நடந்து முடிந்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடரில் ஒரு வீரர் பெயர் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூற முடியுமென்றால் அது ரிஷப் பந்த் தான் என்றும் தனது ஆரம்ப கால அதிரடி பேட்டிங்கை நினைவூட்டுவதாகவும் முன்னாள் அதிரடி மன்னன் விரேந்திர சேவாக் ரிஷப் பந்த்துக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
டெல்லி அணியின் கேப்டனாகவும் அவரை ரிக்கி பாண்டிங் தற்போது தேர்வு செய்து கூடுதல் பொறுப்பை அளித்துள்ளார்.
அதே போல் ஒருநாள் கிரிக்கெட்டில் முழு 50 ஓவர்களையும் அவரால் ஆட முடிந்ததென்றால் அடுத்த பெரிய சூப்பர் ஸ்டாராக ரிஷப் பந்த் எழுவதை யாரும் தடுக்க முடியாது என்கிறார் சேவாக்.
ரிஷப் பந்த் இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 40 பந்துகளில் 77 ரன்களையும் 3வது ஒருநாள் போட்டியில் 62 பந்துகளில் 78 ரன்களையும் விளாசினார்.
இந்நிலையில் கிரிக்கெட் ஊடகம் ஒன்றில் சேவாக் கூறும்போது, “இந்தத் தொடரில் மிகப்பெரிய பாசிட்டிவ் அம்சம் ரிஷப் பந்த்தின் அவதாரம்தான். மிடில் ஓவர்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் வருகிறார், 2வது பவர் ப்ளேயை சரியாகப் பயன்படுத்துகிறார்.
அவர் இந்த அணியில் நிரந்தரமாக இடம்பெற வேண்டும் ஏனெனில் அவரைப்போன்ற பாசிட்டிவ் மைண்ட்-செட் உள்ள வீரர்கள் அரிது. அவர் என் ஆரம்ப நாட்களை நினைவு படுத்துகிறார். மற்றவர்கள் கூறுவதைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை. அவர் தன் பாணியில் ஆடுகிறார்.
அதே போல் அவர் முழு 50 ஒவர்களிலும் நின்று ஆடக் கற்று கொண்டு விட்டால் கடைசி வரை நிற்கத் தொடங்கி விட்டால், தனது 70-80களை சதமாக மாற்றக் கற்றுக் கொண்டு விட்டால் இந்தியாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் ரிஷப் பந்த் தான். பிட்ச் நன்றாக உள்ளது, மைதானம் சிறியது. மந்தமான பிட்ச்களில் பெரிய மைதானங்களிலும் அவர் இதே போன்று ஆடத்தொடங்கி விட்டால் அவரை அசைக்க முடியாது, இதையும் அவர் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் ரன்களை அடிக்க முடியாத போது தன் பேட்டிங்கில் ஏதோ ஒன்றை அவர் மாற்றியுள்ளார், அதனால்தான் டெஸ்ட் போட்டிகளிலும் அவரால் ரன்கள் விளாச முடிந்துள்ளது. ஆனால் ஒருநாள், டி20 போட்டிகளில் 50 ஓவர், 20 ஒவர்களை அவர் ஆடிவிட்டால் நிச்சயம் அவர்தான் அடுத்த வெள்ளைப்பந்து சூப்பர் ஸ்டார் என்று ரிஷப் பந்த் குறித்து புகழ்ந்து கூறினார் விரேந்திர சேவாக்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.