தேசிய ஜுனியர் ஹாக்கி அணியின் பயிற்சி முகாமிற்கு கோவில்பட்டியை சேர்ந்த 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற தொடங்கியுள்ளனர். இதில், விவசாயின் மகனும் தேர்வாகி கோவில்பட்டி நகருக்கு பெருமை சேர்ந்துள்ளார்.
ஹாக்கி விளையாட்டின் தந்தை என்று அழைக்கப்படும் தியான்சாந்த், நேரில் வந்து வீரர்களுக்கு பயிற்சி அளித்து மெருகூட்டியதால் கோவில்பட்டி நகரம் ஹாக்கிபட்டி என செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறது. களிமண் மைதானத்தில் இருந்து செயற்கை புல்வெளிக்கு ஹாக்கி விளையாட்டு மாறிய பிறகு கோவில்பட்டியில் இருந்து தேசிய அளவிலான ஹாக்கி அணிக்கு வீரர்கள் செல்வது குறைந்து தொய்வு ஏற்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச தரத்திலான செயற்கை புல்வெளி மைதானம் மற்றும் மாணவர் விடுதி கோவில்பட்டியில் அமைக்கப்பட்டதால், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் இங்கு தங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதற்கு கைமேல் பலனாக கோவில்பட்டியில் பயிற்சி பெற்ற இரு வீரர்கள் தேசிய ஜூனியர் ஹாக்கி அணி பயிற்சி முகாமிற்கு கடந்த 2020ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டியில் தமிழக அணிக்கு சிறப்பாக ஆடிய கோவில்பட்டியை சேர்ந்த நிஷிதேவ்அருள், அரவிந்த், கவியரசன், திலீபன் மற்றும் நெல்லையை சேர்ந்த சதிஷ் ஆகியோர் பெங்களுருவில் அடுத்த மாதம் நடைபெறும் இந்திய ஜூனியர் ஹாக்கி அணி பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற தொடங்கியுள்ளனர்.
தேசிய ஹாக்கி அணி பயிற்சி முகாமிற்கு தேர்வாகியுள்ள 5 பேரில் அரவிந்த் என்ற வீரர் கோவில்பட்டி அடுத்துள்ள தெற்கு திட்டங்குளத்தினை சேர்ந்தவர் ஆவர். இவரது தந்தை விஜயராஜ் விவசாயம் செய்து வருகிறார். அவரது தாய் சீனியம்மாள் தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். தாங்கள் அனுபவித்த கஷ்டங்களை போக்கும் விதமாக தங்களது மகன் புகழ் சேர்த்துள்ளதாக அரவிந்தின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவில்பட்டியில் விளையாட்டு மாணவர் விடுதி தொடங்கியது முதல் தற்போது 9 வீரர்கள் இந்திய ஹாக்கி அணி மற்றும் தேசிய பயிற்சி முகாமிற்கு தேர்வு பெற்றுள்ளதாகவும், இது அடுத்து வரும் இளம் தலைமுறை வீரர்களுக்கு உத்வேகம் கொடுத்துள்ளதாகவும் விடுதி பயிற்சியாளர் முத்துக்குமார் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு போன்று இந்தாண்டும் தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி கோவில்பட்டியில் நடைபெற உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழக செயலாளர் குருசித்ரசண்முக பாரதி தெரிவித்துள்ளார்.
அதற்கு ஏற்றாற் போல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ந்தேதி முதல் 25ந்தேதி வரை ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஏற்பாட்டில் தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது. 27 மாநிலங்களை சேர்ந்த அந்த ஹாக்கி போட்டியில் தமிழக அணியில் கோவில்பட்டியை சேர்ந்த 9 வீரர்கள் விளையாடி அசத்தினர். இதில் கோவில்பட்டியை சேர்ந்த நிஷிதேவ் அருள் தான் தமிழக அணியை வழிநடத்தினர். காலியிறுதி போட்டி வரை சிறப்பாக விளையாடி அசத்தி அனைவரின் கவனைத்தினையும் ஈர்த்தனர்.
கோவில்களில் வாரிசுகளை அர்ச்சகர்களாக நியமிப்பதை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை- உயர் நீதிமன்றம் அதிரடி
இந்த நிலையில் தான் அதில் தமிழக அணிக்கு சிறப்பாக ஆடிய கோவில்பட்டியை சேர்ந்த நிஷிதேவ்அருள், அரவிந்த், கவியரசன், திலீபன், நெல்லையை சேர்ந்த சதிஷ் ஆகிய வீரர்கள் பிப்ரவரி 14-ம் தேதி தொடங்கி முதல் அடுத்த மாதம் 31ந்தேதி வரை பெங்களுருவில் நடைபெறும் இந்திய ஜூனியர் ஹாக்கி அணி பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற தொடங்கியுள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள 5 பேரும் கோவில்பட்டி விளையாட்டு மாணவர் விடுதியில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
கோவில்பட்டியில் ஹாக்கி விளையாட்டு என்பது விளையாட்டாக மட்டுமல்ல இங்குள்ள இளம் தலைமுறையினர் சாதனை புரிவதற்கான களமாக அமைந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.