர் தாண்டிய கேரள வீராங்கனை வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

மகளிர் வட்டு எறிதல் போட்டியில் தமிழக வீராங்கனை காருண்யா 49.24 மீட்டர் தூரம் வட்டு எறிந்து வெண்கலப்  பதக்கத்தை கழுத்தில் ஏந்தினார். பஞ்சாப் வீராங்கனை நவ்ஜீத் 55.67 மீட்டர் வட்டு எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். ஆடவருக்கான வட்டு எறிதல் போட்டியில் பஞ்சாப் வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினர். குறிப்பாக, தங்கம் வென்ற வீரர் கிர்பால் சிங் 60.31 மீட்டர் தூரம் வட்டு எறிந்து 61 ஆண்டுகால போட்டி தொடரின் சாதனையை முறியடித்தார்.
இதையும் படிங்க: ஆசியப் போட்டிகளில் 2 தங்கம் வென்ற, ஒலிம்பிக் வீரர் ஹரி சந்த் காலமானார்
ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிரச்செய்த மகளிர் மும்முறை தாண்டுதல் போட்டியில் வீராங்கனைகள் அந்தரத்தி பறந்து சாகசம் நிகழ்த்தினர். கர்நாடக வீராங்கனை ஐஸ்வர்யா அனைவரும் எதிர்பார்த்தது போலவே 14.14 மீட்டர் உயரம் தாண்டி தேசிய சாதனை நிகழ்த்தியது மட்டுமல்லாமல் காமன்வெல்த் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

நான்காம் நாளின் இறுதியில் நடைபெற்ற கலப்பு பிரிவு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழ்நாடு அணி வெண்கல பதக்கம் வென்று அசத்தியது. ஒலிம்பிக் போட்டியில் களம்கண்ட தமிழக வீராங்கனை சுபா வெங்கடேசன் ஆடவர்களுக்கு நிகராக ஓடி ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே வரவழைத்தார். இன்றுடன் போட்டி நிறைவடையும் நிலையில், புள்ளிகள் பட்டியலில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பதால், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றுவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.
Published by:Murugesh M
First published:

Tags: Sports

அடுத்த செய்தி