ஐபிஎல் தொடர் என்பது கிரிக்கெட்டை பணம் கொழிக்கும் இடமாக மாற்றிய ஒரு தொடர் ஆகும். இதனால் பணம் புகுந்த இடம் ரணகளமாகும் என்பதற்கு உதாரணமாக அன்று ரிஷப் பண்ட் நோ-பால் தரவில்லை என்று அசிங்கமாக நடந்து கொண்டு வீரர்களை திரும்பி அழைத்த சம்பவம் நடந்தது, இதற்கு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது, ஆனால் இதே காரியத்தை தோனி முன்பு செய்தார், ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் போது இறங்கி நடுவரிடம் வாக்குவாதம் புரிந்தார் . ஆனால் அவருக்கு ஃபைன் இல்லை, நேற்று ஆர்சிபி, ராஜஸ்தான் போட்டியில் ரியான் பராக்- ஹர்ஷல் படேல் இடையே அசிங்கமான மோதல் ஏற்பட்டது.
புனேயில் இன்று நடைபெற்ற 39-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.ரியான் பராக் சிறப்பாக விளையாடி 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது.
ஆனால் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 29 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் பெங்களூரு அணியின் கடைசி ஓவரை ஹர்ஷல் பட் டேல் வீசினார். இந்த ஓவரில் பராக் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடித்தார். என்ன கோபமோ தெரியவில்லை, இன்னிங்ஸ் முடிந்து சென்ற போது ஹர்ஷல் படேல் திடீரென ரியான் பராக்கிடம் சென்று வார்த்தை மோதலில் ஈடுபட்டார்.
பின்னர் ராஜஸ்தான் அணியை சேர்ந்த உதவியாளர் ஒருவர் அவரை தடுத்து நிறுத்தினார். இந்த மோதலுக்கான காரணம் தெரியவரவில்லை. களத்தில் மோதல் ஏற்படுவது அந்தக் கணத்தில் ஏற்படும் உஷ்ணத்தினால் என்று விட்டு விடலாம், ஆனால் ஆட்டம் முடிந்து எதிரணி வீரரிடம் போய் வம்பிழுப்பது தெரு கிரிக்கெட் தரமாகும்.
ஐபிஎல் பணம் உறவுகளை முறித்து விடும், சக வீரர்களுக்கு இடையே பொறாமை உணர்வையும் போட்டி மனப்பான்மையையும் பகைமையையும் வளர்த்து விடும் என்று அன்று ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கூறியது எவ்வளவு உண்மையாகி வருகிறது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.