Home /News /sports /

தேசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கனிமொழி... கர்நாடக வீராங்கனை ஐஸ்வர்யா சாதனை

தேசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கனிமொழி... கர்நாடக வீராங்கனை ஐஸ்வர்யா சாதனை

தமிழக வீராங்கனை கனிமொழி

தமிழக வீராங்கனை கனிமொழி

சென்னையில் நடைபெற்று வரும் தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் நீளம் தாண்டுதலில்  கர்நாடக வீராங்கனை ஐஸ்வர்யா 6.73 மீட்டர் தாண்டி காம்ன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளார்.

சென்னையில் நடைபெற்று வரும் தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் நீளம் தாண்டுதலில்  கர்நாடக வீராங்கனை ஐஸ்வர்யா 6.73 மீட்டர் தாண்டி காம்ன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளார். அத்துடன் ஈட்டி எறிதலில் அன்னு ராணி காமன்வெல்த் இலக்கை எறிந்து தனது பெயரை பதிவு செய்துள்ளார். 100 மீட்டர் தொடர் ஓட்டம், 100 மீட்டர் தடை ஓட்டத்தில்  தமிழ்நாடு தங்கம் வென்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இந்தியாவின் சிறந்த தடகள வீரர்கள் ஒருங்கே சங்கமித்து தங்களில் யார் தலைசிறந்த வீரர்கள் என்பதை சென்னை நேரு விளையாட்டரங்கில் நிரூபித்துக்கொண்டிருக்கின்றனர். 61 வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரின் மூன்றாம் நாள் கொண்டாட்டம்  நேற்று களைகட்டியது.

மகளிர் நீளம் தாண்டுதல் போட்டியின் இறுதிபோட்டிக்கான  தகுதிச்சுற்றி போட்டி முதலில் நடத்தப்பட்டது. இரண்டு தமிழக வீராங்கனைகள் உட்பட 19 பேர் இதில் பங்கேற்று பலப்பரீட்சை நடத்தினர். இறுதியில் முதல் 12 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் பதக்கத்திற்கான இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவர்.   மின்னல் வேகத்தில் ஓடி கட்டையில் காலை ஊன்றி அந்தரத்தில் பறந்து சாகசம் நிகழ்த்திய கர்நாடக வீராங்கனை ஐஸ்வர்யா 6.73 மீட்டர் நீளம் தாண்டி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதுடன் காமல்வெல்த் வாய்ப்பையும் உறுதி செய்தார். அத்துடன் 2011 ம் ஆண்டு மயோகா நிகழ்த்தி 6.63 மீட்டர் என்ற சாதனையும் முறியடித்தார்.

இதில் தமிழக வீராங்கனைகள் உமா மகேஸ்வரி மற்றும் ஹர்ஷினி முறையே ஆறாவது மற்றும் எட்டாவது இடங்களைப் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளனர். அதே போல் மகளிர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் உத்திரபிரதேச வீராங்கனை அன்னு ராணி 60.97 மீட்டர் ஈட்டி எறிந்து தங்கம் வென்றதுடன் காமன்வெல்த் போட்டிக்கும் தகுதி பெற்று அசத்தியுள்ளார். இதில் ஹரியானா வெள்ளிப் பதக்கத்தையும் ராஜஸ்தான் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றியது.
இதையும் படிக்க: ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை ஏலம்: முதல் நாளில் ரூ.43,000 கோடி-சாதனைகளை உடைத்தது
மின்னல் வேக போட்டிகளில் ஒன்றான 100 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் ஆடவர், மகளிர் என இருவரும் அரங்கம் அதிர சீறிப்பாய்ந்தனர். இதன் மகளிர் பிரிவில் காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெறும் நோக்கில் இந்திய அணியாக வீராங்கனைகள் களமிறங்கினர். இலங்கை அணியும் காமன்வெல்த் இலக்கை கடக்க சிறப்பு அனுமதி பெற்று இந்த போட்டியில் களம்கண்டது.
இதனால் தேசிய அளவிலான இந்த தொடர் இதனால் சர்வதேச போட்டியாகவும் ஜொலித்தது.

இந்திய அணியில் ஹிமா தாஸ், டுடி சந்த், தமிழக வீராங்கனை தனலட்சுமி, சராபானி  ஆகியோர் களமிறங்கினர். டூடி சந்த் ஓட்டத்தை தொடங்க, தனலெட்சுமியின் அதிரடி லீடால் இந்திய அணி 43.95 வினாடியில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. இலங்கை அணி 45.35 வினாடியில் இலக்கை கடந்து வெள்ளியும், கேரள அணி வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றியது. யாரும் காமன்வெல்த் இலக்கை எட்டிப்பிடிக்கமுடியாததால் பதக்கத்தோடு மகிழ்ச்சியடைந்தனர்

இதே போல் ஆடவருக்கு நடைபெற்ற 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழ்நாடு அணி ஆரம்பம் முதலே லீட் எடுத்தது. இலக்கியதாஸின் மின்னல் வேகத்தால் அதிக இடைவெளியுடன் முதலாவதாக இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை கழுத்தில் ஏந்தினர். அத்துடன் 39.88 வினாடியில் இலக்கை கடந்து ஏற்கனவே தமிழ்நாடு அணி படைத்திருந்த 40. 22வி என்ற சாதனையை முறியடித்து திருத்தி எழுதியுள்ளனர். இதில் பஞ்சாப் வெள்ளிப் பதக்கத்தையும் மகாராஷ்டிரா வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றியது.
மேலும் படிக்க: பேட்டிங்கில் தடுமாற்றம்; இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி தோல்வி

முன்னதாக நடைபெற்ற மகளிர் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்ட பந்தயத்தில் தமிழக வீராங்கனை கனிமொழி பந்தய தூரத்தை 13.62 வினாடியில் கடந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதில் மற்றொரு தமிழக வீராங்கனை தபிதா 14.09 வினாடியில் இலக்கை கடந்து வெண்கலம் வென்றார். மேற்கு வங்க வீராங்கனை மௌனிகா 13.86 வினாடியில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கினார்.

ஆடவர் 110 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் சுரேந்தர் 14.18 வினாடியில் இலக்கை கடந்து   வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இதில் மகாராஷ்டிரா தங்கப் பதக்கத்தையும் பஞ்சாப் வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.

ஆடவர் குண்டு எறிதல் போட்டியில்  பஞ்சாப் வீரர் தஜிந்தர் பால் சிங் 20.34 மீட்டர் தூரம் குண்டு எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு பஞ்சாப் வீரர் கரன்வீர் சிங் 19.0 7 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். ராஜஸ்தான் விரர் அக்‌ஷய் வெண்கல பதக்கத்தை தனதாக்கினார்.
Published by:Murugesh M
First published:

Tags: Athlete, Sports

அடுத்த செய்தி