Home /News /sports /

சாகல், குல்தீப் யாதவை விடவும் டி20-யில் பிரமாத சிக்கன விகிதம்: இந்திய டி20 அணியில் அஸ்வினை தொடர்ந்து புறக்கணிப்பது ஏன்?

சாகல், குல்தீப் யாதவை விடவும் டி20-யில் பிரமாத சிக்கன விகிதம்: இந்திய டி20 அணியில் அஸ்வினை தொடர்ந்து புறக்கணிப்பது ஏன்?

அஸ்வின்

அஸ்வின்

ஒட்டுமொத்தமாகப் பார்த்தாலும் உள்நாடு, வெளிநாடு என்று பார்த்தாலும் 46 போட்டிகளில் 52 விக்கெட்டுகள், சிக்கன விகிதம் 6.97. இதிலும் பும்ரா (6.06) வுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். சாஹல் 8.40, ஜடேஜா 7.10, குல்தீப் 7.11. இன்னும் என்னதான் வேண்டும் கோலிக்கும் ரவிசாஸ்திரிக்கும் அஸ்வினிடமிருந்து?

மேலும் படிக்கவும் ...
  டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்களிலிருந்து இன்று கோலி, ரவிசாஸ்திரி கூட்டணியினால் ஒழிக்கப்படும் அஸ்வின் உண்மையில் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்கன விகிதம் வைத்திருப்பதில், அதாவது ஓவருக்குக் குறைவான ரன்களை விட்டுக் கொடுப்பதில் சாஹல், குல்தீப்பை விடவும் சிறந்து விளங்குகிறார்.

  கடைசியாக அஸ்வின் டி20 போட்டியில் இந்தியாவுக்காக ஆடும்போது தோனி இருந்தார். அதற்கு முன்பாகத்தான் பாகிஸ்தான், இந்திய அணியை ஐசிசி தொடரில் வீழ்த்தியிருந்தது.

  ஆனால் அஸ்வின் அணித்தேர்வு, கேப்டன் பார்வைக்கு வரவே இல்லை. சாஹல், குல்தீப் யாதவ் என்ற ரிஸ்ட் ஸ்பின் மோஸ்தர் உருவானது. இப்போது குல்தீப் கூட இந்தியாவின் டி20 அணியில் இருக்கிறார், ஆனால் அஸ்வின் காணோம்.

  இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ளன. அனைத்து மைதானங்களிலும் டாப் 5 டி20 சிக்கன பவுலர்களில் அஸ்வின், குல்தீப் உள்ளனர். இதில் அஸ்வின் குல்தீப், சாஹலை விடவும் சிக்கன விகிதத்தில் சிறந்து விளங்குகிறார் என்கிறது புள்ளி விவரம்.

  அஸ்வின் ஒரு ஸ்பின் அதிசயம்:

  ஆஃப் ஸ்பின், டாப் ஸ்பின், ஆஃப் ஸ்பின் ஆக்‌ஷனிலேயே நேராக விடுவது, லெக் ஸ்பின் போடுவது, ஆர்ம் பால் போடுவது, வேகம், திசை, பிளைட், டிரிப்ட்டில் பல நிபுணத்துவங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் ஜித்தன் அவர்.

  2016 டி20 உலகக்கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான காலிறுதிப்போட்டி பெங்களூருவில் நடந்தது. இதில் இந்தியாவுக்கு 1 ரன்னில் த்ரில் வெற்றி கிடைத்தது. அது ஒரு திக் திக் மேட்ச். அதில் அஸ்வின் 4 ஓவர்களில் 20 ரன்களுக்கு 2 விக்கெட் கைப்பற்றினார். மற்றவர்கள், ஜடேஜா நீங்கலாக ஓவருக்கு சராசரி 7 ரன்களை வழங்கியிருந்தனர்.  2013 சாம்பியன்ஸ் டிராபி இறுதி இங்கிலாந்தில் நடைபெற்றது அதையும் மறக்க முடியாது, அது மழை காரணமாக இங்கிலாந்துக்கு எதிராக 20 ஓவர் போட்டியானது. அதில் அஸ்வின் 4 ஓவர்களில் 15/2 என்று அதி சிக்கனம் காட்டினார். இதில் ஒரு மெய்டனும் உண்டு. இங்கிலாந்தின் டாப் வீரர் ஜானதன் ட்ராட்டை ஸ்டம்ப்டு முறையில் அவுட் செய்தார், தோனி பின்னால் அபாரமாக செயல்பட்டார். பிறகு ஜோ ரூட்டையும் அஸ்வின் வீட்டுக்கு அனுப்பினார்.

  பர்மிங்ஹாமில் நடந்த அந்த இறுதிப் போட்டியில் அஸ்வின் 3 கேட்ச்களையும் எடுத்தார். அஸ்வின் அத்துடன் மறைந்து விடவில்லை, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தனது ஸ்பின் ஆயுதத்தில் புதிதாக சில விஷயங்களை புகுத்தி வருகிறார், தொடர்ந்து கடினமாக உழைத்து வருகிறார். சரியான நேரத்தில் சரியான விக்கெட்டையும் எடுத்துக் கொடுக்கிறார். இதையெல்லாம் விட ஐபிஎல் தொடர்களில் வெற்றிகரமான பவுலராகத் திகழ்கிறார்.

  உள்நாட்டில் சிக்கன விகிதம் சிறந்து விளங்கும் டாப் 5 பவுல்ர்கள் இதோ:

  சாஹல் 2017-21, 22 மேட்ச் 32 விக்கெட்டுகள் சிக்கன விகிதம் 8.43

  ஜஸ்பிரித் பும்ரா 2016-20, 25 மேட்ச் 26 விக்கெட், 6.42.

  ரவிச்சந்திரன் அஸ்வின் (2011-16), 16 மேட்ச் 19 விக்கெட் சிக்கன விகிதம் 7.16

  குல்தீப் யாதவ் 2017-20, 11 மேட்ச் 18 விக்கெட் சிக்கன விகிதம் 8.00

  புவனேஷ் குமார் 2012-21, 18 மேட்ச் 16 விக்கெட், 7.60.

  பும்ரா (கோப்பு படம்)


  இதில் பும்ராவுக்கு அடுத்த இடத்தில் அதி சிக்கன விகிதத்தில் அஸ்வின் இருக்கிறார், இன்னும் என்ன வேண்டும்? ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த 3 தொடர்களில் 38 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

  ஒட்டுமொத்தமாகப் பார்த்தாலும் உள்நாடு, வெளிநாடு என்று பார்த்தாலும் 46 போட்டிகளில் 52 விக்கெட்டுகள், சிக்கன விகிதம் 6.97. இதிலும் பும்ரா (6.06) வுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். சாஹல் 8.40, ஜடேஜா 7.10, குல்தீப் 7.11. இன்னும் என்னதான் வேண்டும் கோலிக்கும் ரவிசாஸ்திரிக்கும் அஸ்வினிடமிருந்து?

  டி20 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது, நிச்சயம் அஸ்வின் அணியில் இடம்பெற வேண்டும், அதற்கான அத்தனை விஷயங்களும் அவரிடம் உள்ளன.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Captain Virat Kohli, Cricket, Jasprit bumrah, R Ashwin, Team India, Yuzvendra chahal

  அடுத்த செய்தி