Home /News /sports /

என்னை ஜெயித்து சீனா செல்லட்டும்...! மேரிகோம் - நிகத் ஜரீன் மோதலுக்கான பின்னணி

என்னை ஜெயித்து சீனா செல்லட்டும்...! மேரிகோம் - நிகத் ஜரீன் மோதலுக்கான பின்னணி

News18

News18

  • News18
  • Last Updated :
    ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிப் போட்டியில் அனுபவமிக்க மேரி கோமை சவாலுக்கு அழைத்து வீழ்ந்த இளம் வீராங்கனை நிகத் ஜரீன் தன்னை தவறான வார்த்தைகளால் சீனியர் திட்டியதாக மனம் வெதும்பி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்திய குத்துச்சண்டையில் ஜாம்பவானாக விளங்குபவர் உலக சாம்பியன் மேரி கோம். ஆறு முறை உலக சாம்பியனாகி இருப்பதால் "மெக்னிபீசியன்ட் மேரி" என சர்வதேச அரங்கில் அழைக்கப்படுவர். 2012 ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றபோதும், 2018ல் உலக சாம்பியன் ஆனபோதும் 48 கிலோ பிரிவில் விளையாடி வந்தார். மூன்று குழந்தைகளுக்கு தாயான கோம். 2022 டோக்யோ ஒலிம்பிக்கில் 48 கிலோ நீக்கப்பட்டு 51 கிலோ பிரிவு சேர்க்கப்பட்டுள்ளதால் அப்பிரிவில் பயிற்சி பெற்று வந்தார்.

    இந்நிலையில், கோமின் சாதனைகள் மற்றும் தற்போதைய பார்ம்-ஐ வைத்து சீனாவில் நடைபெறும் ஒலிம்பிக் தகுதிப் போட்டிக்கு நேரடியாக அனுப்ப அரசு முடிவு செய்தது. அதற்கு தெலங்கானா வீராங்கனையும் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பை வென்றவருமான 23 வயது நிகத் ஜரீன் எதிர்ப்பு தெரிவித்தார்.

    தன்னிடம் மோதி ஜெயித்தால் மட்டுமே கோம் சீனா செல்லலாம் எனக் கூறி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு, மேரி கோம், நிகத் உள்ளிட்ட 4 பேரை தேர்வு செய்து தகுதிப் போட்டிக்கு ஏற்பாடு செய்தது. நடப்பு சாம்பியனும் 6 முறை உலக சாம்பியனுமான தான் மீண்டும் தகுதியை நிரூபிக்கவேண்டுமா என்ற வேதனையுடன் களம் இறங்கினார் கோம். முடிவில் மற்ற இருவர் தோற்க நிகத்தும், கோமும் மோத வேண்டியதாகிவிட்டது.

    இப்போட்டியில் இளமைத் துடிப்புடன் வேகமான "பஞ்ச்"களையும் இறக்கி்ய நிகத் ஜரீனை அனுபவத்தாலும், சாதுரியத்தாலும் மேரி கோம் வென்று எதிர்ப்பாளர்கள் வாயை அடைத்தார். ஆனால், நடுவர் முடிவில் சந்தேகத்தை கிளப்பியுள்ள நிகத், போட்டி முடிந்ததும் மேரி நடந்து கொண்ட விதம் பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

    அவர் நடந்து கொண்டவிதம் பிடிக்கவில்லை. முடிவு அறிவிக்கப்பட்டபோது வழக்கம்போல் அவரை கட்டி அணைக்க முயன்றேன். ஆனால் அவர் விலகிவிட்டார், ஜூனியரான நான் சீனியரிடம் மரியாதையை எதிர்பார்த்தேன். கோம் என்னை காயப்படுத்திவிட்டார்.  சீனியரான கோம் தன்னை கெட்ட வார்த்தையில் திட்டியதாக நிகர் குற்றம்சாட்டியுள்ளார்.

    போட்டி முடிந்ததும் போது மேரி கோம் தவறான வார்த்தைகள் பயன்படுத்தினார், எனினும் அது பற்றி நான் கருத்துகூற விரும்பவில்லை.

    இது பற்றி விளக்கம் அளித்துள்ள மேரி கோம், அரசு தன்னை நேரடியாக சீனா அனுப்ப முடிவு செய்தது அறிவிப்பு வந்தபிறகே தனக்குத் தெரியவந்ததாகவும், பின்னர் தகுதி போட்டியில் ஆடவேண்டும் என உத்தரவிடப்பட்டபோதும் மறுக்காமல் அதில் பங்கேற்றதாகவும் கூறியுள்ளார். தன்னைப் போல் சாதனைகளை செய்து விட்டு நிகத் பேசவேண்டுமென்றும், சாதனைகளால் அவர் மேலே உயர்ந்தால் யார் தடுக்கப் போகிறார்கள் என்றும் மேரி கோம் வினவியுள்ளார்.

    சாதித்தபிறகே மூத்தவர்களுக்கு சவால் விடவேண்டும் என்றும், எல்லா குழப்பங்களுக்கும் நிகத்தே காரணம் என்றும் காட்டமாகக் கூறியுள்ளார். இதனிடையே சீனாவில் மேரி கோம் தோற்றால் ஒலிம்பிக்கில் தான் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாகவும் நிகத் ஜரீன் கூறியுள்ளார்.

     

    அனுபவமா? இளமைத்துடிப்பா என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ள நிலையில் இந்த போட்டி தனக்கு நல்ல பாடங்களை கற்றுத்தந்ததாக நிகத் கூறியுள்ளார். அனுபவமோ, இளமையோ நாட்டுக்கு யாரோ ஒருவர் பதக்கம் பெற்றுத்தந்தால் போதும் என்கின்றனர் விளையாட்டு ஆர்வலர்கள்.
    Published by:Sankar
    First published:

    Tags: Marry kom

    அடுத்த செய்தி