IPL 2021: DC vs SRH | சூப்பர் ஓவர் வரை கொண்டு சென்ற அபார வில்லியம்சன் இன்னிங்ஸ் வீண்: சூப்பர் ஓவரில் டெல்லி அபார வெற்றி

IPL 2021: DC vs SRH | சூப்பர் ஓவர் வரை கொண்டு சென்ற அபார வில்லியம்சன் இன்னிங்ஸ் வீண்: சூப்பர் ஓவரில் டெல்லி அபார வெற்றி

சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற டெல்லி கேப்டன் ரிஷப் பந்த்.

ஐபிஎல் 2021-ன் முதல் சூப்பர் ஓவர் பினிஷை நேற்று சென்னையில் டெல்லி கேப்பிடல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி கண்டது, கடைசியில் ரிஷப் பந்த், ஷிகர் தவான் சூப்பர் ஓவரில் தேவையான 8 ரன்களை எடுத்து வெற்றி பெற்றனர்.

  • Share this:
ஐபிஎல் 2021-ன் முதல் சூப்பர் ஓவர் பினிஷை நேற்று சென்னையில் டெல்லி கேப்பிடல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி கண்டது, கடைசியில் ரிஷப் பந்த், ஷிகர் தவான் சூப்பர் ஓவரில் தேவையான 8 ரன்களை எடுத்து வெற்றி பெற்றனர்.

முன்னதாக முழு நேர ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இரு அணிகளும் 159 ரன்களில் சமன் ஆனதையடுத்து சூப்பர் ஓவருக்குச் சென்றது.

சூப்பர் ஓவரில் பேர்ஸ்டோவை இறக்காமல் தவறிழைத்த டேவிட் வார்னர்: 

இதில் 211% ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்த ஜானி பேர்ஸ்டோவை இறக்காமல் டேவிட் வார்னர், வில்லியம்சன் இறங்கி பெருந்தவறு நடந்தது, முழு இன்னிங்சில் கடும் வியர்வை, களைப்புடன் 66 நாட் அவுட் என்று பெவிலியன் சென்ற வில்லியம்சனை தன்னுடன் இறக்கினார் வார்னர்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி சூப்பர் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரபாடாவிடம் கொடுக்காமல் அக்சர் படேலிடம் கொடுத்தது. இவர் இப்போதுதான் கோவிட்டிலிருந்து மீண்டு வந்துள்ளார். ஆனால் அக்சர் படேல் பிரமாதமாக வீசினார் வார்னர் மட்டைக்கு சிக்கவில்லை, கேன் வில்லியம்சன் மட்டுமே மீண்டும் ஒரு பவுண்டரி அடித்தார். அக்சர் படேல் அட்டகாசமாக வீசி 7 ரன்களையே விட்டுக் கொடுத்தார். இது 8 ரன்களாக இருந்திருக்க வேண்டும், ஆனால் வார்னர் ஓட்டத்தில் ஒரு ரன்னை நடுவர் மிகக் கூர்மையாக அவதானித்து குறைத்தார். இல்லையெனில் 8 ரன்கள் ஆகியிருக்கும். இது ஒரு சர்ச்சையானாலும் சொல்வதற்கில்லை.

8 ரன்கள் சூப்பர் ஓவர் வெற்றி இலக்கை எதிர்த்து ஷிகர் தவான், ரிஷப் பந்த் இறங்கினர். ரஷீத் கான் சூப்பர் ஓவரை வீசினார். பந்த் சிங்கிள் எடுத்தார், பிறகு ஷிகர் தவன் லெக் பை சிங்கிள் எடுத்தார். 3வது பந்தில் ரிஷப் பந்த் மிகப்பிரமாதமாக ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி தேர்ட் மேன் பவுண்டரிக்கு அனுப்பினார். கடைசி 2 பந்துகளில் 2 லெக் பைகள் வர டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஜானி பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன் அபாரம்:

முன்னதாக 160 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்துக் களமிறங்கிய சன் ரைசர்ஸ் தொடக்க வீரர்களான கேப்டன் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ, நிதானமாகத் தொடங்கி முதல் 2 ஓவர்களில் 10 ரன்களை எடுத்தனர். பிறகு பேர்ஸ்டோ புகுந்தார், ஸ்டாய்னிஸ் ஓவரில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சரையும் பிறகு அஸ்வினை ஒரு சிக்சரும் விளாசினார், ஆனால் 4வது ஓவரில் வார்னர் (6) ரன்களில் தேவையற்ற சிங்கிளில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

ஆனால் பேர்ஸ்டோவை கட்டுப்படுத்த முடியவில்லை, அக்சர் படேல் வந்தார் அவரை ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் வெளுத்தார் பேர்ஸ்டோ. 11 ரன்கள் வந்தது.



வார்னருக்குப் பிறகு இறங்கிய கேன் வில்லியம்சன் அமித் மிஸ்ரா ஓவரில் தொடர் பவுண்டரிகளை விளாசினார். பிறகு அஸ்வினை பிரமாதமாக ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினார். பேர்ஸ்டோ இடையில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 18 பந்துகள்ல் 38 ரன்கள் விளாசி அபார பவுலர் ஆவேஷ் கானிடம் வெளியேறினார்.

விராட் சிங் இறங்கி திணறி 14 பந்துகளில் 4 ரன்களையே எடுத்தார். ஆனால் ஹைதராபாத் அணி 10 ஓவர்களில் 80/2 என்று வசதியாகவே இருந்தது. விராட் சிங் வேதனை இன்னிங்சை ஸ்டாய்னிஸின் அபார கேட்சுக்கு ஆவேஷ் கான் முடித்து வைத்தார். கேதார் ஜாதவும், வில்லியம்சனும் மேலும் 2 பவுண்டரிகளை அடித்தனர், ஆனால் அபார அமித் மிஸ்ரா மிகப்பிரமாதமான பந்தில் கேதார் ஜாதவை வெளியேற்றி, மிகச்சரியான நேரத்தில் ஒரு விக்கெட்டைப் பெற்றுத் தந்தார்.

கடைசி 4 ஓவர்களில் 43 ரன்கள் தேவை என்ற நிலையில் அழுத்தம் அதிகரித்தது. 17வது ஓவரில் பிரமாதமாக அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார், அபிஷேக் சர்மா, அபாய ரஷீத் கான் இருவரையும் எல்.பி. ஆக்கி வெளியேற்றினார். விஜய் சங்கரும், வில்லியம்சனும் அமித் மிஸ்ரா ஓவரில் 11 ரன்களைச் சேர்த்தனர். கடைசி 2 ஓவர்களில் 28 ரன்கள் தேவை.

19வது ஓவரில் ஆவேஷ் கான் விஜய் சங்கரை பவுல்டு செய்தார். ஆனால் அதே ஓவரில் லெந்தில் பிழை செய்ய சுசித் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசினார்.

கடைசி ஓவரில் 16 ரன்கள் வெற்றிக்குத் தேவை. சுசித் மீண்டும் அற்புதமாக ரபாடாவை ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸ் விளாசினார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டம் டை ஆனது. வில்லியம்சன் 51 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். சுசித் 6 பந்துகளில் 14 ரன்கள் என்று அபார பங்களிப்பு செய்தார். டெல்லி தரப்பில் ஆவேஷ் கான் 3, அக்சர் படேல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 159/7 என்று ஸ்கோர் சமன் ஆனது.

டெல்லி அணிக்கு பிரமாதத் தொடக்கம் தந்த பிரித்வி ஷா:

சென்னை பிட்ச் 10 ஓவர்களுக்கும் மேல் தாங்காது, உடைந்து விடும், இதனை நன்றாகப் பயன்படுத்திய டெல்லி ஓபனர் பிரிதிவி ஷா, கலீல் அகமடின் முதல் ஓவரிலேயே 3 பிரமாத பவுண்டரிகளை விளாசினார். பிறகு சித்தார்த் கவுலை எக்ஸ்ட்ரா கவரில் அடித்த சிக்ஸ் பிரிதிவி ஷாவின் திறமைக்குச் சான்று. முதல் 6 ஓவர்களில் 51/0. ஸ்பின்னர்கள் வந்தனர், நேராக அடிப்பது சிரமமானது, பீல்டிங்கும் பரவலானது.



23 பந்துகளில் 39 ரன்களை வெளுத்த பிரிதிவி ஷா அடுத்த 16 பந்துகளில் 14 ரன்களையே எடுக்க முடிந்தது. கடைசியில் 53 ரன்களில் ரன் அவுட் ஆனார். ஷிகர் தவான் சுசித்தை 2 பவுண்டரிகள் விளாசினார். ஷிகர் தவானை அருமையாக பவுல்டு செய்தார் ரஷீத் கான். தவான் 28 ரன்களில் வெளியேறினார்.

ரிஷப் பந்த், ஸ்டீவ் ஸ்மித் இருவரும் கேட்ச் கொடுத்தனர், ஆனால் இரண்டையும் முறையே கலில் அகமட், சித்தார்த் கவுல் கோட்டை விட்டனர். பந்த் இதனைப் பயன்படுத்தி 27 பந்துகளில் 37 ரன்கள் விளாசினார். ஸ்லோ பந்துகளை சிக்சருக்கு அனுப்பினார், வேகப்பந்து வீச்சை ரிவர்ஸ் ஸ்கூப் ஆடி பவுண்டரிக்கு அனுப்பினார். ரஷீத் கானால் பந்த்துக்கு வீச முடியவில்லை, 8 பந்துகளில் அவரை 15 ரன்கள் விளாசினார். இருவரும் 58 ரன்களைச் சேர்க்க டெல்லி 159/4 என்று ஓரளவு டீசண்ட் ஸ்கோரை எட்டியது. இந்தப் பிட்சில் இதுவே கடினம்தான். ஆனால் விஜய் சங்கரின் ஸ்லோ பந்துகளை ஒன்றுமே செய்ய முடியவில்லை. இதையும் நாம் கூறியே ஆக வேண்டும்.

சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி கண்ட டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பிரிதிவி ஷா ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். பட்டியலில் சிஎஸ்கே 8 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்க, அதே 8 புள்ளிகளுடன் டெல்லி அணி 2ம் இடத்தில் உள்ளது.
Published by:Muthukumar
First published: