ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, கங்குலி, தமன்னா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முகமது ரஸ்வி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் பணத்தை இழந்த பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கிறது எனவும், இந்த விளையாட்டை ஊக்கப்படுத்தும் விளம்பர தூதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் விளையாட்டிற்கான விளம்பர படங்களில் நடித்த விராட் கோலி, கங்குலி, பிரகாஷ் ராஜ், தமன்னா, ராணா, சுதீப் கான் மற்றும் ஆன்லைன் ரம்மி கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஐபிஎல்லில் சென்னை, ராஜஸ்தான் என மாநிலத்தின் பெயரில் உள்ள அணிகள், அந்த மாநிலம் சார்பில் விளையாடுகிறதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வியாபார நோக்கத்தில் இப்படி செய்யலாமா? மக்களை தூண்டலாமா? என அடுத்தடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மரபுபடி இது சரியா என்றும், ரசிகர்களின் உணர்ச்சிகளை தூண்டுவதாகவும் கூறினர். விளையாட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்து, வீரர்கள் மூலம் லாபத்தை சம்பாதிப்பதாகவும் நீதிபதிகள் கூறினர்.
இதனிடையே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் தமிழகத்தில் ஒரே நாளில் இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டனர். கோவை மாச்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், சிஎன்சி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். பெற்றோர் மறைந்ததால், தனியாக வசித்து வந்த ஜெயச்சந்திரன், ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்தார்.
ஏற்கெனவே கடன் தொல்லையில் சிக்கி தவித்தவர், சூதாட்டத்தில் தோற்றத்தால் மனவிரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதேபோல், தொண்டாமுத்தூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஜீவானந்தம் எனும் 28 வயது இளைஞரும், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இருவரின் மரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்