ஐ.பி.எல் 2021-ம் ஆண்டு தொடர்வரை ஐ.பி.எல் அணிகளில் மிக வலுவான அணிகளாக
சென்னை அணியும், மும்பை அணியும் இருந்துவந்தன. ஆனால், இந்தமுறை அது அப்படியே தலைகீழாக மாறியது. சென்னை அணியும், மும்பை அணியும் கடைசி இரண்டு இடங்களுக்கு சண்டை போடும் நிலை ஏற்பட்டது. சென்னை அணியைப் பொறுத்தவரையில் யாரும் எதிர்பாராத வகையில் இந்தமுறை சென்னை அணி ஜடேஜா தலைமையில் களமிறங்கியது. சென்னை அணியில் ஆல் ரவுண்டராக கலக்கும் ஜடேஜா இந்தமுறை கேப்டனாக ஜொலிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், மாறாக ஜடேஜா கேப்டனாக மட்டுமல்ல, ஆல்ரவுண்டராகவும் செயல்பட தடுமாறினர். அனைத்து போட்டிகளிலும் பேட்டிங்கிலும், ஃபீல்டிங்கிலும் சொதப்பும் சூழல் இருந்தது. கேப்டனாகவும் அவர் சரிவர செயல்படவில்லை. விளைவு, சென்னை அணி தொடர் தோல்விகளை எதிர்கொண்டது. அதனையடுத்து, ஜடேஜா கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். தோனியே மீண்டும் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டுவருகிறார்.
அதனையடுத்து, கடந்த மே 4-ம் தேதி பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கேட்ச் பிடிக்கும்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. அதனையடுத்து, மே 8-ம் தேதி டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அவர் அணியில் இடம்பெறவில்லை. இந்தநிலையில், காயம் காரணமாக இந்த ஐ.பி.எல் தொடரிலிருந்து ஜடேஜா விலகுகிறார் என்று சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அணி நிர்வாகத்தின் மீது ஜடேஜா அதிருப்தியில் உள்ளதாகவும் செய்திகள் பரவிவருகின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.