நான் ஒன்றுக்கும் உதவாதவனா? 10 ஆண்டுகள் நாட்டுக்குச் சேவையாற்றியுள்ளேன்; இம்ரான் தாகிர் கண்ணீர்

இம்ரான் தாகிர்

உலகக்கோப்பை டி20 அணியில் தென் ஆப்பிரிக்கா ஃபாப் டு பிளேசிஸ் மற்றும் இம்ரான் தாகிர் ஆகியோரைச் சேர்க்கவில்லை, இதனால் இம்ரான் தாகிர் கடுப்பாகியுள்ளார்.

 • Share this:
  டுபிளெசிஸ் மற்றும் இம்ரான் தாகிர் இருவரும் டி20 கிளப் கிரிக்கெட்டில் பல அணிகளில் ஆடி அனுபவம் பெற்றவர்கள், டுபிளெசிஸ் பேட்டிங்கிலும் இம்ரான் தாகிர் பவுலிங்கிலும் இந்த லீகுகளில் கலக்கி வருகின்றனர், இந்நிலையில் இவர்களை உட்கார வைத்து பெரும் தவறிழைத்து விட்டது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம். இதனால் இம்ரான் தாகிர் மனமுடைந்துள்ளார்.

  உலகக்கோப்பை டி20-க்கான தென் ஆப்பிரிக்க அணி வருமாறு: தெம்பா பவுமா (கேப்டன்), குவிண்டன் டீ காக், போர்ட்டுயின், ஹென்றிக்ஸ், கிளாசன், லிண்டே, கேசவ் மகராஜ், மார்க்ரம், டேவிட் மில்லர், முல்டர், லுங்கி இங்கிடி, பெலுக்வயோ, ஆன்ரிச் நார்ட்யே, பிரிடோரியஸ், ரபாடா, ஷம்சி, வான் டெர் டியூசன், எல்.வில்லியம்ஸ்.

  இந்நிலையில் அணியில் தேர்வு செய்யப்படாத இம்ரான் தாகிர் கூறியதாவது: “நான் அணியில் இல்லாதது மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. கடந்த ஆண்டு கிரேம் ஸ்மித் என்னிடம் பேசினார், அப்போது நான் உலகக்கோப்பையில் ஆட வேண்டும் என்று அவர் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். நான் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டேன், மேலும் இது மிகப்பெரிய கவுரவம், மரியாதை என்று ஸ்மித்திடம் கூறினேன்.

  எல்லா லீகுகளிலும் என் ஆட்டத்தை பார்த்து வருகிறீர்கள், நான் ஆட்டத்தில் சோடை போகவில்லை, கடினமாக உழைக்கிறேன். ஏ.பி.டிவில்லியர்ஸ், டுபிளெசிஸ் ஆகியோரிடமும் பேசப்போகிறேன். யாருமே என்னை தொடர்பு கொள்வதுமில்லை. நான் ஸ்மித், பவுச்சருக்கு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பினேன் பதில் இல்லை. பவுச்சர் கோச் ஆன பிறகும் கூட அவர் என்னை அழைக்கவில்லை.

  இது உண்மையில் வருத்தமாக இருக்கிறது. நான் நாட்டுக்காக 10 ஆண்டுகள் சேவை புரிந்துள்ளேன். நான் ஒன்றுக்கும் உதவாதவன் என்று இவர்கள் நினைத்தால் அவர்களுக்குக் கூறுகிறேன் நான் இன்னும் கூடுதல் மரியாதைக்குரியவனே. தென் ஆப்பிரிக்காவுக்காக நான் உலகக்கோப்பையை வென்றுதருவதில் ஆவலாக இருக்கிறேன். நான் ஓய்வு அறிவிக்க விரும்பவில்லை நான் 50 வயது வரை ஆடத்தான் போகிறேன்” என்று பொரிந்து தள்ளினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Muthukumar
  First published: