• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ரஜினி, ருதுராஜ்... சென்னைக்கு வந்து சூப்பர் ஸ்டாரான கெய்க்வாட்ஸ்!

ரஜினி, ருதுராஜ்... சென்னைக்கு வந்து சூப்பர் ஸ்டாரான கெய்க்வாட்ஸ்!

ரஜினி - ருதுராஜ்

ரஜினி - ருதுராஜ்

மகாராஷ்டிராவில் இருந்து சென்னைக்கு போனாலே ரஜினி, ருதுராஜ் போல் சூப்பர் ஸ்டார் ஆகிடலாம் என மும்பை ரசிகர்கள் இணையத்தில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

  • Share this:
ஐபிஎல் 2021 தொடரின் ராஜஸ்தான் அணிக்கு எதிரான 47-வது லீக் போட்டியில் சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசி ரசிகர்களை உற்சாகமடைய செய்தார். இந்தப் போட்டியில் சிஎஸ்கே தோல்வியடைந்தாலும் ருதுராஜின் ஆட்டம் யாராலும் மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி சதமடித்த ருதுராஜ் தற்போதைய டிரெண்டிங்.

மகாராஷ்டிராவின் புனேவில் பிறந்த ருதுராஜ் கெய்வாட் 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின் போது அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்டார். கடந்தாண்டு ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே லீக் சுற்றுகளுடன் வெளியேறியது. சிஎஸ்கே அணி சிறப்பான தொடக்க வீரர்கள் இல்லாமல் தடுமாறி வந்தது. டூ-பிளெசிஸ் சிறப்பாக விளையாடினாலும் அவருக்கு கைகொடுக்கும் விதமாக மற்றொரு தொடக்க வீரர் இல்லாமல் இருந்தார். ஷேன் வாட்சன் ஃபார்மில் இல்லாத காரணத்தால் அவருக்கு பதிலாக சாம் கரணை தொடக்க வீரர்களாக களமிறக்கி பார்த்தார் தோனி. ஆனால் எதுவும் கைகொடுக்கவில்லை.

சிஎஸ்கே ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு வாய்ப்பில்லை என்ற நிலைக்கு வந்த பின் மற்ற வீரர்களை களமிறக்க முடிவு செய்தார் கேப்டன் தோனி. அப்போது தான் ருதுராஜ் கெய்க்வாடை மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஒபனராக களமிறக்கினார். ஆனால் அந்த போட்டியில் ருதுராஜ் டக்-அவுட் ஆனார். ஆனால் ஆர்சிபி அணிக்கு எதிரான அடுத்த போட்டியிலும் ருதுராஜ் ஓபனராக இறங்க தோனி வாய்ப்பு கொடுத்தார். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட ருதுராஜ் 65 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து சிஎஸ்கே அணியை வெற்றி பெற செய்தார்.

இதையடுத்து கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 72 ரன்களும், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 62 ரன்களும் விளாசினார். தொடர்ந்து 3 போட்டிகளில் அரைசதமடித்து ருதுராஜ் தன்னை சிறந்த ஓபனராக நிரூபித்துக் காட்டினார். இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு சரியான ஓபனரை தோனி கண்டுபிடித்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பது ருதுராஜ் - டூபிளெசிஸ் ஒபனிங் தான். ஒபனிங்கில் ருதுராஜின் ஆட்டம் நாளுக்கு நாள் மெருகேறி கொண்டே இருக்கிறது.

Also Read : சிஎஸ்கே 10 வீரர்களுடன் விளையாடுகிறது... தோனி பேட்டிங் ஃபார்ம் குறித்து முன்னாள் வீரர் கருத்து

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் ருதுராஜ் தனது முதல் சதத்தை ஐபிஎல் அரங்கில் பதிவு செய்துள்ளார். மேலும் ஐபிஎல்  2021 தொடரில்அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்து ஆரஞ்ச் கேப்பையும் கைப்பற்றி உள்ளார். கெய்க்வாட் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 508 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் 489 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.



இந்நிலையில் ருதுராஜை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஒப்பிட்டு ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். மகாராஷ்டிராவில் இருந்து சென்னைக்கு வந்து சூப்பர் ஸ்டாராகி உள்ளார் ருதுராஜ் கெய்கவாட் என்றுள்ளனர். இதில் சிறப்பு என்னவென்றால் நடிகர் ரஜினிகாந்த் இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்பது தான். இதனால் ரஜினியை போல் ருதுராஜ் சென்னை வந்து சூப்பர் ஸ்டாரான கெய்க்வாட் என்று பதிவிட்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: