தாங்கள் தான் எப்போதும் சிறந்த ஐபிஎல் அணி என்பதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கின்றது. இத்தனை சீசன்களில் கடந்த ஆண்டு ஒரே ஒரு முறை மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனது சென்னை அணி. ஆனால் அடுத்த ஆண்டே தோல்விப்பாதையில் இருந்து மீண்டெழுந்து இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றி வலிமையான அணி என்பதை மெய்ப்பித்திருக்கிறது சிஎஸ்கே.
சென்னை அணியின் வெற்றிக்காக பலரும் ருதுராஜ் கெய்க்வாட், ஃபாப் டுப்ளெசிஸ், ரவீந்திர ஜடேஜா மற்றும் தீபக் சாஹர் ஆகியோரை புகழ்ந்து வருகின்றனர். ஆனால் ஒருவர் மட்டும் இந்த ரேடாரில் சிக்காமல் இருக்கிறார் என்றால் அது ஷர்துல் தாக்கூர் தான். வேகப்பந்துவீச்சாளரான ஷர்துல் தாக்கூர் 15 போட்டிகளில் 21 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார். இதன் மூலம் சென்னை அணிக்காக இந்த சீசனில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக தனது கேரியரில் மேல்நோக்கி சென்று கொண்டிருக்கிறார் அவர்.
தாக்கூரின் ஆட்டம் முன்னாள் வீரர் சேவாக்கை மிகவும் கவர்ந்திருக்கிறது. தாக்கூரின் ஆட்டம் சிஎஸ்கே அணியில் இணைந்த பின்னர் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தலைமையின் கீழ் மெருகேறியிருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் சிஎஸ்கே அணிக்குள் தாக்கூர் வந்த பின்னர் புதிய இலை போல அவர் துளிர்த்திருக்கிறார். சிஎஸ்கே அணிக்காக ஷர்துல் தாக்கூர் மொத்தம் 55 விக்கெட்கள் வீழ்த்தியிருக்கிறார்.
Also read:
சமோசாவுக்காக அடிதடியில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் – வீடியோ!
சேவாக் கூறுகையில், ஷர்துல் தாக்கூர் தான் இந்த சீசனில் சிஎஸ்கேவுக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர். 11வது ஓவரில் பந்துவீச வந்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார். சிஎஸ்கேவில் தாக்கூர் இணைந்த பின்னர் அவரின் தலையெழுத்தே மாறிவிட்டது.
2018ம் ஆண்டு தாக்கூர் சிஎஸ்கேவில் இணைந்தார். அதற்கு முன்னரே அவர் இந்திய அணிக்காக ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். சிஎஸ்கேவில் இணைவதற்கு முன்னர் அணியில் அவருக்கு நிலையான இடம் கிடையாது. ஆனால் தற்போது ஒரு நாள், டி20, டெஸ்ட் அணியிலும் கூட இடம்பிடித்துவிட்டார். நான் ஏற்கனவே சொன்னது போல அவர் சிஎஸ்கேவில் இணைந்த பின்னர் அவரின் தலையெழுத்தே மாறிவிட்டது. அதற்காக அவர் சிஎஸ்கேவில் இணைந்தது மட்டுமே காரணம் அல்ல, அவர் சிறப்பாக விளையாடி விக்கெட்களையும் வீழ்த்திருப்பதாலும்” என்றார் சேவாக்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.