சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரில் 17வயதான இளம் வீராங்கனை லிண்டா அறிமுக WTA சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் மைதானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியை நேரில் கண்டு ரசித்து உற்சாகப்படுத்தினார்.
சென்னை ஓபன் WTA சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர் நுங்கம்பாக்கம் மைதானத்தில் கடந்த ஒரு வாரமாக களைகட்டியது.
5 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் சர்வதேச தொடர் துளிர்விட 54 நாடுகளிலிருந்து 64 வீராங்கனைகள் மகுடத்திற்காக சென்னை ஓபனில் பலப்பரீட்சை நடத்தினர்.
இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் 17வயதான செக்குடியரசின் இளம் வீராங்கனை லிண்டா ஃப்ருவிர்டோவா, 30 வயதை எட்டிய அனுபவ வீராங்கனையான போலந்தின் மேக்டா லினெட்-யை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தினார். தன்னைவிட சர்வதேச தரவரிசையிலும், போட்டி தரவரிசையிலும் முன்னணி வீராங்கனையை மிகவும் நம்பிக்கையோடு லிண்டா எதிர்கொண்டார்.
முதல் செட்டை அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய லினிட் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றார்.
2வது செட் ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது. இரு வீராங்கனைகளும் மாறி மாறி புள்ளியை எடுக்க, ரசிகர்களின் கரவோஷத்தால் மைதானம் அதிர்ந்தது. இளம் வீராங்கனை லிண்டாவுக்கு மைதானத்தில் ஆதரவு சற்று அதிகமாக இருந்தது. ரசிகர்களை இருக்கையின் பாதிக்கு கொண்டு வந்த 2வது செட் ஆட்டத்தை லிண்டா 6-3 என போராடி கைப்பற்றி ஆட்டத்தை சமன்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.
வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. 2-4 என்ற புள்ளி கணக்கில் பிந்தங்கியிருந்த லிண்டா தனது அபாரமான சர்வீஸ்களால் ட்ரிபிள் பிரேக் பாய்ண்ட் எடுத்து அரங்கத்தை அதிர்ச்சியில் உரைய வைத்தார்.
சாம்பியன்ஷிப் புள்ளியை கடும் போராட்டத்திற்கு பின் தனதாக்கிய லிண்டா, 3வது செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி, 2-1 என்ற செட் கணக்கில் சாம்பியன் மகுடம் சூடினார்.
இறுதிப்போட்டி நடைபெற தொடங்கிய பொழுது, மைதானத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுமார் 2மணி நேரத்திற்கும் மேலாக மைதானத்தில் இருக்கையில் அமர்ந்து ரசிகர்களோடு போட்டியை கண்டு ரசித்ததுடன் வீராங்கனைகளையும் உற்சாகப்படுத்தினார்.
அனுபவ வீராங்கனையை வீழ்த்தி அறிமுக சென்னை ஓபன்(WTA) பட்டம் வென்ற லிண்டா, மைதானத்தில் வணங்கி, ஆனந்த கண்ணீருடன் மகிழ்ந்து வலம் வந்தார்.
வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய லிண்டா, சென்னை மக்கள் ஆதரவை இது வரை என் வாழ்நாளில் நான் விளையாடிய போட்டிகளில் பார்த்ததே இல்லை. இந்த மக்கள், இங்கிருக்கும் உணவு வகைகள் அனைத்துமே அற்புதமானவை. அனைத்திற்கும், அனைவரின் ஆதரவிற்கும் மிக்க நன்றி! என பேசினார்.
இறுதியில், சென்னை ஓபன் பட்டம் வென்ற இளம் சாம்பியன் லிண்டா மற்றும் 2ஆம் இடம் பிடித்த லினெட் ஆகியோருக்கு கேடயத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சாம்பியன் லிண்டாவிற்கு 26 லட்சம், லினெட்டுக்கு 15 லட்சம் பரிசுத்தொகைக்கான காசோலையை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
முன்னதாக நடைபெற்ற இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற கனடா, பிரேசில் இணைக்கு சாம்பியன் கேடயத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். இறுதிப்போட்டி நிகழ்வில் முதலமைச்சருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ், மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஆ ராசா, தயாநிதி மாறன், விளையாட்டுத்துறை செயலாளர் அபூர்வா, உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜ், சட்டமன்ற உறுப்பினர் எழிலன், உள்ளிட்டோர் இருந்தனர்.
இந்தியாவில் முதல் முறையாக கொண்டாடப்பட்ட மகளிர் டென்னிஸ் திருவிழா ரசிகர்களை ரசிக்க வைத்ததுடன் பல்வேறு பாடங்களையும் கற்றுத்தந்துள்ளது.
செய்தியாளர் : சடையாண்டி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: MK Stalin, Tamilnadu cm, Tennis