#PBKSvMI | மும்பை பேட்டிங் மீண்டும் சொதப்பல்.. பஞ்சாப் அணிக்கு 2வது வெற்றி..

#PBKSvMI | மும்பை பேட்டிங் மீண்டும் சொதப்பல்.. பஞ்சாப் அணிக்கு 2வது வெற்றி..

#PBKSvMI

20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது மும்பை இந்தியன்ஸ்.

  • Share this:
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு நடைபெற்ற 17வது ஐபிஎல் போட்டியில் ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி, மும்பை இந்தியன்ஸுக்கு அதிர்ச்சியளித்தது.

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது பஞ்சாப் அணி. இதனையடுத்து ரோஹித் சர்மா, குவிண்டன் டி காக் இருவரும் களமிறங்கினர். சேப்பாக்கம் மைதானத்துக்கு குவிண்டன் டி காக் சுத்தமாக ராசியே இல்லை. முதல் ஓவரிலேயே அவுட் ஆக வேண்டிய நிலைமையில் ரிவ்யூ மூலம் தப்பிப் பிழைத்தது தொடக்க ஜோடி, இருப்பினும் அடுத்த ஓவரிலேயே விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார் குயிண்டன் டி காக். அவரின் சொதப்பல் இந்த போட்டியிலும் தொடர்ந்தது.

இதுவரை 4 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள டி காக் அவற்றில் முறையே 2, 40, 2 மற்றும் 3 ரன்கள் வீதம் எடுத்துள்ளார்.

ரோகித் சர்மா கேப்டனுக்கு உரிய பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். ரோகித் 52 பந்துகளில் 2 சிக்ஸ், 5 பவுண்டரியுடன் 63 ரன்களை குவித்தார். சூர்யகுமார் யாதவ் தன் பங்கிற்கு 27 பந்துகளில் 33 ரன்களும். கிரன் பொல்லார்ட் ஆட்டமிழக்காமல் 12 பந்துகளில் 16 ரன்களும் எடுத்தனர். ஹர்திக் பாண்டியா இம்முறையும் சோபிக்கத் தவறினார். அவர் ஒரு ரன் மட்டுமே எடுத்து மும்பை ரசிகர்களை ஏமாற்றமளித்தார். ரவி பிஷ்னோய், முகமது ஷமி, ஹென்ரிக்ஸ், தீபக் ஹூடா ஆகியோரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சில் மும்பை அணி வீரர்கள் ரன் சேர்க்க திணறினர்.

இறுதியில் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது மும்பை இந்தியன்ஸ்.

இதனை தொடர்ந்து 132 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் கூட்டணி பொறுப்புடன் விளையாடினர். 8வது ஓவரில் ராகுல் சாஹரின் பந்துவீச்சில் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் மயங்க் அகர்வால். இதன் பின்னர் கே.எல்.ராகுலுடன் கைகோர்த்த கிறிஸ் கெய்ல் மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒன்றிரண்டு ரன்களாக சேர்த்தது இந்த ஜோடி.

16வது ஓவரில் 100 ரன்களை எட்டியது பஞ்சாப் அணி, அத்துடன் கிறிஸ் கெய்ல், ராகுல் இணை 50 ரன்கள் பார்னர்ஷிப்பும் வந்தது. அடுத்த ஓவரிலேயே அரை சதத்தை எட்டினார் கே.எல்.ராகுல்.

ஆட்டம் உப்பு சப்பில்லாமல் மந்தமாக நகர்ந்து கொண்டிருந்த நேரத்தில் அதிரடி நாயகன் கிறிஸ் கெய்ல் அதிரடிக்கு மாறினார். சிக்ஸ், பவுண்டரி அடித்தார். அவரை பின் தொடர்ந்து கே.எல்.ராகுலும் அதிரடிக்கு மாறி ட்ரெண்ட் பவுல்டின் ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸரும், பவுண்டரியும் விளாசி 14 பந்துகள் மிச்சம் இருக்கையில் பஞ்சாபுக்கு வெற்றி தேடி தந்தார்.

17.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியசத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி, மும்பை இந்தியன்ஸுக்கு அதிர்ச்சி அளித்தது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் இருந்த பஞ்சாப் கிங்ஸ் 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறியது. மும்பை அணி 4வது இடத்தில் நீடிக்கிறது.
Published by:Arun
First published: