ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஆசிய போட்டிகள் 2018: தமிழக வீரரின் வெண்கல பதக்கம் பறிப்பு

ஆசிய போட்டிகள் 2018: தமிழக வீரரின் வெண்கல பதக்கம் பறிப்பு

தமிழக வீரர் லட்சுமணன்

தமிழக வீரர் லட்சுமணன்

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  ஆசிய விளையாட்டுப் போட்டியில்  10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழக வீரர் லட்சுமணன் தடம் மாறி ஓடியதால் வெண்கலப் பதக்கம் பறிக்கப்பட்டது

  புதுக்கோட்டை மாவட்டம் செக்கூரணியை சேர்ந்தவர் லட்சுமணன். சிறுவயதில் இருந்தே தடகள போட்டிகளின் ஆர்வத்துடன் இருந்த லட்சுமணனை அவரது ஊர் மக்கள் வெறுங்கால் லட்சுமணன் என அழைக்கின்றனர். சிறு வயதிலேயே தந்தையை இழந்து வறுமையின் பிடியில் சிக்கி தவித்த லட்சுமணன், தேசிய அளவில் 5,000 மற்றும்  10,000 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் சாதனை படைத்து ராணுவத்தில் பணியில் சேர்ந்தார்.  2015-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள போட்டியின் 5,000 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளியும், 10,000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலத்தையும் கைப்பற்றினார். தொடர்ந்து 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் 5000, 10,000 மீட்டர் ஓட்டத்தில் இரண்டிலும் தங்கம் வென்ற லட்சுமணன், உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

  இந்நிலையில், ஆசிய விளையாட்டு தடகள போட்டியில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர்கள் என எதிர்பார்க்கப்பட்டவர்களில் ஒருவராக பங்கேற்ற லட்சுமணன் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 3-ம் இடம்பிடித்தார்.

  பந்தய இலக்கை 29 நிமிடம், 44.91 விநாடிகளில் கடந்து வெண்கலம் வென்ற லட்சுமணனின் மகிழ்ச்சி, நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இலக்கை எட்ட சுமார் அரை மணி நேரம் எடுத்துக்கொண்ட லட்சுமணனுக்கு, அடுத்த அரை மணி நேரத்தில் ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு வெளியிட்ட ஓர் அறிக்கை இடியாய் அமைந்தது.

  10,000 மீட்டர் ஓட்டத்தில், முதலில் வந்த பஹ்ரைன் வீரர் ஹசன்-ஐ முந்திச் செல்ல முற்பட்ட போது, ஓடுதளத்தை விட்டு விலகிச் சென்றதாக ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு கூறியது. இதனால், தகுதிநீக்கம் செய்யப்பட்டு வெண்கலப் பதக்கத்தையும் பறித்தது.

  100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் டிராக் எனப்படும் ஓடுதளத்தை விட்டு வீரர்கள் விலகி ஓடினாலோ, அருகில் உள்ள கோட்டில் கால் வைத்தாலோ தகுதிநீக்கம் செய்யப்படுவர். அதுவே, 5000, 10,000 மீட்டர் ஓட்டத்தில், எந்த டிராக்கிலும் வீரர்கள் ஓடலாம். ஆனால், லட்சுமணன், மைதானத்தை விட்டு, இடதுபுறம் விலகிச் சென்று இறங்கி ஓடினார். இதுவே, அவரது பதக்கம் பறிக்கப்படுவதற்கு காரணமானது. இதுதொடர்பாக இந்திய தடகள கூட்டமைப்பு மேல்முறையீடு செய்தும், ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு அதை ஏற்கவில்லை. இந்த நிலையில், லட்சுமணன், பல லட்சம் மக்களின் இதயங்களை வென்று விட்டதாகவும், அவர் ஒரு சாம்பியன் என்றும் இந்திய தடகள கூட்டமைப்பு டிவிட்டரில் பதிவிட்டுள்ளது.

  Biggest heartbreaking moment for every Indian at 18th Asian Games Jakarta-Palembang 2018!! #GovindanLakshmanan #AsianGames2018 #AsianGames #IndiaAtAsianGames2018 https://t.co/unKNfIQvTU

  — LatestLY (@latestly) August 26, 2018

  இதற்கு முன், 1986 ஆசியப் போட்டியின் 800 மீட்டர் ஓட்டத்தில், இந்திய வீராங்கனை ஷைனி வில்சன் தடம் மாறி ஓடியதால், பதக்கத்தை இழந்தது குறிப்பிடத்தக்கது.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Asian Games 2018