ஐ.பி.எல் 2021 சீசனில் 9-வது அணியாக புதிய அணியை சேர்க்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அந்த அணியை வாங்க பிரபல தென்னிந்திய சூப்பர்ஸ்டார் நடிகர் ஆர்வம்காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் மாதத்தில் நடைபெற இருந்த ஐ.பி.எல் 2020 தொடர் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கியது. ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் 2020 எந்தவித பாதிப்புமின்றி வெற்றிகரமாக முடிந்துள்ளது. டெல்லி அணி உடனான இறுதிப் போட்டியில் மும்பை அணி 5 விக்கெட்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்று 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஐ.பி.எல் 2020 தொடரை பிசிசிஐ வெற்றிகரமாக நடத்தி முடிந்திருந்தாலும் தொடரை வெளிநாட்டில் நடத்தியது, மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது, சீன டைட்டில் ஸ்பான்சர் விலகியது என எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. இதை சரிக்கட்ட அடுத்த ஐ.பி.எல் தொடரில் 9-வது அணியாக புதிய அணியை களமிறக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்கான வேலைகளில் சவுரவ் கங்குலி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அஹமதாபாத் நகரை மையமாக கொண்டு புதிய அணியை களமிறக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் பொதுவாக டிசம்பர் மாதங்களில் நடைபெறும். ஆனால் இந்த வருடம் கொரோனாவால் போட்டிகள் தள்ளிப்போனதால் அடுத்த வருடம் ஜனவரி மாதம் இறுதியில் ஐ.பி.எல் மெகா ஏலம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது
இதனிடையே ஐ.பி.எல் புதிய அணியை வாங்குவதற்கு நடிகர் மோகன் லால் ஆர்வம் காட்டி வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக தான் ஐ.பி.எல் 2020 தொடரின் இறுதிப்போட்டியில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொண்டுள்ளார். மேலும் பிரபல கல்வி செயலியான பைஜூஸ் நிறுவனத்துடன் இணைந்து அவர் 9-வது அணியை வாங்க உள்ளார். அதற்கான வேலைகளையும் துபாய் சென்ற அவர் கவனித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் ஷாருக் கான், நடிகை ப்ரீத்தி ஜிந்தாவை தொடர்ந்து நடிகர் மோகன் லாலும் ஐ.பி.எல் அணியில் ஒன்றை வாங்க உள்ளார் என்ற தகவல் தற்போது காட்டுத்தீ போல பரவ ஆரம்பித்து விட்டது. ஐ.பி.எல் விதிப்படி புதிய அணியை வாங்க முதலில் ஆர்வமுள்ளவர்கள் யார் விண்ணப்பம் பெறப்படும். அவர்களில் யார் அதிக தொகை கோருகிறார்களோ அவர்களுக்கு புதிய அணி விற்கப்படும்.