Dhoni 2.0 | தோனி புதிய பொறுப்பின் பின்னால் ஜெய் ஷா: பின்னணி சுவாரசியங்கள்

தோனி

தோனியை இந்திய டி20 உலகக்கோப்பை அணியின் ஆலோசகராக, நம்பிக்கை அறிவுரையாளராக நியமிக்கும் முடிவு 2 மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டது என்று தகவல்கள் வெளியாகின.

  • Share this:
    2 மாதங்களுக்கு முன்பே பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தோனியைத் தொடர்பு கொண்டு இதை வலியுறுத்தியதாகவும் தோனியும் ‘நிச்சயமாக, அணிக்கு எந்த வகையிலாவது பங்களிக்க விரும்புகிறேன்’ என்று பச்சைக் கொடி காட்டியதாகவும் தெரிகிறது. உலகக்கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட அணித்தேர்வு குறித்த விவாதங்களை மூழ்கடிக்கும் அளவுக்கு தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்ட செய்தி வலைத்தளங்களையும் விவாத மேடைகளையும் அலங்கரித்தது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். கடைசியாக 2019 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் ஆடி ரன் அவுட் ஆன போது, மார்டின் கப்திலின் அந்த பீல்டிங் இந்திய அணியின் இறுதிப் பாதையை அடைத்தது. இனி இந்திய அணிக்கு ஆடப்போவதில்லை என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி. கிரிக்கெட் உலகிற்கும் அதிர்ச்சி.

    ஆனால் இப்போது அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டது, உலகக்கோப்பையை இந்தியா வெல்ல இன்னொரு வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது. தோனியிடம் இந்தப் புதிய பொறுப்பு குறித்து ஜெய் ஷா 2 மாதங்களுக்கு முன்னரே பேச்சு வார்த்தைகளைத் தொடங்கியுள்ளார். இப்போதைய இந்திய அணி நிர்வாகம் உள்ளிட்ட மேல் மட்டத்துடன் தோனியை கொண்டு வருவது பற்றி பேச்சு வார்த்தை நடைபெற்றது. இது தொடர்பாக ஜெய் ஷா-தோனி உரையாடல் 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

    தோனி தனது ரோல் குறித்து தெளிவுபடுத்துமாறு ஜெய் ஷாவிடம் கோர அவர் விளக்க தோனி கடைசியில் முழு மனதோடு இதற்கு ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது. தோனியின் சம்மதம் கிடைத்ததோடு ஜெய் ஷா, ரவிசாஸ்திரி மற்றும் கேப்டன் கோலியிடம் பேசினார். இருவரும் ஒப்புக் கொண்டனர், குறிப்பாக சாஸ்திரிக்கு பயிற்சியாளராக கடைசி அசைன்மெண்ட் உலகக்கோப்பை டி20 தான்.

    தோனி, கோலி, ரவி சாஸ்திரியிடம் பேசி முடித்த பிறகே பிசிசிஐ சக நிர்வாகிகளிடம் பேசியுள்ளார் ஜெய் ஷா. ஆனால் இது ரவிசாஸ்திரிக்குப் பிறகு தோனியை தலைமைப் பயிற்சியாளர் ஆக்கும் முயற்சியெல்லாம் இல்லை, தோனி அதற்கு தயாராக இல்லை, ஐசிசி தொடர்கள், மேஜர் கிரிக்கெட் தொடர்களில் தோனி ஆலோசகராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

    2022, 2023-லும் 2 உலகக்கோப்பைகள் உள்ளன, இதில் தோனியின் அனுபவம் கைகொடுக்கும். தொடருக்கு மட்டுமான அசைன்மெண்ட்டாக தோனி வந்தாலும் கூட இந்திய அணி பெரும்பயனடையும் என்றே தெரிகிறது, ஏனெனில் தோனி தான் விளையாடும் காலத்திலேயே ஒரு பயிற்சியாளர் போல்தான் ஆடினார் என்பது வேறு விஷயம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Muthukumar
    First published: