• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • தோனியிடமிருந்து ஏன் பெரிய ரன்களை எதிர்பார்க்க முடியாது?- ஓர் அலசல்

தோனியிடமிருந்து ஏன் பெரிய ரன்களை எதிர்பார்க்க முடியாது?- ஓர் அலசல்

தோனி

தோனி

தோனி பார்முக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்தாலும் 40 வயதில் அவரை பழைய தோனி மாதிரி ஆட எண்ணுவதும் ஒரு தவறுதான், அவர் தன் ரோலை பிக்ஸ் செய்து கொண்டு தெளிவாக இருக்கிறார்.

  • Share this:
தோனி என்றால் எப்போதும் தெளிவு, விவரம்.. என்பதை மறந்து விடக்கூடாது, அவர் கங்குலி, திராவிட் கேப்டன்சியில் ஆக்ரோஷ வீரராக களத்தில் முன்னால் இறக்கி அடிக்கச் சொல்வார்கள், அவரும் அதில் சோபித்தார், ஆனால் ஒருமுறை உலக டாப் பவுலர்கள் தன்னைக் குறிவைத்துத் தாக்கினால் தான் அணியிலிருந்தே நீக்கப்படுவோம் என்ற தீர்க்கமான பார்வை தோனிக்கு இருந்தது. அதனால்தான் டெஸ்ட் போட்டி தனக்கு சரிப்பட்டு வராது என்று ஓய்வு பெற்றார். மிகத்தெளிவாக கிரிக்கெட் ஆட்டத்தை தன் வாழ்வாதார, வணிக, வர்த்தக வாழ்வாதாரமாக மாற்ற டெஸ்ட் போட்டி உதவாது என்பதை அவர் அறிந்திருந்தார். இப்போது ரிஷப் பந்த்தும் சாமர்த்தியமாக தோனி பாணியில் யோசித்தால், ‘அப்பா! கோலி! போதும் ஆக்ரோஷமெல்லாம் போதும் நான் என் கேமை ஆடுகிறேன், நீ உன் கேமை ஆடு, எனக்கும் கிரிக்கெட் கரியர் (career)முக்கியம்’ என்று முடிவெடுத்திருப்பார்.

அதே போல் கிரிக்கெட்டின் மேல் தோனிக்கு உண்மையான பற்றுதல் இருந்திருந்தால் உள்நாட்டு கிரிக்கெட்டில் ரஞ்சி டிராபி, துலீப் டிராபி போன்றவற்றிலும் உள்நாட்டு டி20 போட்டிகளிலும் அவர் அதிகம் ஆடியிருப்பார், ஆனால் அவற்றிலெல்லாம் அனாவசியமாக ஆடி தன் உடல்தகுதியையும் ஆரோக்கியத்தையும் அவர் இழக்க விரும்பவில்லை அதற்கும் மேலாக விக்கெட் கீப்பர் என்ற ‘யுனிக்’ தன்மையை அவர் காயத்தில் இழக்க விரும்பவில்லை. ஒரு அணிக்கு தோனி போல் பேட்ஸ்மென்கள் கிடைப்பார்கள், ஆனால் விக்கெட் கீப்பரை அவ்வளவு எளிதில் மாற்று கொண்டு வர முடியாது, இதை தெளிவாகப் புரிந்து கொண்டு விக்கெட் கீப்பிங்கை விட்டுக் கொடுக்காமல் செய்தார். ஒரு பீல்டர் டைவ் அடித்து பீல்டிங் செய்தாலே காயமடைந்து விடாதே என்று அடுத்தவரை எச்சரிக்கும் தோனி தன் கரியரை எப்படி பாதுகாத்துக் கொள்வார் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

எனவேதான் கேப்டனான பிறகு தெள்ளத்தெளிவாக, விவரமாக பினிஷர் என்ற ரோலை எடுத்துக் கொண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் 40 ஓவர்களுக்குப் பிறகு இறங்குவது, டி20யில் கடைசி 5 ஓவர்கள் ஆடுவது என்று தன் கரியரை வடிவமைத்து கொண்டார். அதாவது தன்னை மொத்தமாகவே எந்த ஒரு வடிவமாக இருந்தாலும்10-15 ஓவர்களுக்கான வீரராகவே தன்னை மாற்றி வடிவமைத்துக் கொண்டார், இதனால் உடல்நலம் பாதுகாக்கப்படும், கரியர் நீண்ட காலம் தொடரும் கரியர் தொடரத் தொடர வர்த்தகம் தொடரும். தன்னுடைய விளம்பர நடிப்பு பணமழைக்கும் கேடு வராது. ஆனால் மற்ற வீரர்களை அவர் இறக்கும் போது, உதாரணமாக தினேஷ் கார்த்திக் முன்னால் இறங்கி தன்னை நிரூபித்தாக வேண்டும். பார்த்திவ் படேல் தொடக்கத்தில் இறங்கி நிரூபிக்க வேண்டும் அப்பொதுதான் அவர்கள் அணியில் நீடிக்க முடியும். இந்த நிலையிலிருந்து தன்னை சாமர்த்தியமாக விடுவித்துக் கொண்டார் தோனி.

ஐபிஎல் போன்ற கிரிக்கெட்டில், அல்லது எந்த ஒரு கிரிக்கெட்டிலும் களத்தில் இருக்கும் வரை அது வர்த்தக மதிப்பைக் கூட்டும்.



ஓய்வு பெற்ற வீரருக்கு வர்த்தக மதிப்பு குறைவுதான் என்கிறது வணிகத்துவ-விளம்பர வர்த்தக உலகம். இவையெல்லாம் அவருக்கு நன்றாகத் தெரியும். கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக தொடர்வதற்கு கடினமான போட்டிகளில் பங்கேற்றால்தான் பேட்டிங் பார்மைத் தக்க வைக்க முடியும். தோனி சீரியஸான கிரிக்கெட்டை 2019 உலகக்கோப்பைக்குப் பிறகு ஆடவில்லை, அதற்கு முன்னரும் கூட அவர் சீரியசான கிரிக்கெட்டை ஆடவில்லை, எந்த கிரிக்கெட்டாக இருந்தாலும் அவர் தன்னை 10-15 ஒவர்களுக்கான வீரராகவே வழங்கிக் கொள்வார், இதனால் பெரிய அளவுக்கு உடல் ஆற்றல் இழப்பு ஏற்படவில்லை. மற்றபடி சச்சின் போலவோ, திராவிட் போலவோ இப்போது கோலி, ரோகித் சர்மா போலவோ தோனியினால் வதவதவென்று ஆட முடியாது, அது அவரது பலவீனம் என்பதை விட தன் கிரிக்கெட் வாழ்க்கையை வர்த்தக வாழ்க்கையுடன் அழகாக இணைத்து அதற்குத் தக தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளார்.

2011 உலகக்கோப்பை என்று எதிர்வாதம் முன் வைக்கலாம் ஆனால் அந்தத் தொடரிலேயே அவர் இறுதிப் போட்டியைத் தவிர வாய்ப்பு கிடைத்த போட்டிகளில் சரியாக ஆடவில்லை. இறுதிப் போட்டியில் செம பார்மில் இருந்த யுவராஜ் சிங்கிற்கு முன்னதாக தான் இறங்கினார், இது தெள்ளத் தெளிவான அவரது கரியரை முன்னேற்ற எடுத்த முடிவு, அதுவரை யுவராஜ் சிங் தான் பிரமாதமாக ஆல்ரவுண்ட் பெர்பாமன்ஸ் கொடுத்தார். பைனலில் இறங்கி தான் மட்டும் வெற்றி பெறச் செய்து விட்டால் பெரிய பெயர் கிடைக்கும் மதிப்பு உயரும் என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டு அதன் படியே செய்தும் காட்டினார். உண்மையில் அதன் பிறகுதான் தோனியின் வர்த்தக-வணிக-விளம்பர மதிப்பு உச்சத்துக்குச் சென்றது என்றால் அது மிகையல்ல.

இந்திய அணியின் கேப்டன்சியும் அவருக்கு இதற்கு ஒருவகையில் துணையாக அமைந்தது, வேறு ஒருவர் கேப்டன்சியில் இவர் தான் எப்படி ஆடுவது, தன் டவுன் ஆர்டர் எது என்பதையெல்லாம் முடிவு செய்ய முடியாது, அணிக்காக கேப்டன் என்ன சொல்கிறாரோ அதை செய்தாக வேண்டும், ஆனால் தானே கேப்டன் எனும்போது என்ன வேண்டுமானாலும் முடிவு எடுத்துக் கொள்ளலாம்.

மகேந்திர சிங் தோனி


ஏனெனில் தோனிக்கு கடினமான கிரிக்கெட்டை ஆடுவதற்கான பேட்டிங் உத்தி இல்லை. அதனால் என்ன செய்கிறார் என்றால் அடிக்க வேண்டிய பந்தை இவர் முன் கூட்டியே நாம் முதல் 10 பந்தை ஒரு ரன் எடுப்போம், 2 எடுப்போம் என்று ஆடுவார். அதில் 2 பந்துகள் சிங்கிள் அல்லது 2 ரன்களுக்கு மாட்டும் அதனால்தான் 10 பந்தில் 2 அல்லது 4-5 ரன்கள் என்ற விகிதத்தில்தான் இப்போதெல்லாம் அவரால் எடுக்க முடிகிறது. சேவாக் போன்றவர்களுக்கு இந்த இடத்தில் ஒரு பந்து பிட்ச் ஆனால் அது சிக்சர் பந்தாயிருந்தால் சிக்ஸ், நான்கு ரன் பந்தாக இருந்தால் நான்கு, தோனி அப்படி ஆட மாட்டார், ஏனெனில் அவர் நேச்சுரல் ஹிட்டர் கிடையாது. பெரிய ஹிட்டர்தான் ஆனால் நேச்சுரல் ஹிட்டர் அல்ல.

எனவே கிரிக்கெட் கரியருக்காக தன் பேட்டிங்கை சுருக்கிச் சுருக்கி மேம்படுத்த வழியில்லாமல் மேம்படுத்தும் சுய முனைப்பு இல்லாமலேயே அவருக்கு ஒரு கரியர் அமைந்து விட்டது, இனி மேல் போய் அவரை பழைய மாதிரி ஆடுங்கள் என்றால் அவரால் முடியாது. ஏனெனில் பழைய மாதிரியிலேயே அவர் தன்னை 10-15 ஒவர்களுக்கான பேட்டராகத்தான் வடிவமைத்துக் கொண்டார், இப்போது டி20-யில் அந்த வாய்ப்பும் இல்லை அவர் 2-3 ஓவருக்கான வீரராகி விட்டார், அதனால்தான் அவரால் அடிக்க முடியவில்லை. கெய்ல் இவருக்கு நேர்மாறு, அவர் தன் அதிரடியையே கரியராக மாற்றி டி20 லீகுகளில் உலகம் நெடுக ஆடுகிறார். எதற்காகவும் அவர் தன்னை சுருக்கிக் கொள்ளவில்லை தான் முதலில் கிரிக்கெட் வீரன் அதன் வளத்தில்தான் நான் ஒரு வணிகனும் என்ற நிலைப்பாடு, ஆனால் தோனியினுடையது முதலில் கரியர், வர்த்தகம் அதற்கான துணைப்பொருள்தான் கிரிக்கெட்.

இந்நிலையில்தான் மேற்கிந்திய வீரர் பிரையன் லாரா ’பந்து மட்டையில் படுவதிலேயே அவர் திருப்தி அடைகிறார்’ என்றும் இயன் பிஷப், “இனி தோனி பார்முக்கு வருவது கடினம்’ என்றும் வேறு மாற்று வீரர்களைத் தயார் படுத்த வேண்டும் என்று கருத்துக் கூறுகின்றனர், ஆனால் ஐபிஎல் உலகம் கமர்ஷியல் உலகம் இங்கு கிரிக்கெட் இறுதி இலக்கும் லட்சியமும் அல்ல, கிரிக்கெட் ஒரு உபகரணம், ஒரு வர்த்தகச் சாதனம் அவ்வளவே என்பது இவர்களுக்கு புரிய இன்னும் கொஞ்ச நாளாகும். அதாவது ஐபிஎல் கிரிக்கெட்டில் "cricket is not end in itself, its a means for other purposes"  என்பது உறைக்க காலம் பிடிக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: