சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான்: கே.எல்.ராகுலின் பஞ்சாப் - இரு அணிகளின் பலம் என்ன?

சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான்: கே.எல்.ராகுலின் பஞ்சாப் - இரு அணிகளின் பலம் என்ன?

கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் இன்றைய போட்டியில் மோதவுள்ளன.

 • Share this:
  இந்தியாவில் கொண்டாடப்பட்டு வரும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் இன்றைய ஆட்டத்தில் சஞ்சு சாம்ஷனின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி – கே.எல்.ராகுலின் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்குமிடையிலான இந்த ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, புதிய கேப்டனான சஞ்சு சாம்சன் தலைமையில் தொடரை வெற்றியுடன் தொடங்க தீவிர முனைப்பில் உள்ளது அந்த அணி. கடந்த சீசனில் தொடர் தோல்விகளால் கடைசி இடம் பிடித்த ராஜஸ்தான் அணி இம்முறை ஆரம்பத்திலிருந்தே வெற்றியை வசப்படுத்த போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இளம் வீரர் ஜெய்ஸ்வா இந்த சீசனில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இவருடன் சேர்ந்து அதிரடி ஆட்டக்காரர்களான பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் பேட்டிங்கில் அசத்த காத்திருக்கின்றனர். மிடில் ஆர்டரில் டேவிட் மில்லர் மற்றும் ராகுல் திவாட்டியா கைகொடுக்கவுள்ளனர்.

  பந்துவீச்சில் ஆர்ச்சர் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. கடந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. உனந்த்கட், துபே மற்றும் டை ஆகியோர் வேகத்தில் மிரட்டவுள்ளனர். அதே போல் சுழற்பந்துவீச்சில் ஸ்ரேயஸ் கோபால், திவாட்டியா கூட்டணியை அந்த அணி முழுமையாக நம்பியுள்ளது.

  பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரை புதிய வீரர்களுடனும், புதிய பெயருடனும் இந்த தொடரில் களமிறங்குகிறது. கடந்த சீசனின் ஆரம்பத்தில் சொதப்பிய பஞ்சாப், இரண்டாம் பாதியில் ஆதிக்கம் செலுத்தியது. தொடர்ச்சியாக 5 போட்டிகள் வென்று அசத்தியதுடன் சென்னை அணியின் பிளே ஆப் வாய்ப்பை தகர்த்தலிலும் முக்கியப்பங்கு வகித்தது. கேப்டன் ராகுல் மற்றும் மயங் அகர்வால் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக எதிரணியின் பந்துவீச்சை பதம்பார்க்கவுள்ளனர். யுனிவர்செல் பாஸ் கிறிஸ் கெய்லின் சிக்ஸ் மழையை பார்க்க ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். டி 20 உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் டேவிட் மலான், பூரன், சர்ப்ராஸ் கான், தமிழக வீரர் ஷாரூக் கான் ஆகியோர் பேட்டிங்கில் அசத்தவுள்ளனர்.

  பந்துவீச்சில் இந்திய வீரர் முகமது சமியை நம்பியே ஒட்டுமொத்த அணியும் உள்ளது. இவருடன் ஜோர்டன், மற்றும் ஹென்ரிக்ஸ் பலம் சேர்க்கின்றனர். சுழற்பந்துவீச்சில் தமிழக வீரர் முருகன் அஸ்வின் மற்றும் பிஸ்னால் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைக்கவுள்ளனர். இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் போட்டி விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

  இரு அணிகளும் இதற்கு முன் 21 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர் இதில் ராஜஸ்தான் அணி 12 முறையும், பஞ்சாப் அணி 9 முறையும் வெற்றியை வசப்படுத்தியுள்ளனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   
  Published by:Karthick S
  First published: