ஹாட்ரிக் எடுத்த பின் சம்பள உயர்வு கேட்ட அமித் மிஸ்ரா - சேவாக் வெளியிட்ட ரகசியம்!

ஹாட்ரிக் எடுத்த பின் சம்பள உயர்வு கேட்ட அமித் மிஸ்ரா - சேவாக் வெளியிட்ட ரகசியம்!

வீரேந்தர் சேவாக்

2008ம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக சேவாக் தலைமையில் ஆடிய போது தான் அமித் மிஸ்ரா முதன் முதலாக ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

  • Share this:
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று மாலை போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வலுவான மும்பையை வீழ்த்தி டெல்லி அணி 3வது வெற்றியை ருசித்தது. வலுவான பேட்டிங் ஆர்டர் கொண்ட மும்பை அணியை 137 ரன்களில் சுருட்டினர் டெல்லி பவுலர்கள். மும்பையின் அபாயகரமான பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா, கிரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா மற்றும் இஷான் கிஷான் ஆகிய நால்வரின் விக்கெட்களை வீழ்த்தி பிரமாதப்படுத்தினார் சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா.

ஐபிஎல் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ள அமித் மிஸ்ரா, இதுவரை 3 ஹாட்ரிக் சாதனைகள் படைத்து ஐபிஎல்-ல் அதிக ஹாட்ரிக் சாதனைகள் நிகழ்த்திய வீரராகவும் திகழ்கிறார்.

இந்நிலையில் அமித் மிஸ்ரா குறித்து கிரிக் இஃன்போ தளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரும் டெல்லி அணியின் முன்னாள் கேப்டனுமான வீரேந்தர் சேவாக்.

அமித் மிஸ்ரா உடனான தனது அனுபவங்களை பகிர்ந்த சேவாக், “2008ம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக சேவாக் தலைமையில் ஆடிய போது தான் அமித் மிஸ்ரா முதன் முதலாக ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

அமித் மிஸ்ரா


அமித் மிஸ்ரா மிகவும் அமைதியானவர். பிற வீரர்களிடம் பேசும் போது கூட மென்மையாக பேசுவார். அனைவரிடமும் மிக விரைவாகவே பழகிவிடுவார், அதனாலேயே அனைவருக்கும் பிடித்த நபராக அவர் இருந்தார். அவருடைய பந்தில் பேட்ஸ்மேன் அடித்து ஆடினால் அதற்காக மற்ற வீரர்கள் வருத்தப்படுவார்கள். அவர் விக்கெட் வீழ்த்தினால் அனைவருமே சந்தோஷப்படுவார்கள்.

அவர் முதல் முறையாக ஹாட்ரிக் சாதனை செய்த போது எனக்கு நினைவிருக்கிறது. அவரிடம் உனக்கு என்ன வேண்டும் என கேட்டேன். அதற்கு வீரு பாய் எனது சம்பளத்தை உயர்த்தி தாருங்கள் என அமித் மிஸ்ரா என்னிடம் கூறினார்.

மேலும் சில ஹாட்ரிக் சாதனைகள் படைத்த பிறகு தற்போதும் சம்பள உயர்வு கேட்கும் அளவிற்கு இல்லாமல் அதிக பணத்தை அவர் ஊதியமாக பெறுவார் என நம்புகிறேன் என சேவாக் கூறினார்.

மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில் அமித் மிஸ்ராவின் செயல்பாடு குறித்து சேவாக் கூறுகையில், இந்த ஐபிஎல் தொடரில் அமித் மிஸ்ரா சிறந்த பவுலர் என நான் கூறுவேன். நேற்றைய போட்டியில் பவர் பிளேயின் போது சூரியகுமார் யாதவ் அமித் மிஸ்ராவின் பந்து வீச்சில் சில பவுண்டரிகளை ஓட விட்டார், இதனையடுத்து அமித் மிஸ்ரா சற்று பதட்டமாக இருந்தார். பவர் பிளே முடிந்து ஃபீல்டர்கள் அதிகமாக பின்களத்தில் இருந்த போது அமித் மிஸ்ராவின் பலம் கூடி பேட்ஸ்மேன்கள் பதற்றமடைந்தனர்.

ரோகித் சர்மா மட்டும் தனது இயல்பான ஆட்டத்தை ஆடியிருந்தால் 60 முதல் 70 ரன்கள் வரை எடுத்திருப்பார். ஆனால் அமித் மிஸ்ரா அவரை கட்டுப்படுத்தி ஆட்டமிழக்கச் செய்தார். ஹர்திக் பாண்டியாவை அவர் சந்தித்த தனது முதல் பந்திலேயே ஆட்டமிழக்கச் செய்து வியக்க வைத்தார். ஸ்பின்னர்களுக்கு எதிராக நன்றாக விளையாடக் கூடியவர் ஹர்திக் என்பது மிஸ்ராவுக்கு தெரியும், ஆனால் ஹர்திக் பாண்டியாவின் பலம் எது என அறிந்து அதற்கு பதிலாக அவரை ஆடச் செய்து விக்கெட்டை வீழ்த்தினார் அமித் மிஸ்ரா. எந்த பேட்ஸ்மேன் ஆடுகிறார் என்பதையெல்லாம் அவர் பார்ப்பதில்லை பந்துவீச்சில் மாற்றங்களை செய்து சவால்களை சுமத்துகிறார்” என அமித் மிஸ்ரா குறித்து பல தகவல்களை சேவாக் பகிர்ந்தார்.
Published by:Arun
First published: