இந்திய அணியின் அடுத்த கேப்டன் ரிஷப் பந்த்: சொல்கிறார் பாகிஸ்தான் வீரர்

ரிஷப் பந்த்

இந்திய அணியின் அடுத்த கேப்டன் ரிஷப் பந்த் தான் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    விராட் கோலிக்கு அடுத்ததாக இந்திய அணியை தலைமையேற்று வழிநடத்தும் திறமை ரிஷப் பந்த்திடம் உள்ளது எனவே அவர்தான் அடுத்த இந்திய கேப்டன் என்கிறார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட்.

    ஐபிஎல் 2021 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் காயம் காரணமாக விலக, கேப்டன்சி பொறுப்பு ரிஷப் பந்த்திற்கு அளிக்கப்பட்டது, அவரும் டெல்லி அணியை ஐபிஎல் அணியை ஐபிஎல் அட்டவணையில் முதலிடத்துக்கு கொண்டு சென்றார். ஐபிஎல் கிரிக்கெட் கொரோனா இரண்டாம் அலை பரவலால் நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் கூறும்போது, “ரிஷப் பந்த்தின் உள்நாட்டு கிரிக்கெட் சாதனைகள் பற்றிய விவரங்கள் எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் பார்த்தவரையில் டெல்லி கேப்பிடல்ஸில் அவருக்கு கேப்டன்சி கொடுக்கப்பட்டுள்ளது என்றால், அவரை வைத்து சிலபல திட்டங்களை பிசிசிஐ வகுத்து வருகிறது என்றே கருதுகிறேன்.

    கோலி இன்னும் இளம் வீரர்தான், அவரும் இன்னும்8-9 ஆண்டுகள் ஆடுவார்.

    பந்த்துடன் சேர்த்து ரோகித் சர்மாவும் மிகச்சிறந்த கேப்டன்சி திறமை கொண்டவர்தான். கேப்டனாக எனக்கு ரோகித் சர்மாவை மிகவும் பிடித்திருக்கிறது.

    மேலும் சமீபமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அஜிங்கிய ரகானே கேப்டன்சி செய்தார். அவர் கேப்டன்சியில் ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலிய மண்ணில் 2வது முறையாக தொடர்ச்சியாக வீழ்த்தி இந்திய அணி சாதனை புரிந்துள்ளது.

    உத்தி ரீதியாக ரகானே சிறந்த கேப்டன், மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் ரகானே முடிவுகளை எடுத்ததைப் பார்க்க முடிந்தது” இவ்வாறு கூறினார் சல்மான் பட்.

    அதே போல் இந்திய அணியில் பும்ராவின் இடம் பாகிஸ்தான் அணியில் வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரம் போன்றது. பும்ராவின் ஸ்லோ பந்துகள், பவுன்சர்கள், யார்க்கர்கள் ஆகியவற்றின் மூலம் இந்திய அணியின் சொத்தாகத் திகழ்கிறார் பும்ரா என்று சல்மான் பட் புகழாரம் சூட்டியுள்ளார்.
    Published by:Muthukumar
    First published: