அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற
ஐபிஎல் 2021 போட்டியில் ஆர்சிபி அணியிடம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.
முதலில் பேட் செய்த
ராயல் சாலஞ்சர்ஸ் அணி 15வது ஓவரில் 114/4 என்று தடுமாறிக்கொண்டிருந்தது. கடைசியில் பவுலிங் போட ஆளில்லாமல் ஸ்டாய்னிஸிற்கு முதல் ஓவரைக் கொடுக்க ஏ.பி.டிவில்லியர்ஸ் 3 சிக்சர்களுடன் 23 ரன்களை விளாசித் தள்ளினார். டிவில்லியர்ஸ் 42 பந்துகளில் 3 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 75 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ ஆர்சிபி அணி வெற்றி ஸ்கோரான 171/5-ஐ எட்டியது.
தொடர்ந்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித் சொதப்ப, பிரிதிவி ஷா 21 ரன்களில் வெளியேற ரிஷப் பந்த் 48 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தும் டெல்லி தோல்வி அடைந்தது ஆச்சரியமெனில் ஷிம்ரன் ஹெட்மையர் 25 பந்துகளில் 53 ரன்கள் விளாசியும் போதாமல், ஸ்டாய்னிஸ் தான் கொடுத்த 23 ரன்களில் 22 ரன்களை எடுத்துக் கொடுத்தும்
டெல்லி அணி 1 ரன் குறைவாக எடுத்து தோல்வி தழுவியது கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
இஷாந்த் சர்மா, ரபாடா, ஆவேஷ் கான் ஆகியோர் ஓவர்களை முன்னமேயே முடித்து, டிவிலியர்ஸுக்குக் கொண்டு போய் நேர் நேர் தேமா பவுலர் ஸ்டாய்னிஸிடம் கொடுக்கும் அளவுக்கு கேப்டன்சியில் சிறுவனாக இருக்கிறார் ரிஷப் பந்த். அனுபவம் வாய்ந்த அமித் மிஸ்ரா 3 ஓவர் 27 ரன் ஒரு விக்கெட், அவரிடம் கொடுத்திருந்தாலாவது டிவில்லியர்ஸ் ஆட்டமிழந்திருக்க வாய்ப்பு உண்டு.
இது போன்ற கேப்டன்சி தவறுகள், பீல்டிங் வியூகத் தவறுகள், சாதுரியமான, புத்திசாலித்தனமான கேப்டன்சி இன்மை என்று சேவாக், ரிஷப் பந்த் கேப்டன்சிக்கு 10க்கு 3 மதிப்பெண் மட்டுமே கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக சேவாக் கூறியதாவது:
ரிஷப் பந்த் கேப்டன்சி பண்ணிய லட்சணத்திற்கு நான் அவருக்கு 10-க்கு 5 மதிப்பெண் கூட தரமாட்டேன். ஏனெனில் அத்தகைய தவறுகளை ஒருவர் செய்ய முடியாது. உங்கள் மெயின் பவுலர் கடைசி ஓவரை வீசவில்லை எனில் உங்கள் கணக்கெல்லாம் தப்பாகி விடும். இதுதான் கேப்டன்சி என்பது. இதை கவனமுடன் கையாள்வது அவசியம்.
சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒரு கேப்டன் தன் பவுலிங் ஆதாரங்களைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதை ரிஷப் பந்த் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நீங்கள் விரும்பும் யாரிடம் வேண்டுமானாலும் பவுலிங் செய்ய பந்தை கொடுப்பதில்தான் முடியும்.
ஆட்டத்தின் போக்கை எப்படி மாற்றுகிறார் என்பதைப் பொறுத்தே ஒருவரின் கேப்டன்சி திறமையை எடைபோட முடியும். அவர் அதற்கேற்ப பவுலிங் மாற்றங்களையும் களவியூகத்தையும் அமைக்க வேண்டும்.
எனவே ரிஷப் பந்த் நல்ல கேப்டனாக வேண்டுமெனில், சிறு சிறு விஷயங்களை அவர் கவனம் செலுத்த வேண்டும். ஸ்மார்ட் கிரிக்கெட் ஆட வேண்டும். அப்போதுதான் ஸ்மார்ட் கேப்டனாக முடியும். பந்த் கேப்டன்சிக்கு 10க்கு 3 மார்க்தான் தருவேன், என்றார் சேவாக்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.