நியூசிலாந்தை
ஆப்கானிஸ்தான் வீழ்த்தும்... இந்தியா அரையிறுதிக்குள் போகும் என்று இலவு காத்த கிளிகளாக டிவி பார்த்துக் கொண்டிருந்த இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கனை வீழ்த்தி நியூசிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த ஆப்கன் அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும், 10-வது ஓவருக்கு பின்னர் பொறுப்பாகவும் அதிரடியாகவும் விளையாடியது. கேப்டன் நஜிபுல்லாஹ் சிக்சரும் ஃபோருமாக விளாச, அவருக்கு கேப்டன் நபி பொறுப்பாக கம்பெனி கொடுத்துக் கொண்டிருந்தார். நஜிபுல்லா 73 ரன்களிலும், நபி 14 ரன்களிலும் வெளியேற அடுத்து வந்தவர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.
ஒரு கட்டத்தில் 140 ரன்களுக்கு மேல் அடித்து விடுவார்கள் என்று எதிர்பார்த்தனர். ஆனால், நியூசிலாந்தின் துல்லியமான பந்து வீச்சால் ஆப்கானிஸ்தானின் ஆட்டம் அடங்கிப் போனது. 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை ஆப்கன் எடுத்தது. நியூசிலாந்துக்கு டார்கெட் குறைவாக இருந்தாலும், கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம் என்பதால் இந்திய ரசிகர்கள் நம்பிக்கை இழக்காமல் மேட்சை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அடுத்து ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து அணி, ரிஸ்க் ஏதும் எடுக்காமல் பொறுமையாக ரன்களை சேர்த்தது. 28 ரன்கள் எடுத்திருந்த மார்ட்டின் குப்தில் ரஷித் கான் சுழலில் போல்டு ஆனார். மற்றொரு ஓபனர் டேரில் மிச்செல், முஜீப் பந்தில் அவுட்சைட் எட்ஜாகி முகமது ஷசாதிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 9 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்திருந்தது. இந்த சூழலில் வெற்றி இரு அணிகளுக்கும் சாதகமாக இருந்ததால், எப்படியும் ஆப்கன் ஜெய்த்து விடும் என்ற நம்பிக்கை இந்திய ரசிகர்களுக்கு நீங்காமல் இருந்தது.
இதன் பின்னர் களத்தில் இணைந்த கேப்டன் கேன் வில்லியம்சனும், டெவான் கான்வாயும் ஆப்கன் பந்து வீச்சை சர்வ சாதாரணமாக எதிர்கொண்டனர். வில்லியம்சன் டெஸ்ட் மேட்சைப் போன்று சிங்கிள் தட்டியே ரன்களை சேர்த்தார். அதிரடிக்கு பெயர் போர் கான்வாயும் ஹிட் ஷாட்டுகளை அடிக்காமல் ரன்கள் எடுத்ததால் ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்தது. 18.1 ஓவரில் நியூசிலாந்து அணி வெற்றி இலக்கை எட்டியது. வில்லியம்சன் 40 ரன்களும், கான்வாய் 36 ரன்களும் எடுத்து களத்தில் நின்றனர்.
இதையடுத்து இந்திய அணியின் உலகக்கோப்பை கனவு தகர்ந்துள்ளது. உலகின் மிகச்சிறந்த அணிகளில் ஒன்றாக கருதப்படும் இந்தியா வெறுங்கையுடன் நாடு திரும்புகிறது. இந்த தொடரில் இந்தியா தனது கடைசி லீக் மேட்சில்... அது நடந்தால் என்ன... நடக்காவிட்டால்தான் என்ன... என்ற மன நிலையில்தான் ரசிகர்கள் உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.