Ravichandran Ashwin | என் குழந்தைகளுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, என் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான்: அஸ்வினின் கொரோனா துயரங்கள்

ரவிச்சந்திரன் அஸ்வின்

கொரோனாவிலிருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே வழி. அதில் சந்தேகமேயில்லை, தயவு செய்து தடுப்பூசிப் போட்டுக் கொள்ளுங்கள்” என்று அஸ்வின் கூறியுள்ளார். என் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான் என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார் அஸ்வின்.

  • Share this:
    அஸ்வின் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி வீடு திரும்பினார். இந்நிலையில் தன் குடும்பத்தினர் கொரோனாவினால் பட்ட அவதியின் வேதனையை பகிர்ந்துள்ளார் அஸ்வின்.

    தன் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான் என்று கூறியுள்ளார் அஸ்வின். மேலும் தடுப்பூசிகள் பற்றி வெளியில் உலவும் அச்சங்கள், முன் அனுமானங்கள், எதிர்மறை எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் அஸ்வின் பேசியுள்ளார்.

    கொரோனா 2-ம் அலையில் சீரியஸ்னெஸ் என்பதைப் பற்றி நான் பேசுகிறேன். அதுவும் என் குடும்பத்தினர் கடைசி சில தினங்கள் அனுபவித்த துன்பங்களையும் பேசுகிறேன். அதே போல் வாக்சின்கள் அல்லது தடுப்பூசிகளின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறேன். அது நம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு மிக மிக அவசியம் என்று கூறுவேன்.

    நான் ஐபிஎல் ஆடிக்கொண்டிருந்ததால் என் மனைவி, பெற்றோர்கள் என்னிடம் தகவல் தெரிவிக்கவில்லை. ஆனால் என் குழந்தைகளுக்கு 3-4 நாட்கள் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மருந்து மாத்திரைகள் கொடுத்தும் நிற்கவில்லை.

    என்ன செய்வது என்று தெரியாத நிலையில் மனைவி பிரீத்தி என்னிடம் தெரியப்படுத்தினார். என் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டது பிறகுதான் தெரிந்தது. முதல் 5 நாட்கள் என் தந்தை நன்றாக இருந்தார், பிறகு ஆக்சிஜன் அளவு 85 ஆகக் குறைந்தது. மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்த்தோம். குணமடைந்து வீடு திரும்பிய நிலையிலும் பல நாட்கள் அவரது ஆக்சிஜன் அளவில் முன்னேற்றம் இல்லை.

    தந்தைக்கு வேறு சில உபாதைகளும் இருந்தன, இருப்பினும் கொரோனா இருகட்ட தடுப்பூசிகளையும் அவர் போட்டுக் கொண்டதால்தான் அவர் மீண்டார். என் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான். உங்களுக்கு கொரோனா குறித்த எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்களால் குழந்தைகள், குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு அழிவுக்குக் காரணமாகி விடலாம்.

    கொரோனாவிலிருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே வழி. அதில் சந்தேகமேயில்லை, தயவு செய்து தடுப்பூசிப் போட்டுக் கொள்ளுங்கள்” என்ற அஸ்வின்.

    கொரோனா சிகிச்சையில் இருக்கும் மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் தன் நன்றியை பதிவு செய்துள்ளார் அஸ்வின்.
    Published by:Muthukumar
    First published: