Home /News /sports /

கேப்டன் கூலின் புதிய அவதாரம்... சத்தமின்றி காய் நகர்த்தும் தோனி

கேப்டன் கூலின் புதிய அவதாரம்... சத்தமின்றி காய் நகர்த்தும் தோனி

தோனி

தோனி

Captain Cool Dhoni | சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரராக தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்ட மகேந்திர சிங் தோனி, புதிய அவதாரத்தில் விரைவில் களமிறங்குகிறார். அது குறித்த சிறப்புத் தொகுப்பை இப்போது காணலாம்,

  எதிரணியினர் வீசும் யார்க்கர் பந்துகளை சிதறடிக்க மகேந்திர சிங் தோனி பயன்படுத்திய ஆயுதம்தான் ஹெலிகாப்டர் ஷாட். மணிக்கற்றையை சுழற்றி, பந்தை பவுண்டரிக்கு விளாசுவதே இந்த ஷாட்டின் சிறப்பு. இதன் மூலமே கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு சொந்தக்காரர் ஆனார் தோனி.

  நீளமான முடி, ஆஜானுபாகுவான உடல் கட்டுடன் 2004ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்தார் தோனி. சரியான விக்கெட் கீப்பர் இல்லாமல், இந்திய அணி தடுமாறிய காலம் அது. அந்த தொடரில் பெரிய அளவில் சோபிக்காவிட்டாலும், அதனை தொடர்ந்து வந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் அதிரடியாக விளையாடி ரசிகர்களை கவர்ந்ததுடன் விக்கெட் கீப்பிங்கிலும் மின்னல் வேகத்தில் செயல்பட்டார்.

  இதன் பின்னர் தோனியின் கிரிக்கெட் வாழ்வில் அனைத்துமே ஏறுமுகம்தான். 50 ஓவர், டெஸ்ட் என அனைத்து வகை கிரிக்கெட்டிலும் முத்திரை பதித்தார். இதன் பிரதிபலனாக கேப்டன் பதவி அவரை தேடி வந்தது. அணியை சிறப்பாக வழிநடத்தி 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணிக்கு பெற்றுத்தந்த போது, ஒட்டுமொத்த நாடும் தோனியை கொண்டாடியது. ஆட்டத்தின் பரபரப்பான நிமிடங்களில் கூட, பதற்றம் அடையாமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றதால் Best Finisher, captain cool என்றெல்லாம் ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டார்.

  Also Read : தீபக் சாஹர் காயம் குறித்த அதிர்ச்சித் தகவல் - கடும் சிக்கலில் சென்னை சூப்பர் கிங்ஸ்

  இந்த நிலையில்தான் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மூலம், தமிழ்நாட்டுக்கும் - தோனிக்கும் இடையே பந்தம் உருவானது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட, "தல" என அவரை அன்போடு அழைக்க தொடங்கினர் தமிழக ரசிகர்கள். ரன் எடுக்காவிட்டாலும், களத்துக்கு வந்தால் மட்டுமே போதும் என்கிற அளவுக்கு ரசிகர்கள் அவரை கொண்டாடுகின்றனர். அதனால் தான் சென்னை தமது இரண்டாவது வீடு என்கிறார் தோனி.

  இந்நிலையில் வியாபாரியாக புதிய அவதாரம் எடுத்து சென்னையில் தனது பொ்ருளை விரைவில் சந்தைப்படுத்தவுள்ளார் தோனி. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், 7 Ink Brews நிறுவனத்தின் பங்குதாரராகவும், தூதுவராகவும் தோனி இருக்கும் நிலையில், Copter 7 என்ற பெயரில் அந்த நிறுவனம் கடந்த ஆண்டு பீர் ஒன்றை அறிமுகம் செய்தது. ரசிகர்களை கவரும் வகையில், தோனியின் பிரதான ஹெலிகாப்டர் ஷாட் மற்றும் அவரது ஜெர்சி எண் ஆகியவற்றை இணைத்து, பீருக்கு copter 7 என பெயரிடப்பட்டது.

  மும்பை, பெங்களூரு, கோவா மற்றும் ராஞ்சி உள்ளிட்ட நகரங்களில் விற்பனைக்கு வந்துவிட்ட கூல் கேப்டனின் Copter 7 CHILL BEER, தமிழ்நாட்டுக்கும் வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக தோனி பங்குதாரராக இருக்கும் 7 Ink Brews நிறுவனத்துடன், திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் குடும்பத்தினர் நிர்வகிக்கும் அக்கார்டு நிறுவனம் ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

  நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு பக்கம் தீவிரம் காட்டிக் கொண்டிருந்தாலும், தாம் பங்குதாரராக உள்ள நிறுவனத்தின் பீர் வகைகளை, சென்னையில் சந்தைப்படுத்த சத்தமின்றி காய் நகர்த்தி வருகிறார் கூல் தோனி.
  Published by:Vijay R
  First published:

  Tags: IPL 2022, MS Dhoni

  அடுத்த செய்தி