Home /News /sports /

டென்னிஸ் எனக்கு வாழ்க்கையைக் கொடுத்தது... ஓய்வை அறிவித்த மரிய ஷரபோவா..!

டென்னிஸ் எனக்கு வாழ்க்கையைக் கொடுத்தது... ஓய்வை அறிவித்த மரிய ஷரபோவா..!

ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரஷ்யாவின் அதிரடி டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவா ஓய்வை அறிவித்துள்ளார்.

2004-ம் ஆண்டு விம்பிள்டன் இறுதிப் போட்டியில் செரினா வில்லியம்சை வென்று பட்டம் வென்ற இந்த மரிய ஷரபோவாவிற்கு அப்போது வயது 17. மிக இளம் வயதில் விம்பிள்டன் பட்டம் வென்ற பெருமையைப் பெற்ற 3-வது பெண்ணான ஷரபோவா, தனது 32-வது வயதில் டென்னிசுக்கு குட்பை சொல்லியுள்ளார்.

  • 4 வயதிலேயே டென்னிஸ் விளையாடத் தொடங்கியவர்


நான்கு வயது குட்டிப்பெண்ணாக இருக்கும்போதே டென்னிஸ் ராக்கெட்டை தூக்கி பந்துகளை பந்தாடத் தொடங்கிய ஷரபோவா, 7 வயதில் முறைப்படி டென்னிஸ் பயிற்சி பெற அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். பின்பு, நிரந்தரக் குடியுரிமை பெற்று அமெரிக்காவில் வசித்தாலும் தான் ரஷ்ய நாட்டவர் என்பதை எங்கேயும் விட்டுக்கொடுக்க முடியாது என்றவர். 18 வயதிலேயே உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக உருவெடுக்க அவரது ஆக்ரோஷமான ஆட்டம் முக்கியக் காரணம்.

  • 5 கிராண்ட் ஸ்லாம், 36 பட்டங்கள், ரூ.270 கோடி பரிசுப் பணம்


விம்பிள்டன், பிரெஞ்ச் ஓபன், ஆஸ்திரேலியா ஓபன் மற்றும் அமெரிக்க ஓபனிலும் மகுடம் சூடி, கேரியர் கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவராகவும் முத்திரை பதித்துள்ளார். மொத்தம் ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 36 WTA சாம்பியன் பட்டங்கள், 270 கோடி ரூபாய் பரிசுப் பணம் என டென்னிஸ் உலகின் முடிசூடா ராணியாக வலம் வந்தவர் மரிய ஷரவோவா.

  • இழந்த உயரத்தை பெற முடியாமல் போராடிய மரிய ஷரபோவா


2016-இல் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதாக இரண்டு ஆண்டுகள் தடை பெற்றபோதே ஷரபோவாவின் சாம்ராஜ்யம் சரியத் தொடங்கியது. மேல்முறையீட்டில் தண்டனைக் காலம் 15 மாதங்களாக குறைக்கப்பட்டு அது முடிந்து மைதானம் திரும்பியபோது இழந்த உயரத்தை எட்டிப் பிடிக்க முடியவில்லை. காயங்களும் பலவீனப்படுத்த கடைசியாக பங்கேற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் முதல் சுற்றிலேயே வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

  • மிட்டாய் கம்பெனி உரிமையாளராகவும் இருக்கும் ஷரபோவா


டென்னிஸ் உலகைத் தாண்டி மரிய ஷரபோவாவிற்கு மாடலிங், மிட்டாய் கம்பெனி என பல தொழில்கள் கைவசம் உண்டு. சுகர்போவா என்ற மிட்டாய் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான இவர், விளம்பரத்திற்காக தனது பெயரை சுகர்போவா என மாற்றலாமா என்று கூட யோசித்தவர். அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனையாக போர்ப்ஸ் பத்திரிகையால் 11 ஆண்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷரபோவா இந்திய மதிப்பில் 2 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.

  • டென்னிஸ் தனக்கு வாழ்க்கை கொடுத்ததாக பிரிவுக் கடிதம்


டென்னிஸிற்கு என் வாழ்க்கையையே கொடுத்தேன், டென்னிஸ் எனக்கு வாழ்க்கை கொடுத்தது என உருக்கமாக பிரிவுக் கடிதம் எழுதி ஓய்வை அறிவித்துவிட்டு மைதானத்தில் ஜொலிப்பதை நிறுத்திக்கொண்டிருக்கிறது இந்த ரஷ்ய நட்சத்திரம்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Tennis, Tennis Star

அடுத்த செய்தி