ஐ.பி.எல் 2021 - வீரர்களின் மோசமான ஆட்டம்: பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் புலம்பல்

கே.எல்.ராகுல்

பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு எதிரான ஐ.பி.எல் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதனாத்தில் நடைபெற்றது.

  • Share this:
பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு எதிரான ஐ.பி.எல் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதனாத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பினர். அடுத்து வீரர்கள் பெரிய ஸ்கோர் குவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அந்த அணி 79 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது.

பின்வரிசையில் களமறிங்கிய ஜோர்டன் 18 பந்துகளில் 30 ரன்கள் விளாசி அணியை கவுரமான ஸ்கோருக்கு அழைத்துச் சென்றார். 20 ஓவர் முடிவில் அந்த 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் கேப்டன் இயான் மோர்கன் நங்கூரம்போல் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். 16.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு அந்த அணி 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இயான் மோர்கன் 47 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

6 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி சந்தித்த 4வது தோல்வி இதுவாகும். போட்டிக்குப்பிறகு பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களின் ஆட்டம் குறித்து புலம்பினார். தனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை எனக் கூறிய அவர், பிட்சின் தன்மைக்கு ஏற்ப வீரர்கள் விளையாட தவறவிட்டதாக தெரிவித்தார். பேட்ஸ்மேன்கள் சொதப்பலால் குறைவான ரன்கள் எடுக்க வேண்டியிருந்ததாக தெரிவித்தார். பிட்ச் ஸ்லோவாக இருந்தாலும் 20 முதல் 30 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். சில வீரர்கள் தவறான ஷாட்டுகளை ஆடி எளிமையாக ஆட்டமிழந்தது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக தெரிவித்த கே.எல்.ராகுல், எதிர்பார்த்தது போலவே பிட்ச் ஸ்லோவாக இருந்ததாக கூறினார்.

அடுத்தடுத்து சில போட்டிகள் இதே மைதானத்தில் நடைபெற இருப்பதால், கடந்த போட்டிகளில் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்று வெற்றிப்பாதைக்கு திரும்புவோம் என நம்பிக்கை தெரிவித்தார். ரவி பிஸ்னோய்யின் பீல்டிங்கை பாராட்டிய ராகுல், ஜான்டி ரோட்ஸ் பீல்டிங்கிற்காக சிறப்பான பயிற்சியை வழங்கி வருவதாக கூறினார். 6 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 2 வெற்றி மற்றும் 4 தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. சென்னை அணி 4 வெற்றிகளுடன் முதல் இடத்திலும், 4 தோல்விகளுடன் சன்ரைசர்ஸ் அணி கடைசி இடத்திலும் இருக்கின்றன.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Tamilmalar Natarajan
First published: